செய்திகள் :

`மனோ தங்கராஜ் மலைகளை உடைத்து கோடிக்கணக்கில்...' - அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

post image

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் உள்ளிட்டோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், சில அரசியல் காரணங்களால் உதயநிதி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் த.வெ.க பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். நேற்று இரவு நடைபெற்ற விழாவில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் திருச்சி வேலுச்சாமி விழாவில் கலந்துகொண்டு, "விரைவில் இணைவோம்" என த.வெ.க, காங்கிரஸ் கூட்டணி அமையும் என்ற அர்த்தத்தில் பேசினார். அந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "இந்த ஆட்சியில் மூன்று சர்ச்சுகள் மூடப்பட்டதாக விழா ஏற்பாடு செய்தவர்கள் சொன்னார்கள். அடுத்த ஆண்டு எங்கள் அண்ணன் முதலமைச்சர் ஆன பிறகு இங்கு வந்து அந்த மூன்று சர்ச்சுகளையும் திறப்பார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலையை வெட்டி கேரளாவுக்கு அனுப்புவதில் மனோ தங்கராஜ் பிசியாக இருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மலையை உடைப்பதற்கு எதிராகப் போராடினார். கடைசியில் மலையை அப்படியே முழுங்கிவிட்டார். இந்த ஆட்சி முடிவதற்குள் மலை இருக்காது. மனோ தங்கராஜ் மலையை வெட்டுவதில் பிசியாக இருப்பார். இன்னும் கொஞ்சம் நாளில் எல்லோரையும் தூக்கிக்கொண்டு போக வருவார்கள். பொதுவாகவே தமிழக வெற்றிக் கழகம் இந்த அமைச்சர்களை எல்லாம் எதிரியாக நினைப்பதே இல்லை. இவர்கள் என்றைக்கு பணத்தைப் பார்த்து போனார்களோ அன்றைக்கே மக்களின் ஆதரவை இழந்து விட்டார்கள். அதனால்தான் நாங்கள் சில பெயர்களைச் சொல்லக் கூடாது என நினைக்கிறோம்.

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா

எனக்கு 5 வயது இருக்கும்போது என் கண் முன்பே அம்மா தற்கொலை செய்துகொண்டு இறந்தார்கள். அவர் விரும்பியவரைத் திருமணம் செய்து வைக்காமல், விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துவைத்ததால், அவர் இறந்தார். அப்படி ஒரு இறப்பை சிறு வயதிலேயே பார்த்தேன். என்னுடைய மாமா என்னைச் சிறு வயதில் எடுத்துக்கொண்டு போய் ஓ.டபிள்யூ.சி.ஏ-வில் ஒப்படைத்தார். அங்கு கிறிஸ்தவ மிஷனரிகள் என்னை வளர்த்தார்கள். அங்கிருந்து ராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்றேன். பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் சேரும்போது, கல்லூரியை முடித்துவிட்டு நக்சலைட் ஆக வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அரசியல்வாதிகளைப் பார்த்தால் துப்பாக்கி எடுத்து சுட வேண்டும் என்று ஒரு கோபம் இருக்கும். அதை பக்குவப்படுத்தியவர், அந்தக் கல்லூரி பேராசிரியர் அலெக்சாண்டர். இந்த நாட்டில் சமநிலை இல்லை. அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். எனவே நீங்கள் அந்த சிஸ்டத்துக்குள் போங்கள் என்றார். எங்கு கொள்ளை அடிக்கிறார்களோ, அங்கிருந்து வேலைபார்த்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். இன்று தூய சக்தியான த.வெ.க-வில் இணைந்துள்ளேன். எங்கெல்லாம் ஆதிக்கம் இருக்கிறதோ, அங்கெல்லாம் எதிர்த்து நிற்கவேண்டும்.

