தங்கம், வெள்ளி அல்ல; இனி 'இந்த' உலோகத்திற்கு அதிக மவுசு - அலர்ட் ஆகுங்கள் முதலீட...
Doctor Vikatan: ஸ்ட்ரோக் பாதிப்பு; பார்வை மற்றும் பேச்சுக் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வந்த பிறகு, பார்வைக் குறைபாடு (Vision Loss) அல்லது பேச்சுக் குறைபாடு (Speech Impairment) ஏற்பட்டால், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகள், சிகிச்சைகள் உண்டா... எத்தனை மாதங்களில் குணம் பெற முடியும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

பக்கவாதம் வந்த பிறகு, ஏற்படும் பொதுவான மற்றும் கடுமையான விளைவுகளில் பார்வைக் குறைபாடும் பேச்சுக் குறைபாடும் முக்கியமானவை. ஆனால், இவற்றை முழுமையாகவோ, ஓரளவுக்கோ சரிசெய்யும் சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் இன்று நவீன மருத்துவத்தில் உள்ளன.
இதன் பின்னணியைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஸ்ட்ரோக் என்பது என்ன என்று அறிந்துகொள்வது அவசியம். மூளையின் ஒரு பகுதியில் ரத்த உறைவினால் ரத்த ஓட்டம் தடைப்படுதல்.... அதிக ரத்த அழுத்தத்தினால் ரத்தக் குழாய் வெடித்து ரத்தக் கசிவு ஏற்படுதல்,
ரத்தக்குழாய் மாறுபாடுகளினால் அல்லது அனியூரிஸம் (aneurysm) எனப்படும் ரத்தக்குழாய் விரிவடைவதினாலும், கட்டுப்பாடற்ற (uncontrolled) ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாலும், அது வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இப்படி ஏற்படுவதால் அந்தப் பகுதி செயலிழப்பதே ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் எனப்படுகிறது.

இந்த நிகழ்வில், மூளையின் ஒளி உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதி பாதிக்கப்பட்டால் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. பார்வை நரம்பு (Optic Nerve) , மூளையில் உள்ள பரைட்டல் லோப் (Parietal Lobe) மற்றும் ஆக்ஸிபிட்டல் லோப் (Occipital Lobe) பகுதிகளில் உள்ள விஷுவல் அசோசியேஷன் ஏரியாக்கள் (Visual Association Areas) என எங்கு தடை ஏற்பட்டாலும், பார்வை குறையும்.

இதனால், ஒருபக்கப் பார்வை இழப்பு (ஹெமியனோபியா - Hemianopia), கண் இயக்கம் ஒத்துழையாமை (டிப்ளோபியா - Diplopia) அதாவது இரட்டைப் பார்வை அல்லது மாறுகண், பொருள்களைக் கண்டறிவதில் சிரமம், பொருளைப் பார்த்தாலும், அது என்னவென்று கண்டறியும் நினைவு/யோசனை வராமல் இருப்பது போன்ற பிரச்னைகள் வரலாம். விஷன் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy), நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) என இதற்கான பல சிகிச்கைகள் உள்ளன. பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர், சிகிச்சையைத் தீர்மானிப்பார்.
மூளையில் உள்ள மொழி அல்லது பேசும் மையங்கள் பாதிக்கப்பட்டால் பேச்சுக் குறைபாடு ( Aphasia) ஏற்படும். இது பேச்சு, புரிதல், எழுதுதல், அல்லது வாசிப்பில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
ஸ்பீச் மற்றும் லாங்குவேஜ் தெரபி (Speech and Language Therapy), வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை மீண்டும் கற்றல், குடும்பத்தினருக்கான வழிகாட்டல், ஆப்ஸ், விஷுவல் க்யூஸ் (Visual Cues), டேப்லெட்டுகள் போன்ற சில தொடர்பு உதவிகளும் நிலைமையைச் சமாளிக்க கைகொடுக்கும்.
மூளை மின்னோட்ட ஊக்குவிப்பு (Non-invasive Brain Stimulation) போன்ற நவீன முறைகளும் உதவியாக இருக்கலாம். சிலருக்கு டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் (Deep Brain Stimulation) சிகிச்சை தேவைப்படலாம்.

ஸ்ட்ரோக் ஏற்பட்ட 48 மணி நேரத்திலேயே பிசியோதெரபியைத் தொடங்கலாம். 72 மணி நேரத்தில் படுக்கையில் உட்கார வைக்க முயற்சி செய்யலாம்.
பெரும்பாலானோருக்கு ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் சில அசைவுகள் வரலாம். 2 முதல் 3 மாதங்களில் முன்னேற்றம் தெரியும். 2 முதல் 6 மாதங்களுக்கு தொடர்ந்து பயிற்சி செய்தால் இன்னும் முன்னேற்றம் தெரியும். சிலருக்கு ஒரு வருடம் கூட ஆகலாம்.
ஸ்ட்ரோக் தொடங்கி நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு வந்தால், ரத்த உறைவைத் தடுக்கும் மருந்து கொடுத்து முழுமையாகச் சரி செய்ய வாய்ப்பு அதிகம். நான்கரை மணி நேரத்திற்குப் பிறகு வந்தால், மூளை திசுக்கள் (tissues) சேதமடைந்து, குணமாவது தாமதமாகும்.
ஸ்ட்ரோக் காரணமாக ஏற்பட்ட பார்வை மற்றும் பேச்சுக் குறைபாடுகள், பல நேரங்களில் பயிற்சி, மறுவாழ்வு மற்றும் மருத்துவ ஆலோசனையினால் குணப்படுத்தக்கூடியவையே.
நரம்பியல் நிபுணர் (Neurologist), ஸ்பீச் தெரபிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் மற்றும் கண் மருத்துவர் ஆகியோரை அணுகுவது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















