நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? - சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் க...
`இந்தியாவுலயே ரெண்டு பேர் இந்த வகை, ஒருத்தர் மோடி, இன்னொருத்தர் விஜய்!' - ஜேம்ஸ் வசந்தன் பேட்டி
தமிழில் சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் மீது அதீத பிரியம் கொண்ட இவரது நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஒருகட்டத்தில் சின்னத்திரையிலிருந்து சினிமா பக்கம் வந்தவர், இசையமைப்பாளர் ஆனார். தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். லைக்காவுக்கு இவர் இயக்கும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபமாக அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் பொது வெளியில் தன் கருத்தைத் துணிச்சலுடன் வைத்து வருகிறவரைச் சந்தித்தோம்.

'நீங்க வந்த புதிதில் இருந்த சூழலுக்கும் இன்றைய சின்னத் திரை சூழலுக்கும் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?'
''நாங்க டிவிக்கு வந்தப்ப எங்களுக்கு ரோல் மாடல்னு யாரும் கிடையாது.. ஏன்னா தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நிலையில சேட்டிலைட் சேனல்ங்கிறதே அன்னைக்கு புதுசு. அதனால எங்களுக்கு நாங்களே ஒரு ரூட்டைப் பிடிச்சு போயிட்டிருந்தோம். எனக்குத் தெரிஞ்சு அந்த பேட்டர்னைத் தான் இப்ப வரைக்கும் ஃபாலோ செய்திட்டிருக்காங்க. ஆனா அன்னைக்கு டிவியில மொழியின் தரத்துல சமரசம் செய்துக்க மாட்டாங்க. இப்ப அந்த தரம் குறைஞ்சிருக்கு. கொஞ்சம் கொஞ்சம் தமிழ், அதுவுமே சில நேரம் கொச்சைத் தமிழ்னு போயிடுச்சு. இது வருத்தம் தரும் விஷயம். இதுக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், செய்தி தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள், இதை அனுமதிக்கிற சேனல்கள்னு எல்லாருமேதான் காரணம்."
``இளையராஜா குறித்த உங்கள் எதிர்மறை விமர்சனம் எப்படி எப்போது ஏன் ஆரம்பித்தது?"
''திருவாசகத்தை ஆர்ட்டோரியோங்கிற இசை வடிவத்துல அவர் தந்த நேரம் அது. அது தொடர்பா ஜெகத் கஸ்பர் அமைச்ச குழுவில் நானும் ஒருவன். இளையராஜாவின் முதல் படத்துல இருந்து அவரைக் கவனிச்சு அவரைப் பார்த்து இசையமைப்பாளாராகணும்னு நினைச்சு சென்னைக்கு வந்தவன் நான். மனசுல அவரை ஒரு விக்கிரகம் மாதிரி வச்சிருந்தேன். ஆனா பக்கத்துல இருந்து அவரைப் பார்த்தப்ப நான் உருவாக்கியிருந்த அந்த பிம்பத்துக்கு நேரெதிரா இருந்தார்.
சாந்தோம் கலைத் தொடர்பு மையத்துல ஒரு டிஸ்கஷன்ல இருந்த போது ராஜா சார் பத்தி ஒரு பேச்சு வந்தது. சுஜாதா சார் கூட அப்ப எனக்கு ஒரு அறிவுரை தந்தார். 'நெவர் கோ நியர் எ ஜீனியஸ்'னு சொன்னார். இது எல்லாருக்கும் பொருந்தும்னார்.

ராஜா சாரை பக்கத்துல நான் பார்த்ததுல வந்த அதிர்ச்சிதான் அது. டிஜிட்டல் மீடியா தாக்கத்தால் அது ஒருகட்டத்துல பொது வெளிக்கு வந்திடுச்சு. மத்தபடி அவர் மீது வேறெந்த வன்மமும் எனக்கு கிடையாது.
அதேநேரம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான 'இயேசு உயிர்த்தெழுதல்' பத்தி அவர் பேசினப்ப, ஒரு கிறிஸ்தவனா கூட இல்ல, சாதி, மத வேறுபாடு இல்லாம மக்கள் கடவுளா பார்க்கிற ஒருத்தர் கிட்ட இருந்து குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கை பத்தி இந்த மாதிரி வார்த்தைகள் வரலாமாங்கிற ஆதங்கத்துல வந்ததுதான்."

