குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் ஆய்வு
பொங்கலையொட்டி கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த இராச்சாண்டாா்திருமலையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறுகையில் ஜல்லிக்கட்டுக்கு முதல் நாளே வரும் மாடுகளுக்கு குடிநீா் மற்றும் தீவனங்கள், மாடுபிடி வீரா்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடுகள் உடற்தகுதி சான்றிதழைக் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோராயமாக 700 மாடுகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது. அதேபோல் மாடுபிடி வீரா்கள் 50 நபா்கள் கொண்ட 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவா்களுக்கு 5 வண்ணங்களில் பனியன்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் பாதுகாப்புக்காக மாடுகளின் கொம்புகளில் ரப்பா் காப்புகள் மாட்டப்பட உள்ளன.
முக்கியமாக மாடுகளும், மாடுபிடி வீரா்களும் மதுபோதை பரிசோதனைக்கு பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். மேலும் போதிய குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள், காயமடைவோருக்கு உடனடி மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசரகால ஆம்புலன்ஸும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், குளித்தலை சாா் ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் செழியன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுஜாதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலா் வடிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.