திருப்பரங்குன்றம் பிரச்னையில் ஏன் குரல் கொடுக்கவில்லை என ஒரு கேள்வி கேட்கிறார்கள். டெல்லியில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்கிறார்கள். 1999 முதல் 2004 வரை பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது யார். குஜராத்தில் படுகொலை நடக்கும்போது ஆட்சியில் இருந்தது யார் என்பதே உங்களுக்கே தெரியும். திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது என எங்கள் சட்ட வல்லுநர்களுக்குத் தெரியும். ஐகோர்ட்டில் தீர்க்கவேண்டிய பிரச்னையை, தேர்தல் அரசியலுக்காக உருவாக்கியது தி.மு.க-வும், இந்து முன்னணியும்தான். நீங்கள் அரசியலுக்கு வந்து நடிக்கிறீர்கள். எங்கள் தலைவர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். உண்மையாக சமூகநீதி, மதச்சார்பின்மையை நோக்கி உருவாக்கிய கட்சி த.வெ.க. நாளை காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வந்தால் ராகுல் காந்தியை பா.ஜ.க-வின் பி டீம் என தி.மு.க சொல்லிவிடும். இந்த ஆட்சியில் அதிகமாக கஷ்டப்படுவது பட்டியலின மக்கள். தண்ணீரில் மலத்தை கலந்த பிரச்னையில், யார் முதலில் எட்டிப்பார்த்தார்களோ அவர்கள் மீது வழக்குப்போட்டார்கள். இதுபற்றி வி.சி.க-வினர் பேசமாட்டார்கள். அதுதான் கூட்டணி தர்மம். வி சி.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்கள் எல்லாம் கூட்டணி தர்மத்துக்காக த.வெ.க-வை திட்டுவது போன்று திட்டுவார்கள். காலமும் நேரமும் இதை சரிசெய்யும். ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களும், வி.சி.க, கம்யூனிஸ்ட், அ.தி.மு.க தொண்டர்களும் த.வெ.க பக்கம் நிற்கிறார்கள். தி.மு.க 33 சதவிகிதமும், த.வெ.க 31 சதவிகிதம் வாக்குகளைப் பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. அதனால்தான் தி.மு.க எங்களை எதிர்க்கிறது.

அருமனை கிறிஸ்துமஸ் விழா

ஒரு குடும்பம் மட்டும்தான் ஆட்சி செய்ய வேண்டுமா... கிறிஸ்தவ மக்களை வாக்குகளாக மட்டும்தான் தி.மு.க பார்க்கிறது. அடுத்து 50 ஆண்டுகளுக்கான தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்தல் வர உள்ளது. எங்களை நோக்கி வரக்கூடிய இளைஞர்கள் கவர்ச்சிக்காக வரவில்லை. வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை, சம உரிமை கிடைக்கவில்லை, இந்த அரசு எதற்கும் செவி சாய்த்ததில்லை என்பதால், நல்ல அரசை உருவாக்க வேண்டும் என்றும், நல்ல நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் வருகிறார்கள். மனோ தங்கராஜ் பெரிய மினிஸ்டர் ஆயிற்றே. அவர் மலைகளை உடைத்து, கற்களை உடைத்து கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறாரே. இந்தப் பணத்தை எடுத்துவிட்டு வந்து செலவு செய்வாரே என நீங்கள் நினைக்கலாம். கொடுப்பதை எல்லாம் மக்கள் வாங்கிக்கொள்வார்கள். ஏனென்றால் அது உங்களிடம் இருந்து கொள்ளையடித்தப் பணம். முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்கள் மகனை முதலமைச்சர் ஆக்க நீங்கள் எவ்வளவு வேண்டுமானால் கஷ்டப்படலாம். அந்த அன்பு பணத்தால் உருவாக்கப்படுவது இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். தி.மு.க ஆறு மாதங்களுக்கு முன் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்றார்கள். இப்போது அவர்கள் சொல்லமாட்டார்கள். 200-ல் ஒரு சைபைர் குறைத்துவிட்டார்கள். அடுத்த கிறிஸ்துமஸ் விழாவில் நாம் நினைக்கும் ஆட்சி தேவனால் உருவாக்கப்படும்" என்றார்.

கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் பாஜக? - அதிர்ச்சியில் அதிமுக... கூட்டணியில் சலசலப்பா?!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.ம... மேலும் பார்க்க

`இந்தியாவுலயே ரெண்டு பேர் இந்த வகை, ஒருத்தர் மோடி, இன்னொருத்தர் விஜய்!' - ஜேம்ஸ் வசந்தன் பேட்டி

தமிழில் சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் மீது அதீத பிரியம் கொண்ட இவரது நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஒருகட்டத்தில் சின்னத்திர... மேலும் பார்க்க

OPS : தனிக்கட்சி; விஜய்யுடன் கூட்டணி! - ரூட்டை மாற்றுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

'எடப்பாடி பழனிசாமி என்கிற பெயரை சொல்லவே அவமானமாக இருக்கிறது. பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையப் போவதில்லை' என தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். தம... மேலும் பார்க்க

`தாக்கரே குடும்பத்தால் மட்டுமே முடியும்!'-மாநகராட்சி தேர்தலில் கூட்டணியை அறிவித்த தாக்கரே சகோதரர்கள்

மும்பை மாநகராட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் ஏற்கெனவே முடிவு செய்துள்ளன. இதற்காக இரு கட்சிகள... மேலும் பார்க்க

”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் ... மேலும் பார்க்க