Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை ...
சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன்
இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ' (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது.
அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஜவான்' எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் 'ஜவான்', 'பேபி ஜான்' படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் 'மிஷன் சான்டா' குறித்து பேசினோம்.

''இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்லயும் அனிமேஷன் உருவாகியிருக்கிறது சந்தோஷமா இருக்குது என்கிறார்கள். இது உண்மையும்கூட! இதில் எனது பங்களிப்பு புரொமோஷன், டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் ஆக இருக்கேன்.

அனிமேஷன் படங்களின் எடிட்டிங் என்பது அதோட ஸ்டோரி போர்டுலேயே அதுவாகவே வந்துநின்னுடும். சர்வதேச அளவிலான ஒரு தரம்மிக்க படைப்பை உலகளவுல கொண்டு போகணும்னு விரும்பினோம். அதற்கான முயற்சிதான் இது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும்போது பல்வேறு மொழிகள்ல வெளிவரும். இந்திய மொழிகளுக்கு ஏற்றமாதிரி டப்பிங் மற்றும் அதற்கான வேலைகள் பர்ஃபெக்ட்டா பண்ணினால்தான் இந்தப் படம் கவனம் பெறும் என்பதால் டப்பிங்கிலும் தீவிரமாக உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீராம் (sriram), தமிழர். திருச்சியைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாக என்கிட்ட ஒரு உதவியைக் கேட்டார். அதனால என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கை கவனிச்சிருக்கேன்.
குழந்தைகளுக்கான கதை இது என்பதால், விடுமுறைக்கு ரொம்ப பொருத்தமான கதையா இருக்கும். ரெண்டு வருஷம், நூற்றுக்கணக்கானோர் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்குது. இந்த மாதிரி சர்வதேச படங்களை இந்தியாவுல பண்ணனும்னா, அதற்கு பல பிராசஸ் இருக்குது. அதெல்லாம் செய்து முடித்தால்தான் படத்தைக் கொண்டு வரமுடியும். நான் மற்ற படங்களின் புரொமோஷன்கள், டிரெய்லர்கள் அதிகம் ஒர்க் பண்றதால, என்கிட்ட 'மார்க்கெட்டிங்' பண்ணச்சொல்லி கேட்டாங்க.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் நம்ம ஊரைச் சேர்ந்தவங்க என்பதால், நானும் உதவி செய்ய தீர்மானிச்சேன். இந்த படம் நம்மளோட தொழில்நுட்பத் திறமையை வெளிநாட்டினருக்கு உயர்த்திக்காட்டும்'' எனச் சொல்லும் ரூபன், இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். டோலிவுட்டில் பாலகிருஷ்னாவின் 'டாக்கு மகாராஜ்' இயக்குநருடன் மீண்டும் கை கோக்கிறார். தவிர தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தவிர, டிரெய்லர்கள், புரொமோஷன் தொடர்பான வேலைகளும் இன்னொரு பக்கம் ஜரூராக நடந்திட்டிருக்குது என உற்சாகமாகப் பேசுகிறார் ரூபன்.



















