"டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல" - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர்...
Calorie: நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னவாகும்?
"நம் உடலும் மூளையும் சரியாக இயங்குவதற்கு, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் ஆற்றல் (Energy) கிடைக்கிறது. இந்த ஆற்றல்தான், கலோரி (Calorie) எனப்படுகிறது. இந்த கலோரிகள், உடலிலுள்ள செல்களின் திறனை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன.
இந்த கலோரி அளவுதான், உடல் எடையைக் கூட்டுவது மற்றும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது'' என்கிற சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன், உணவுக்கும் கலோரிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்துப் பேசுகிறார்.

தண்ணீரில் மட்டும் கலோரிகள் கிடையாது. மற்றபடி, சமைத்த மற்றும் சமைக்காத எல்லா விதமான திட மற்றும் திரவ உணவுகள் மூலமாகவும் கலோரிகள் கிடைக்கின்றன. அதற்காக, பிடித்த உணவுகளையும், ஆசைப்பட்ட தின்பண்டங்களையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பக் கூடாது.
உடலில் ஆற்றல் (கலோரி) குறையும்போதுதான், சோர்வு, மயக்கம் ஏற்படும். எனவே, தொடர் ஓட்டத்துக்கான ஆற்றல் உடலுக்கு எப்போதும் தேவை. அதற்கு, உரிய இடைவெளியில் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். பின்னர், உட்கொண்ட உணவுகள் எரிக்கப்பட (Burn) போதிய உடலுழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருமே அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டும். நம் எடையில் (Ideal Body Weight) ஒவ்வொரு கிலோவுக்கும் தலா 30 கலோரிகள் வீதம் தினமும் தேவை. எனவே, இந்த அளவுக்கேற்ப நாம் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஒருவர் 60 கிலோ எடையில் (Ideal Body Weight) இருக்கிறார் எனில், அவருக்குத் தினமும் 1,800 கலோரிகள் (60 X 30) தேவை. இந்தக் கணக்கீடு, 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் பொருந்தும்.
உரிய எடையைவிட (Ideal Body Weight) அதிக எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 25 கலோரிகள் வீதம் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
இதுவே, உரிய எடையைவிட (Ideal Body Weight) குறைவான எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 35 கலோரிகள் கிடைக்கும் வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
இதுகுறித்து, மருத்துவர் அல்லது உணவு ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

அவரவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிலிருந்து தலா 100 - 200 கலோரிகள் அதிகமாக அல்லது குறைவாக எப்போதாவது உணவைச் சாப்பிடலாம். தவறில்லை.
இதுவே, தேவையைவிட அதிகமான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் பருமன் ஏற்படும். தேவையைவிட மிகக் குறைவான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் எடை குறையும்.
காலை உணவில் 4 இட்லி, பருப்பு சாம்பார், ஒரு முட்டை, சிறிதளவு தானியங்கள் அல்லது வேக வைத்த காய்கறிகள் அல்லது பழத்துண்டுகள் சிறிதளவு சாப்பிட்டாலே சராசரியாக 500 கலோரிகள் கிடைத்துவிடும்.
மதியத்தில், சாதம், பருப்பு சாம்பார் அல்லது தானியங்களில் செய்த குழம்பு, பொரியல், தயிர் எடுத்துக்கொண்டாலேயே 500 கலோரிகளுக்கு மேல் கிடைத்துவிடும்.
இரவில், 3 - 4 இட்லி அல்லது 3 - 4 சப்பாத்தி அல்லது ஒரு கப் கிச்சடியுடன், பருப்பு சாம்பார் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் 400 - 500 கலோரிகள் கிடைக்கும்.
உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில், டீ அல்லது காபி அல்லது ஜூஸ் அல்லது மோர் மற்றும் குறைவான அளவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் 200 - 300 கலோரிகள் கிடைக்கும்.
இந்த வகையில் தினமும் சராசரியாக 1,600 - 1,700 கலோரிகள் கிடைக்கும். எடை குறைவானவர்கள், இந்த உணவுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதைவிடச் சற்று அதிகமாகவும், எடை அதிகமுள்ளவர்கள் கொஞ்சம் குறைவான அளவிலும் உணவை உட்கொண்டால் போதுமானது.
தினமும் ஒரு மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி செய்வதால், நம் உடலில் 150 - 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதுபோலத்தான், ஜிம்மில் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கேற்ப கலோரிகள் கரைகின்றன.
கலோரிகளைக் கரைப்பது கடினம். இதுவே, கலோரிகளைக் கூட்டுவது மிக எளிது. எப்படி என்கிறீர்களா?

ஒரு டம்ளர் டீ குடிப்பதால், சர்க்கரையின் அளவைப் பொறுத்து, நம் உடலில் 30 - 50 கலோரிகள் கூடும். ஒரு கப் காபி குடித்தால் 75 கலோரிகள் கூடும்.
ஒரு வடை சாப்பிட்டாலேயே 75 - 100 கலோரிகள் கிடைக்கின்றன.
ஒரு பப்ஸ் சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன.
சிறிய அளவிலான டார்க் சாக்லேட்டில் 80 கலோரிகள் கிடைக்கின்றன.
அரை கப் கேசரி சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன.
50 கிராம் மைசூர்பா சாப்பிடுவதால் 120 கலோரிகள் கிடைக்கின்றன.
ஒரு ஜாங்கிரி சாப்பிட்டால் 200 கலோரிகள் கிடைக்கின்றன.
மீடியம் அளவிலான பீட்ஸா ஒரு துண்டு சாப்பிட்டாலே 400 - 600 கலோரிகள் கிடைக்கின்றன. சில துண்டுகள் பீட்ஸா சாப்பிட்டால், ஒருநாளைக்குத் தேவையான மற்றும் அதைவிட அதிக கலோரிகள் கிடைத்துவிடுகின்றன.
பீட்ஸாவுடன் சேர்த்து குளிர்பானம் குடித்தால், கலோரிகளின் அளவு எக்கச்சக்கமாக எகிறும்.

பீட்ஸா சாப்பிட்ட நேரம் தவிர்த்து, மற்ற இரண்டு வேளைகளிலும் உணவு சாப்பிடுவோம். அப்போது, ஒருநாளைக்குக் கிடைக்க வேண்டிய அளவைவிட அதிகமான கலோரிகள் நமக்குக் கிடைக்கும்.
இது ஏதாவது ஒருநாள் என்றால் பாதிப்பில்லை. அடிக்கடி பீட்ஸா மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் கொழுப்புச்சத்து கூடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். அதுமட்டும்தானா?
உணவுப் பொருள்களின் தன்மைக்கேற்ப அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளின் அளவு மாறுபடும். உதாரணத்துக்கு, தலா ஒரு கிராம் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளிலிருந்து, தலா 4 கலோரிகள் உடலுக்குக் கிடைக்கின்றன. இதுவே, தலா ஒரு கிராம் கொழுப்புச்சத்திலிருந்து 9 கலோரிகள் நமக்குக் கிடைக்கின்றன.
கொழுப்புச்சத்து நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிட்டால், வயிறு நிறையும். அந்த உணவுகள் மூலம், கொழுப்புச்சத்து மற்றும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கின்றன. மற்ற அடிப்படை சத்துகள் கிடைக்காமல் போவதால், ஊட்டச்சத்துக் குறைபாடு (Nutrient Deficiency) ஏற்படும்’’ என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

















