US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்... அமெரிக்க வரலாற்றில் ப...
குரூப் 4 தேர்வு: 56% சரிந்த விண்ணப்பங்கள்!- TNPSC நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்கிறார்களா இளைஞர்கள்?
தமிழகத்தில் கிராம நிா்வாக அலுவலா், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வருவாய் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த அக்.6-ஆம் தேதி வெளியிட்டது.
இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது. இத்தேர்வுக்கு நவ. 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்கும் அவகாசம் நவ. 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

56% சரிந்த விண்ணப்பங்கள்
இந்த குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் சுமார் 56 சதவிகிதம் சரிந்திருக்கிறது.
‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா?' என்ற கேள்வியோடு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவைத் தொடர்புகொண்டு பேசினோம்.
கட்டணமாகப் பெறப்படும் பணத்திற்கு என்ன மதிப்பு?
நம்மிடம் பேசிய அவர், "லட்சக்கணக்கானோர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும்போது, கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் கால வரையறைக்குள்ளாகத் தேர்வு முடிந்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
தேர்வு நாள்களில் விடைத்தாள் வழங்கி தேர்வுகள் எழுதிய பிறகு, தேர்வு வாரியக் குழுவுக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டு, குறைகள் இல்லாமல் கேள்விகளையும் விடைகளையும் நம்பகத்தன்மையான ஆதாரங்களுடன் வழங்க வேண்டும்.
வேலை இல்லாதவர்கள் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்களில் இருக்கும்போது, அவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாகப் பெறப்படும் பணத்திற்கு என்ன மதிப்பு? பல லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்க, வெறும் 1,000 அல்லது 5,000 இடங்கள் என்று சொல்லி பல லட்சம் மாணவர்களை விண்ணப்பிக்க வைக்கிறது டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம்.

இதனால் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை குறைகிறது
5,000 இடங்களுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று சொல்வதே ஒரு நியாயமற்ற போக்கு. 9 லட்சம் பேரில் 5,000 பேருக்குத்தான் வேலை என்றால், மிச்சம் உள்ளவர்கள் யார்?
குறைந்தபட்சம் தேர்வை தொடர்ந்து நடத்தி, சரியான நபர்களைத் தேர்வு செய்து வேலை கொடுத்துவிட்டால் பரவாயில்லை. ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஒரு தேர்வு நடந்தால் கேள்விகளில் சிக்கல் என்று நீதிமன்றத்திற்குப் போகிறார்கள்; விடை சரியில்லை என்று நீதிமன்றம் போகிறார்கள்; இட ஒதுக்கீடு தேர்வில் நியாயம் கிடைக்கவில்லை என்று போகிறார்கள்.
இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடுவதும், வழக்குகள் முடிந்து நியமனம் நடப்பதுமாக வருடக் கணக்கில் ஆகிவிடுகிறது. இதனால் தேர்வாணையத்தின் மீதும், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் மீதும் இருக்கக்கூடிய நம்பிக்கை குறைந்துபோகிறது.
எதில் இந்தத் தேர்வாணையம் இயங்குகிறது?
லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கும்போது, ஒப்பந்ததாரர்கள் மூலமாக நிரப்புவோம் என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தினர் சொல்கிறார்கள். அப்படியென்றால் அவர் நேரடியாக அரசு ஊழியராக இருக்க மாட்டார், அந்த நிறுவனத்தின் ஊழியராகத்தான் இருப்பார்.
காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் வெறும் 4,000, 5000 இடங்களை மட்டும் நிரப்புவது நியாயமற்ற அணுகுமுறை. லட்சக்கணக்கானோரிடம் வசூலிக்கும் வருமானத்திலேயே இந்தத் தேர்வாணையம் இயங்குகிறதா?

அப்போது தான் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்
தேர்வாணையத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காகவே தேர்வு நடத்துகிறீர்களா, அல்லது தேவையான அளவுக்குக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்துகிறீர்களா? இதற்கெல்லாம் நியாயமான பதிலைச் சொல்லவில்லையென்றால் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை இருக்காது.
எனவே, தேர்வு நடத்த முடிவு செய்தவுடனே, கடந்த கால அனுபவங்களை உள்வாங்கி, ஒவ்வொரு கேள்வியும் விடையும் சரியான தரவுகளோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரபூர்வமான கேள்விகளையும் விடைகளையும் வழங்க வேண்டும்.
இந்தச் செயல்முறை இத்தனை நாளில் முடிந்து பணி நியமனம் கிடைத்துவிடும் என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். இரண்டாவதாக, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இவை இரண்டையும் செய்யும்போதுதான் தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்" என்றார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















