Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷே...
"கொளத்தூரும் என் தொகுதிதான்.!" முதல்வர் விஜய் போடும் `மெகா' திட்டம்!
சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை மேம்படுத்த 1,013 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
50 திட்டங்களையும் அடுத்த மூன்றாண்டுகளில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயித்திருக்கும் முதல்வர் விஜய், வடசென்னையின் முகத்தையே மாற்றுவதற்கும் தயாராகிறார். இந்தச் சூழலில், தி.மு.க தலைவர் ஸ்டாலினை கொளத்தூரில் தோற்கடித்த வி.எஸ்.பாபுவை நேரில் அழைத்து முதல்வர் பேசியிருப்பது, கோட்டையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

அதுகுறித்து நம்மிடம் பேசிய முதல்வர் அலுவலக உயரதிகாரிகள் சிலர், "பெரம்பூர் தொகுதியில் ஐந்து விதமான திட்டங்களை அடுத்த மூன்றாண்டுகளில் முடிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் விஜய். அதாவது, 22 நகர்புற கட்டமைப்பு திட்டங்கள், மூன்று வீட்டுவசதி திட்டங்கள், குடிநீர் விநியோகத்துக்கு ஒன்பது திட்டங்கள், பொதுப் பயன்பாடுக்கு 11 திட்டங்கள், உயர்கல்விக்கும் திறன் மேம்பாட்டுக்கும் ஐந்து திட்டங்களை வகுத்திருக்கிறார் முதல்வர்.
அதில், 544 கோடி ரூபாய்க்கு வீட்டுவசதி திட்டம் அமையவிருப்பதால், அதை சரியாகச் செய்து முடிப்பதற்கு தன்னுடைய தொகுதியின் த.வெ.க மாவட்டச் செயலாளரான சிவாவை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக்கியிருக்கிறார் முதல்வர்.
இப்படி, பெரம்பூருக்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருக்கும் முதல்வர், சமீபத்தில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவை நேரில் அழைத்துப் பேசினார்.
கோட்டையில் நடந்த அந்தச் சந்திப்பில், 'தி.மு.க தலைவர் ஸ்டாலினை வீழ்த்தி, என் மீது நம்பிக்கை வைத்து கொளத்தூர் மக்கள் த.வெ.க-வை ஜெயிக்க வெச்சிருக்காங்க. அதனால, பெரம்பூருக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வர்றேனோ, அதை கொளத்தூருக்கும் கொண்டுவர முடிவு செஞ்சிருக்கேன். கொளத்தூரும் என் தொகுதிதான்.

இந்தத் திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்தலாம்னு நீங்களும் யோசிச்சு சொல்லுங்க. கொளத்தூர் தொகுதிக்கு தேவைப்படுற உள்கட்டமைப்பு பத்தியும் சொல்லுங்க. 'வி.எஸ்.பாபுவுக்கு பதில் ஸ்டாலினே இருந்திருக்கலாம்'னு மக்கள் நினைச்சுடக் கூடாது. அந்தத் தொகுதியை மக்கள் விரும்புறபடி நாம மாத்தணும். தொகுதியில நல்ல பெயரை எடுக்கணும். கொளத்தூர்ல நாம செய்ய போற மாற்றம்தான், தமிழ்நாடு முழுக்க நம்மோட மதிப்பை உயரச் செய்யும்...' என்று வி.எஸ்.பாபுவிடம் விரிவாகப் பேசினார் முதல்வர் விஜய்.
முதல்வரின் ஆலோசனைபடி, கொளத்தூருக்கென ஒரு வளர்ச்சித் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது" என்றனர் விரிவாக.
முதல்வர் விஜய்யின் கொளத்தூர் வியூகத்தின் பின்னணியில், வரக்கூடிய தேர்தல் கணக்குகளும் ஒளிந்திருப்பதாகச் சொல்கின்றன த.வெ.க வட்டாரங்கள். அதாவது, "தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சென்னையில் பெரிய ஓட்டையைப் போட்டு, துறைமுகத்தைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் வாரிச் சுருட்டிவிட்டது த.வெ.க. அதில் விழுந்த அடியிலிருந்து தி.மு.க இன்னும் மீளவில்லை.
'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' என்கிற பெயரில் தி.மு.க பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்திருந்தாலும், உண்மையிலேயே வடசென்னையின் முகத்தை மாற்றியமைத்து, பெரிய வளர்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறார் முதல்வர் விஜய். 'இவங்க ஒன்னுமே செய்யல... பேசாமல் ஸ்டாலினே ஜெயித்திருக்கலாம்..' என்ற பேச்சு எழும்பிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

வடசென்னைக்கு, குறிப்பாக கொளத்தூருக்கும் பெரம்பூருக்கும் திட்டங்களை அறிவிப்பதன் மூலமாக, ஒட்டுமொத்த சென்னை மக்களையும் தன் வசப்படுத்த திட்டமிடுகிறார். அதன்மூலமாக வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வார்டுகளில் த.வெ.க வென்று, மேயர் பதவியை வசப்படுத்திட முடியுமென கணக்குப் போடுகிறார். சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் உள்ள 38 தொகுதிகளை த.வெ.க-வின் கோட்டையாக மாற்றுவதே முதல்வரின் இலக்கு. அதன் தொடக்கம் கொளத்தூரிலும் பெரம்பூரிலும் ஆரம்பமாகியிருக்கிறது" என்கிறார்கள்.














