அடுத்து வரப்போகும் மிகப்பெரிய IPO இதுதான்! | Galgotias university | IPS Finance ...
"சபரிமலை வழக்கில் இனியும் சிக்க வேண்டியவர்கள் இருந்தால் சிக்கட்டும்" - நடிகர் ஜெயராமிடம் ED விசாரணை
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
கேரள ஹைகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் மற்றும் மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
துவார பாலகர்கள் சிற்பங்களின் மீது பொருத்தப்பட்ட தங்கக் கவசங்கள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருவறை தங்கத் திருநடை சென்னையில் வைத்து பூஜை செய்தபோது அதில் நடிகர் ஜெயராம் கலந்துகொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து நடிகர் ஜெயராமை இந்த வழக்கில் சாட்சியாக மாற்ற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் அல்லாது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் நடிகர் ஜெயராமுக்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
சபரிமலை சென்றபோது அங்குவைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியின் அறிமுகம் கிடைத்ததாகவும், அவர் தனது வீட்டில் பூஜை செய்ததற்குச் சிறு தொகை தட்சிணை மட்டுமே கொடுத்ததாகவும் அவருக்கும் தனக்கும் நிதி பரிவர்த்தனை எதுவும் நடந்தது இல்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஜெயராம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் நடிகர் ஜெயராம் கூறுகையில், "சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும்.
சபரிமலை கோயில் மீது கேரள மக்களுக்கு தனிப்பட்ட உணர்வு உண்டு. எத்தனை கோயில்கள் இருந்தாலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான இடம். அப்படிப்பட்ட இடத்தில் கொள்ளை நடந்திருந்தால் அதில் உள்ள நூறு சதவிகிதம் உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது கேரளாவைச் சேர்ந்த ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நான் 50 ஆண்டுகளாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர் என்ற முறையில் இது எனது கடமை.
கேரள மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் கடந்த 38 ஆண்டுகளாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். அப்படித்தான் சபரிமலை திருநடை பூஜை செய்யும் நிகழ்ச்சிக்கும் நான் போனேன்.
என் மூலம் ஏதாவது நல்ல காரியங்கள் நடந்தால் அது நல்லதுதானே என்பதால் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். சபரிமலை வழக்கில் இனியும் சிக்கவேண்டியவர்கள் யாராவது இருந்தால் சிக்கட்டும். ஐயப்ப சுவாமி அவர்களைச் சும்மா விடமாட்டார்" என்றார்.
















