"அந்தப் போட்டியில் சிம்புவின் விக்கெட்டை நான்தான் எடுத்தேன்" - கிரிக்கெட் அனுபவம...
Doctor Vikatan: 10 வருடங்களாக குழந்தையில்லை... ஐவிஎஃப் சிகிச்சை உடனே பலன் தருமா?!
Doctor Vikatan: என் வயது 35. பத்து வருடங்களுக்கு முன் திருமணமானது. இதுவரை கர்ப்பம் தரிக்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து மாத்திரைகள் எடுத்தும் பலனில்லை. இனி மருந்து, மாத்திரைகள் பலனளிக்காது, ஐவிஎஃப் சிகிச்சைதான் ஒரே தீர்வு என்கிறார்கள் உறவினர்கள். ஐவிஎஃப் சிகிச்சையில் உடனே பலன் கிடைக்குமா... நம்பி செய்து கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
பத்து வருடங்களாக குழந்தையில்லை என குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்களுக்கோ, உங்கள் இணையருக்கோ உள்ள உடல்நலக் கோளாறுகள், நோய் வரலாறு, வேறு பிரச்னைகள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. குழந்தையின்மைக்காக நீங்கள் என்னென்ன சிகிச்சைகள் மேற்கொண்டீர்கள், அவை ஏன் பலனளிக்கவில்லை என்ற விவரங்களும் தெரியவில்லை.
ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட தம்பதியர் அந்தச் சிகிச்சைக்குத் தகுதியானவர்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருக்கும்நிலையில் ஐவிஎஃப் சிகிச்சை தொடங்கப்பட்டால் அந்தச் சிகிச்சை வெற்றிபெறாது. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பப்பை தொடர்பான அடிப்டையான சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டாலே, அந்தப் பெண்ணுக்கு ஐவிஎஃப் சிகிச்சையே தேவைப்படாமல், கருத்தரிக்கும் நிலை கூட ஏற்படலாம்.
கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு, நீர்க்கட்டிகள், சாக்லேட் கட்டிகள், தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் அவை முதலில் சரிசெய்யப்பட வேண்டும். எளிமையான லேப்ராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி முறையிலேயே இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து விட முடியும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 2 முதல் 3 மாத ஓய்வு கொடுத்து, புண்ணெல்லாம் முழுமையாக ஆறிய பிறகு ஐவிஎஃப் சிகிச்சை தேவையாக இருந்தால் அது பரிந்துரைக்கப்படும்.

கர்ப்பப்பையில் மட்டுமல்ல சில நேரங்களில் கருக்குழாய்களில் அடைப்பு இருக்கலாம். கருமுட்டைகள் உருவாவதில் பிரச்னைகள் இருக்கலாம். கணவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காகவும் ஐவிஎஃப் சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் இருவரையும் முழுமையாகப் பரிசோதித்த பிறகே ஐவிஎஃப் தேவையா என்பது குறித்த முடிவுக்கு வர முடியும். இப்போதே 35 வயது என்கிறீர்கள்... இனியும் தாமதிப்பது சரியல்லை. நம்பகமான மருத்துவரை அணுகி, அவசியமான பரிசோதனைகள், தேவையான சிகிச்சைகளை உடனடியாகத் தொடங்குங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















