`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?' - நய...
கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன லிமிட்டெடில் தலைவராக திமுக ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் இருந்து வந்தார். இதன் இயக்குநராக முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநராக வேலப்பன், கூடுதல் இயக்குநராக ரவிசந்திரன் ஆகியோர் இருந்தனர். இவர்களின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் கடந்த செப் 27 முதல் 30-ம் தேதி வரை இ-ஓட்டிங் முறையில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கும்பகோணம் பரஸ்பர ஸ்காய நிதி நிறுவத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் கல்யாணசுந்தரம், அன்பழகன், வேலப்பன், ரவிசந்திரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்து விட்டது. தவெக ஆளும் கட்சியாக இருந்து வரும் சூழலில் தவெக நிர்வாகிகள் அந்தப் பதவிகளைப் பெறுவதற்கு முயன்றனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் இ-ஓட்டிங் முறையில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் கல்யாணசுந்தரம் இருப்பதாக எதிர் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. திமுக சார்பில் ஏற்கெனவே பதவியில் இருந்த அந்த நான்கு பேரும் மீண்டும் போட்டியிட்டனர்.
தவெக சார்பில் அக்கட்சியின் மாநகரச் செயலாளர் முருகானந்தம், மாவட்டப் பொருளாளர் விஜய் சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஞ்சனா, ஸ்ரீதேவி, மாணவரணி மாநகரத் தலைவர் சந்தேஷ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இ–ஓட்டிங் முறைக்கு ஆன்லைனில்தான் வேட்பு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்ததால் அவர்களது விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டது. திமுக-வினரான கல்யாணசுந்தரம், அன்பழகன் உள்ளிட்டோர் 197 வாக்குகள் பெற்ற நிலையில், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து மாநகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், தவெக-வினர் நிதி நிறுவனத்தில் போராட்டம் நடத்தினர். இ-ஓட்டிங் முறையில் நடந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது... இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் நேற்று முழுவதும் கும்பகோணம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில், கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பயிற்சி அலுவலர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைத்ததாக போலீஸார் எழுதி வாங்கியதாக பயிற்சி அலுவலர்கள் குற்றச்சாட்டு கிளப்பியுள்ளனர்.
இது குறித்து பயிற்சி அலுவலர்கள் கூறியதாவது, ``தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் புதிதாக பணிக்குச் சேர்ந்த 72 நபர்களுக்கு கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 16 முதல் 30ம் தேதி வரை 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதி நாளான நேற்று பயிற்சியில் இருந்தபோது அதிகாரிகள் மற்றும் போலீஸார் எங்களை ஓர் அறைக்குள் தனியாக வைத்து அடைத்து கதவை சாத்தி விட்டனர். எங்களுக்கு உணவு, குடிக்க தண்ணீர் எதுவும் கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் நாங்கள் கூச்சலிட்டதும் அலுவலர் ஒருவர் எங்களுக்கு உணவு வழங்கினார்.

இதயடுத்து இரவு 11 மணிக்கு மேல் எங்களை வெளியே அனுப்பினர். நடந்தது பற்றி யாரிடம் எந்த தகவலும் சொல்லக் கூடாது, எல்லோரும் அவரவர் பணியாற்றும் கிளைக்குச் சென்று விட வேண்டும் எனக் கூறி அனுப்பினர். போலீஸார், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு வேண்டியதை எழுதச் சொல்லி கையெழுத்து வாங்கினர். பயிற்சி பெற்ற 72 பேரில் இ.ஓட்டிங் முறையில் வாக்களித்த 15 பேரிடம் வலுக்கட்டாயமாக எழுதி வாங்கியுள்ளனர்.
நாங்கள் நேர்காணலில் தேர்வாகி முறையான வழிமுறைகள் மூலமாகவே வேலைக்கு சேர்ந்திருக்கிறோம். பணம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்ததாகப் எழுதித் தருமாறு மிரட்டினர். அப்படியெல்லாம் இல்லை எனச் சொன்னபோது, நாங்கள் சொன்னதுபோல் எழுதி தராவிட்டால், வேலையில் நீடிக்க முடியாது என மிரட்டியதால் வேறு வழியில்லாமல் எழுதிக் கொடுத்திருக்கிறோம். கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆத்மநாதனிடம் செல்போனில் பேசிய முக்கிய நபர் ஒருவர் சொல்ல சொல்ல அதை அவர் செய்தார்" என்றனர்.
இந்த விவகாரத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் வேலப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.














