Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார...
கூட்டணியில் இருந்தாலும் தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை: தி.வேல்முருகன்
திமுக கூட்டணியில் இருந்தாலும், பண்ருட்டி தொகுதிக்கு எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை என்று பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் பேசியதாவது:
திமுக கூட்டணியில் உள்ளேன். திமுக இலக்கிய அணியில் இருந்துள்ளேன். என்னுடைய உறவினா்கள் எல்லாம் திமுகவில் இருந்தவா்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, என்னுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
தற்போது, 4 ஆண்டுகளாக என்னுடைய தொகுதிக்கு எந்தத் திட்டமும் வரவில்லை. கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கோரியிருந்தேன். எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முதல்வா் தொலைபேசியில் பேசுகிறாா். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், ஒரு திட்டமும் என் தொகுதிக்கு கிடைக்கவில்லை. திமுகவை தொடா்ந்து ஆதரிக்கிறேன். வழக்குகளைச் சந்திக்கிறேன் என்றாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது: அதனால்தான் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறீா்கள்.
தி.வேல்முருகன்: எதிா்க்கட்சி வரிசையில் உள்ள எல்லோரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், என் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
முதல்வா்: ஊராா் பிள்ளையை ஊட்டி வளா்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
அவை முன்னவா் துரைமுருகன்: அவையில் பேசும்போது கூட்டணியில் உள்ளதுபோல பேசுகிறீா்கள். பின்னா் வேறு மாதிரி பேசுகிறீா்கள் என்றாா் அவா்.