இளையராஜா தரப்பிலிருந்து இது குறித்து யாராவது உங்களிடம் பேசியதுண்டா?
''கங்கை அமரன் சார் பேசினார். 'அவரை ஏன் சார் இந்த மாதிரி பேசறீங்கனு வருத்தப்பட்டார். பிறகு நானுமே கொஞ்சம் யோசிச்சேன். அவர்கிட்டயும் உங்ககிட்ட சொன்ன இதே பதிலைச் சொன்னேன். அத்தோட முடிஞ்சது அந்த விவகாரம். இப்ப நான் குறைச்சுகிட்டேன். ஆனா சமூக ஊடகங்கள்ல இதுக்காக என்னைக் கடிச்சு குதறியவங்க நிறைய''
`தவெக, விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கறீங்களே?'
''யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். ஆனா அவர் முதல்ல அரசியல் வருகை குறித்துப் பேசினப்ப நான் பரிதாபம்தான் பட்டேன். படத்துக்கு 200 கோடி வரை வாங்குறதா சொல்றாங்க. அதை விட்டுட்டு ஏன் வரணும்னுதான் நினைச்சேன். ஆனா என்னைக்கு மேடையில அவர் வாயைத் திறந்தாரோ, அப்பவே அவர்கிட்ட விஷயம் இல்லைங்கிறது எனக்குப் புரிஞ்சிடுச்சு. ரொம்ப சாதாரண விஷயம்ங்க இது. ஒருத்தன் பேச ஆரம்பிச்சான்னா அவன்கிட்ட சரக்கு இருக்கா இல்லையானு சாதாரண ஒரு மனுஷனாலேயே கண்டு பிடிச்சிட முடியுமே.
எனக்குத் தெரிய இந்தியாவுலயே ரெண்டு பேரை இந்த வகையில என்னால சொல்ல முடியும். அதாவது சிலர் அவங்களை ஆளுமைனு சொல்லலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை வெறுமையானவங்க இவங்க. ஒருத்தர் மோடி. இன்னொருவர் விஜய். சினிமாப் புகழை வச்சுகிட்டு சினிமாவுல வர்ற மாதிரியே உடனே அதிகாரத்துக்கு வரணும்னு நினைக்கிறது தப்பு. அவருடைய பேச்சு, உடல்மொழி தவறான ஆள்னு காட்டிக் கொடுத்திடுது. அரசியல்ல அடிப்படையான விஷயத்தைக் கூட அவர் தெரிஞ்சுக்காம வரணும்னு நினைக்கிறது சரியில்ல."

`கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய்க்கு கிடைக்க வாய்ப்பில்லை என நினைக்கிறீர்களா?'
``கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இயேசுவின் கட்டளைகளை மதிச்சு நடக்கிறவந்தான் உண்மையான கிறிஸ்தவன். அவன் விஜய்க்கு ஓட்டு போட மாட்டான். சினிமாவுல இருக்கிற வரை தான் கிறிஸ்தவன்னு காட்டிக்கலை. இப்ப மட்டும் மத அடையாளத்தைக் காட்டுவது ஓட்டு அரசியலுக்காங்கிற கேள்வி வருதில்லையா? சினிமாவுலயும் உச்ச நடிகராதானே இருந்தார். இவ்வளவு நாள்ல ஒரு முறை கூட 'ப்ரைஸ் த லார்ட்'னு சொல்லவே இல்லையேங்க. இந்த இடத்துல 'நான் கிறிஸ்தவன்'னு பொதுவெளியில சொன்ன உதயநிதியை நான் பாராட்டுவேன். ஓட்டு பாதிக்கும்னு நினைக்காம துணிஞ்சு அப்படிச் சொன்னது ஒரு நேர்மைனு சொல்வேன். "
`திமுகவின் ஆட்சியில் குறைகளே இல்லையா?'
'2024 தேர்தல்ல காங்கிரஸ் மத்தியில் ஜெயிச்சுடும், அப்படி ஜெயிச்சா நீட் விஷயத்துல நாம் நினைச்சதை செஞ்சிடலாம்னு நினைச்சு வாக்குறுதி தந்தாங்க. ஆனா அப்படி நடக்கலை. மாநில அரசால் என்ன முடியுமோ அந்த எல்லை தெரிஞ்சுகிட்டு பேசியிருக்கலாம்.
அதேபோல சமீபமா தமிழ்நாட்டுல போதை கலாசாரம் பெருகிட்டு வருது. மாணவ சமூகமே இதனால பாதிக்கப் படுது. இந்த விஷயத்துல கண்காணிப்பு, தண்டனைகளைக் கடுமையாக்கி நடவடிக்கை எடுக்கணும். கூடுதலா அக்கறை செலுத்தணும்னு சொல்வேன்'.!'















