US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடை...
"'நூறு சாமி'-ஐ 'பூ' படம் போல பேசப்படும் படமாக மாற்றி இருக்க முடியும்; ஆனால்.."- இயக்குநர் சசி பேட்டி
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியிருக்கிற '100 கோடி வானவில்' திரைப்படம், நாளை நேரடியாக 'ஜீ5' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இது சில வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம். ஆனால், ரிலீஸில் தாமதமாகி, இறுதியாக இப்போது வெளியாகிறது.
இந்த வருடத்தில் இது இயக்குநர் சசியின் இரண்டாவது ரிலீஸ். இந்த வருடத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்திருந்த 'நூறு சாமி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. '100 கோடி வானவில்' திரைப்படத்திற்காக இயக்குநர் சசியைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், "வயிற்றில் இருந்த குழந்தை இப்போது பிறப்பது போன்ற உணர்வு இது. கொஞ்சம் தாமதத்திற்குப் பிறகு '100 கோடி வானவில்' திரைப்படம் நேரடியாக 'ஜீ5' ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்போது படம் வெளியாவதைப் பார்க்கும்போது ஒரு புதிய எக்சைட்மென்ட் வந்திருக்கிறது.
காதலில் ஏற்படும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் பற்றிப் பேசும் படம் இது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் முடித்த பிறகு எழுதப்பட்ட கதை இது. ஹரீஷ் கல்யாண் 'வினோ' என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
என் கதைகளுக்குப் பெரிய ஆர்டிஸ்ட் கிடைத்தால் சந்தோஷம். ஆனால் பட்ஜெட் எல்லைக்குள் புதுமுகங்களைத் தேட வேண்டிய சூழல் வரும்போது சரியான தேர்வைச் செய்ய வேண்டும்.
இந்தக் கதைக்கு ஒரு புதுமுகம் தேவைப்பட்டது. 'ரன்' படத்தில் மீரா ஜாஸ்மின் கொடுத்த அந்தப் புதுமைதான் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. அப்படித் தேடியபோதுதான் இன்ஸ்டாகிராம் மூலமாக சித்தி இத்னானியைத் தேர்வு செய்தேன்.
அவர் ஏற்கனவே இரண்டு தெலுங்குப் படங்கள் பண்ணியிருந்தாலும், என் கதைக்குத் தகுந்தபடி மாற்றுவதற்குத் தினமும் ரிகர்சல் வரவழைத்தோம். தமிழில் இதுதான் சித்தி இத்னானியின் முதல் திரைப்படம்.
பின்பு, கௌதம் மேனன் இப்படத்தின் பாடல்களைப் பார்த்துவிட்டு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிக்க வைத்தார்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "படம் ஓடிடியில் வெளியாகிறது, தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் நிச்சயமாக எனக்கு இருக்கிறது.
தியேட்டரில் என்றால் மக்களின் கைதட்டலையும் நேரடி ரியாக்ஷனையும் நாம் உடனடியாக அனுபவிக்க முடியும். ஓடிடியில் அது சாத்தியமில்லை என்றாலும், வெளியே பார்க்கும்போது மக்கள் நேரில் வந்து பாராட்டுவார்கள்.
எழுதும்போதே 'இந்த இடத்தில் தியேட்டரில் கிளாப்ஸ் கிடைக்கும்' என்று யோசித்து நான் என்றுமே காட்சி அமைப்பது கிடையாது. 'பிச்சைக்காரன்' படத்தின் முக்கியமான கிளைமேக்ஸ் காட்சியைக்கூட நான் கிளாப்ஸ் கிடைக்கும் எனக் கணக்கிட்டு வைக்கவில்லை.
கதையை நாம் சரியாகச் சொல்லிவிட்டால், அது தானாகவே கைதட்டல்களை வாங்கிக்கொள்ளும்" என்றவர், அவருடைய கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதம் குறித்துப் பகிர்ந்துகொண்டபோது, "கதையின் இயல்பை மீறாமல் கதாபாத்திரத்தின் செயல்களை ஒரு ஹீரோயிசமாக மாற்ற வாய்ப்பிருந்தால் அதைச் செய்ய இப்போது தொடங்கியிருக்கிறேன்.
வாழ்க்கையில் பல இடங்களில் நிஜமான ஹீரோயிசம் இருக்கிறது. உதாரணமாக, ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது காந்தி எழுந்து நின்றாரே, அது நிஜமான ஹீரோயிசம்.
அப்படி நிஜ வாழ்க்கையில் ஹீரோயிசத்துடன் வாழும் பல மனிதர்களின் கதைகளை நாமும் ஹீரோயிசத்துடன் திரையில் சொல்ல வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, 'நூறு சாமி' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்துப் பேசியவர், "'நூறு சாமி' படத்தை, 'பூ' படம் போல இன்னும் 20 வருடங்களுக்குப் பேசப்படும் படமாக மாற்றி இருக்க முடியும். அதனால், சினிமாவுக்கு நல்லது செய்திருப்பேன்.
ஆனால், சமூகத்துக்கு நல்லது செய்திருப்பேனா எனத் தெரியவில்லை. இந்தப் படம் சாதாரண மனிதர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பதற்காகச் சில காம்ப்ரமைஸ்களை ஏற்றுக்கொண்டு திரைக்கதையை அமைத்தேன்.
சமீபத்தில் நிகழ்ந்த 'நீயா நானா' நிகழ்ச்சியில், பெற்றோருக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பும் 8-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'நூறு சாமி படம் பார்த்த பிறகுதான் எங்கள் பெற்றோரிடம் பேசும் தைரியம் வந்தது' என்று கூறியதைக் கேட்டபோது எனக்குப் பெரும் திருப்தி கிடைத்தது" என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.
முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


















