செய்திகள் :

சீன விண்வெளி நிலையத்தில் முதல் வெளிநாட்டு வீரர்... பாகிஸ்தானின் புதிய மைல்கல்!

post image

பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரராக முகமது ஜீஷான் அலி (Muhammad Zeeshan Ali), சீனாவின் ஷென்சோ-24 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். சீனாவின் தியாங்காங் (Tiangong) விண்வெளி நிலையத்தை அடைந்ததன் மூலம், அங்கு சென்ற முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பதிவையும் அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

3.5 மணி நேரப் பயணம்... விண்வெளி நிலையத்தில் இணைப்பு!

நவம்பர் 25&ம் தேதி காலை 8.18 மணிக்கு சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுகுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-2எஃப் (Long March-2F) ராக்கெட் மூலம் ஷென்சோ-24 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் சீன விண்வெளி வீரர்கள் டாங் ஹாங்போ, வூ யி ஆகியோருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலியும் பயணித்தார்.

விண்ணில் ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து விண்கலம் பிரிந்து தனது சுற்றுப்பாதையை அடைந்தது. தொடர்ந்து தானியங்கி முறையில் விண்வெளி நிலையத்தை நோக்கி நகர்ந்த விண்கலம், சுமார் 3.5 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு தியாங்காங் நிலையத்தின் தியான்ஹே மையப் பகுதியுடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன்மூலம் சீனாவின் விண்வெளித் திட்டத்தில் வெளிநாட்டு வீரர் பங்கேற்கும் பயணம் தொடங்கியிருக்கிறது.

முகமது ஜீஷான் அலி

6 மாதங்கள் அல்ல... ஒரு வாரம் மட்டுமே விண்வெளியில்!

தியாங்காங் விண்வெளி நிலையத்தில் வழக்கமாக சீன விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், முகமது ஜீஷான் அலியின் பயணம் குறுகிய காலத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் சுமார் 5 முதல் 10 நாள்கள் மட்டுமே விண்வெளி நிலையத்தில் தங்கவிருக்கிறார்.

அங்கு ஏற்கெனவே இருக்கும் விண்வெளி வீரர்களுடன் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதுடன், பாகிஸ்தான்-சீனா இணைந்து தயாரித்த ஆய்வுக் கருவிகளை நிறுவி, அவற்றின் செயல்பாடுகளைத் தொடங்கிவைப்பது அவரது முக்கியப் பணியாக இருக்கும். பின்னர், ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஷென்சோ-23 விண்கலம் மூலம் அவர் பூமிக்குத் திரும்பவிருக்கிறார்.

இதற்கிடையில், சீன விண்வெளி வீரர் ஜூ யாங்ஜூ தனது வழக்கமான 6 மாதப் பயணத்தை நீட்டித்து, மொத்தம் ஓராண்டு விண்வெளியில் தங்கவிருக்கிறார். நீண்டகால விண்வெளித் தங்குதலால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் என்னென்ன ஆய்வுகள் நடைபெறவுள்ளன?

ஷென்சோ-24 பயணத்தில் 90-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்பச் சோதனைகள் நடைபெறவிருக்கின்றன. விண்வெளி உயிரியல், நுண் ஈர்ப்பு விசையில் திரவங்களின் செயல்பாடு, விண்வெளி மருத்துவம், அடிப்படை இயற்பியல் உள்ளிட்ட பல துறைகள் இதில் அடங்கும்.

குறிப்பாக, பாகிஸ்தான்-சீனா இணைந்து மேற்கொள்ளும் நான்கு ஆய்வுத் திட்டங்களில் அலி பங்கேற்கிறார். விண்வெளியில் நுண்ணுயிரிகள் மற்றும் தாவர விதைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வது இதில் முக்கியமான பகுதியாகும். ஒளிச்சேர்க்கை செய்யும் சயனோபாக்டீரியா (Photosynthetic cyanobacteria) மற்றும் நுண்பாசிகள் (Microalgae) போன்ற உயிரினங்களை விண்வெளியில் ஆய்வு செய்வதன் மூலம், எதிர்கால விண்வெளிப் பயணங்களில் உணவு உற்பத்தி, ஆக்சிஜன் உருவாக்கம் போன்ற சாத்தியக்கூறுகளை ஆராய முடியும்.

முகமது ஜீஷான் அலி

20 மாதங்களில் சாத்தியமான பயணம்!

