Vote chori: மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ராம் லீலா மைதானம்; காங்கிரஸ் திட்...
Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் கண்களில் விளக்கெண்ணெய் விடுவது ஆரோக்கியமானதா?
Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை (Castor Oil) கண்களில் விடும் பழக்கம் பல காலமாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும், பார்வைத்திறன் மேம்படும், உடலுக்கும் குளிர்ச்சி என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

முன்பெல்லாம், வீட்டுப் பெரியவர்கள் விளக்கெண்ணெயை (Castor Oil), டிரை ஐஸ் எனப்படும் கண் வறட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது கண் மருத்துவர்கள், கண்ணுக்குள் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியே அறிவுறுத்துகிறோம்.
ஏனென்றால், விளக்கெண்ணெய் போடுவதால் கண்ணில் தொற்று (Infection), எரிச்சல் (Irritation) போன்ற பிரச்னைகள் வரலாம்.
இருப்பினும், சிலர் இன்னும் கண் வறட்சிக்கு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. கண்களுக்குக் குளிர்ச்சி, கண்களைப் பிரகாசமாக வைக்கும் என்றெல்லாம் அதற்கு காரணங்களும் சொல்வதைப் பார்க்கிறோம்.
கண்களுக்கு வெளியே தடவிக்கொண்டால் அந்த அளவுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கண்ணுக்குள் சொட்டு மருந்து போல, விளக்கெண்ணெய் விட்டுக்கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
காலங்காலமாகப் பின்பற்றும் விஷயம்தானே? அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் விவாதம் செய்வதைப் பார்க்கிறோம்.

கண்களுக்குள் விளக்கெண்ணெய் விடுவதைத் தவிர்க்கச் சொல்வதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. விளக்கெண்ணெய் என்றாலும், அது கண்களில் தொற்று (Infection in the eyes) ஏற்படக் காரணமாகலாம். கண்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையில் ஒருவர் பயன்படுத்தும் விளக்கெண்ணெயின் தரம் எப்படிப்பட்டது என்பது மிக முக்கியம். அது சுத்திகரிக்கப்படாததாக இருக்கும்பட்சத்தில், இன்னும் ஆபத்தானது. எனவே, கண்கள் தொடர்பான எந்தப் பிரச்னைக்கும் மருத்துவ ஆலோசனையோடு சிகிச்சைகளைப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.













