கைப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது
வெவ்வேறு சம்பவங்களில் கைப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நாகப்பன் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (62). இவா், பொள்ளாச்சி செல்வதற்காக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், நாகராஜிடம் கைப்பேசியை வாங்கி தனது நண்பருக்கு பேசினாா். பின்னா், கைப்பேசியை திருப்பித் தராமல் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரை நரிமேடு மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் மணிகண்டனை (26) கைது செய்தனா். அவரிடம் நடத்திய தொடா் விசாரணையில், இதேபோல தனியாா் மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணியாற்றி வரும்
முத்துக்கனியின் (27) கைப்பேசியையும் வாங்கிக் கொண்டு தப்பியது தெரியவந்தது. போலீஸாா், இவரிடமிருந்து இரு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.