நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? - சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் க...
Nala dental: அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை; மருத்துவ சிகிச்சைக்கான முக்கிய இடமாக மாறி வரும் மதுரை
உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சை பெற தமிழகத்தை நோக்கி படை எடுக்கிறார்கள். அதில் மதுரை நகரம் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சை நகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருகிறார்கள் என்கிறார்கள், அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் நாலா டெண்டல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜே. கண்ணா பெருமான்.

டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா கூறுகையில், "மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 1,200 முதல் 1,500 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். பெரும்பாலும் ஓமன், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, தான்சானியா, சியரா லியோன், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மலேசியா, கானா, பெனின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக நோயாளிகள் வருகிறார்கள். பிறவியிலேயே வரும் குளோக்கோமா, கண் உறை நோய்கள், கடுமையான ரெட்டினா நோய்கள் போன்ற சிக்கலான கண் பிரச்னைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவர்களின் பரிந்துரை
ஒரு சில நோயாளிகள் முன்பு சிகிச்சை பெற்றவர்களின் பரிந்துரையால், தங்கள் நாட்டில் உள்ள கண் மருத்துவர்களின் பரிந்துரையால் இங்கு வருகிறார்கள்.
அரவிந்த் மருத்துவமனை இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பல மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. நைஜீரியாவில் உள்ள கண் மருத்துவர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் அரவிந்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை
வெளிநாட்டு நோயாளிகளுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. விமானப் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஒப்பிடுகையில், சிகிச்சை செலவு மிகவும் குறைவாக உள்ளது.
சில நாடுகளில் அரசே தங்கள் குடிமக்களுக்கு அரவிந்தில் சிகிச்சை பெற பயணச் செலவையும் சிகிச்சை செலவையும் ஏற்றுக் கொள்கிறது. பெரும்பாலான வெளிநாட்டு நோயாளிகள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சேவைகளுக்கு அவர்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள்" என்றார்.
"டென்டல் இம்பிளான்ட் சிகிச்சைக்காக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமான நோயாளிகள் நாலா டெண்டல் மருத்துவமனைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளுடன் ஒருவரோ இருவரோ உடன் வந்து, சுமார் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்கிறார்கள். பல் சிகிச்சைக்கான செலவு இங்கு குறைவாக இருப்பதே வெளிநாட்டவர்களின் வருகைக்கு முக்கிய காரணம்" என்கிறார் மருத்துவர் ஜே. கண்ணா பெருமான்.
டிராவல் கிளப், மதுரையின் நிறுவனர் மற்றும் ஹோட்டல் ஃபார்ச்சூன் பாண்டியன் இயக்குனரான ஜி. வாசுதேவன் கூறுகையில், "மதுரையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளன.
அதற்கு முதன்மையாக, நேரடி விமான சேவை அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடி விமானங்கள் தொடங்கப்பட வேண்டும். இது நோயாளிகளின் பயண நேரத்தை எளிதாக்கும்.
மேலும், வெளிநாடுகளில் மதுரையை ஒரு தனி மருத்துவ நகரமாக அறிமுகப்படுத்த, ரோடு ஷோ மூலம் விளம்பர படுத்த வேண்டும். அத்துடன், வெளிநாடுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மதுரையின் தூதர்களாக செயல்பட வேண்டும். அதன் மூலம் அவர்களின் உலகளாவிய தொடர்புகள் மதுரைக்கு பெரிய ஆதரவாக அமையும். அரசு, மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மதுரை ஒரு சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக நிச்சயம் உருவாகும்" என்றார்.


















