மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதை...
சபரிமலை தங்கம் கொள்ளை: சட்டசபையில் பாட்டுப் பாடி போராடிய எதிர்க்கட்சி; பதிலடி கொடுத்த அமைச்சர்கள்
சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு குறித்து கோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. அதில், உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் கமிஷனர், முன்னாள் தலைவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் அன்றைய தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறிவந்தன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் எழுந்து, '"2024-2025 ஆண்டுகளில் சபரிமலையில் நடந்த மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தற்போதைய தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும்.
எஸ்.ஐ.டி மீது முதல்வர் அலுவலகம் கொடுக்கும் அழுத்தத்தை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சபை நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது'' என்று கூறினார்.
மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபரிமலை தங்கக் கொள்ளைக்கு எதிரான பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர். சபாநாயகரை மறைக்கும் விதமாக பதாகைகளை உயர்த்திப் பிடித்து போராட்டம் நடத்தினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்.
அதுமட்டும் அல்லாது, அவையின் நடுவே இறங்கி 'ஸ்வர்ணம் கட்டவர் (திருடியவர்) யாரப்பா... சகாக்களாணே ஐய்யப்பா' எனக் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாட்டுப் பாடி போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளும் சி.பி.எம் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக களத்தில் இறங்கினர். இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சி.பி.எம் அமைச்சர் எம்.பி.ராஜேஷ், "ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா எனக் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் கன்வீனர் அடூர் பிரகாஷிடம் கேளுங்கள். பதில் திருப்தி இல்லாமல் இருந்தால் டெல்லி சென்று சோனியா காந்தியின் வீட்டில் போய் கேளுங்கள்.
தங்கம் கொள்ளையடித்தவரும், அதை வாங்கியவரும் சோனியா காந்தியுடன் நிற்கும் போட்டோ உள்ளது. காங்கிரீட் கொடிமரத்தை கரையான் அரித்ததாக பொய்க்கதை கூறியவர்கள் நீங்கள்.
உண்மையான குற்றவாளிகள் சிறைக்குச் செல்லும்போது பாடுவதற்கு ஒரு பாடல் வைத்துள்ளோம்" என்று காங்கிரஸ் எம்.எல்.எ-க்களைப் பார்த்து கூறினார்.

இதற்கிடையே அமைச்சர் சிவன்குட்டி, "ஸ்வர்ணம் கட்டவர் யாரப்பா... காங்கிரஸாணே ஐயப்பா" எனக் கோஷம் எழுப்பினார்.
மேலும், சோனியா காந்தியைக் கைது செய்ய வேண்டும் எனவும், அவரது வீட்டில் தங்கம் உள்ளதாகவும் அமைச்சர் சிவன்குட்டி கூறினார். அவரை சபாநாயகர் கட்டுப்படுத்தினார்.
மேலும், ''சபையில் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார்தான். நோட்டீஸ் வழங்காமல் சபையை அலங்கோலப்படுத்தக்கூடாது. இது முன்னுதாரணமான செயல் அல்ல'' எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், சோனியா காந்தி குறித்து சட்டசபையில் பேசியது குறித்து அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் சபாநாயகருக்குக் கடிதம் அளித்துள்ளார்.

















