பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்...
Doctor Vikatan: குளிர்காலம்: தினம் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புசக்தி கூடுமா?
Doctor Vikatan: குளிர் காலத்தில் தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ஒரு செய்தியில் படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம்

பேரீச்சம்பழத்துக்கு ' இயற்கையின் மிட்டாய்' என்றே சிறப்புப் பெயர் உண்டு. பேரீச்சம்பழத்தின் காய், பழம், பிசின், கொட்டை, என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
பேரீச்சம்பழத்தில் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன. அதாவது, வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம். நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரதம் மற்றும் நல்ல கொழுப்புச்சத்துகள் போன்றவை அதிகம்.
பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைத் தடுத்து, செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. பசியைத் தூண்டுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் (Hb) அளவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. கல்லீரல் மற்றும் இதயத்தைப் பலப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சருமப் பொலிவிற்கும் முடி வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.

பொதுவாக, குளிர்காலத்தில் உடல் வெப்பத்தைப் பராமரிக்க நமது மூளை அதிக உணவை உட்கொள்ளத் தூண்டும். இதனால் பசியில்லாத நேரத்திலும் தாகத்தை, பசி எனத் தவறாகப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை உண்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்கிறோம். இத்தகைய சூழலில், உடலுக்குத் தேவையான வெப்பத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்க பேரீச்சம்பழம் சிறந்த மாற்றாகும்.
இத்தனை நல்ல தன்மைகளைக் கொண்டிருந்தாலும், கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளோரும் இனிப்பைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டவர்களும் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