2025 பிப்ரவரி 28-ம் தேதி பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சுபார்கோ (SUPARCO) மற்றும் சீனாவின் விண்வெளி அமைப்பான சி.எம்.எஸ்.ஏ (CMSA) இடையே விண்வெளி வீரர் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு விண்ணப்பங்கள், தேர்வுகள், மருத்துவப் பரிசோதனைகள் எனப் பல கட்டப் பணிகள் நடைபெற்றன.

2026 ஏப்ரலில் முகமது ஜீஷான் அலி மற்றும் குர்ரம் தாவூத் (Khurram Daud) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பெய்ஜிங்கில் (Beijing) உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சியைத் தொடங்கினர். சுமார் 7 மாதங்கள் நீடித்த இந்தப் பயிற்சியில் விண்கலச் செயல்பாடுகள், அவசரநிலைச் சூழல்கள், நுண் ஈர்ப்பு விசை (Microgravity), விண்வெளி மாதிரிச் சூழல் (Space Simulation) ஆகியவற்றுடன் சீன மொழியும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

விண்கலத்தின் கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள், திரைகள் என அனைத்தும் சீன மொழியில் இருப்பதால், மொழிப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்காக அலி சீனக் கவிதைகள், பாடல்கள், கையெழுத்துப் பயிற்சி உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டார். விண்வெளியில் அவரது உணவுத் தேவைக்காக ஹலால் (Halal) உணவுகளும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

விண்வெளியிலிருந்து நிலவு வரை... அடுத்த இலக்கு!

சீனா-பாகிஸ்தான் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டில் இந்த விண்வெளிப் பயணம் இரு நாடுகளுக்கும் முக்கியமான கட்டமாக அமைந்திருக்கிறது. சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு முதல் வெளிநாட்டு வீரரை அழைத்துச் சென்றதன் மூலம், தியாங்காங் விண்வெளி நிலையத்தைச் சர்வதேச ஒத்துழைப்புக்கான தளமாக மாற்றும் முயற்சிக்கும் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கெனவே 2024-ம் ஆண்டு சீனாவின் சாங்கே-6 (Chang'e-6) நிலவுப் பயணத்தில் பாகிஸ்தானின் ஐகியூப்-கமர் (iCube-Qamar) செயற்கைக்கோள் பங்கேற்றது. தொடர்ந்து, 2028-ம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள சாங்கே-8 திட்டத்தில் பாகிஸ்தான் உருவாக்கும் ரோவர் வாகனத்தை இணைப்பதற்கான திட்டங்களும் உள்ளன.

Jio: ஜியோவின் 'Happy New Year 2.0' சலுகை! ₹399 முதல் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்; முழு விவரம்

தனது 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 'Happy New Year 2.0' என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது Reliance Jio. இதில் ₹399 மற்றும் ₹3,999 என இரண்டு முக்கியத் திட்டங்கள் இட... மேலும் பார்க்க

Nvidia: தலைமைச் செயல் அதிகாரியாக மீண்டும் ஜென்சன் ஹூவாங் நியமனம்!

என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியிலிருந்து விலகிய சில வாரங்களிலேயே அவர் மீண்டும் பழைய பொறுப்புக்குத் திரும்பியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது... மேலும் பார்க்க

"CEO ஆக ஜென்சன் தொடர்வதே Nvidia-க்கும், அமெரிக்காவிற்கும்‌ நல்லது.!" - ட்ரம்ப்

என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் சீன உளவாளி பெண் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.இந்தக் க... மேலும் பார்க்க

ஐபோன் இன்னும் ஸ்மார்ட் ஆகும்! Siri-ஐ ஓரங்கட்டி, புதிதாக வருகிறது Apple புரோஆக்டிவ் AI அசிஸ்டன்ட்!

ஆப்பிள் பயனர்களுக்கு ஒரு சூடான செய்தி!இதுவரை நாம் பயன்படுத்திய சிரி (Siri) வெறும் ஆரம்பம் தான் என்பது போல, ஒரு அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்டெண்டை உருவாக்கும் வேலையில் ஆப்பிள் மும்முரமாக இறங... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கினால் ஹெல்மெட்டிலிருந்து விரியும் ஏர்பேக் - வைரல் சீனா வீடியோ AI-ஆ?

பைக்கிலிருந்து கீழே விழும் நொடியில் ரைடரின் உடலை முழுமையாகச் சுற்றிக்கொள்ளும் ஏர்பேக்! சீனாவின் புதிய கண்டுபிடிப்பு எனப் பரவும் வீடியோ!சாலை விபத்துகளின்போது இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைக் காப்பாற்ற ... மேலும் பார்க்க

வந்துவிட்டது GTA 6 : ஏன் ஒரு கேம் நாடுகளை தாண்டிப் பேசப்படுகிறது? 5 காரணங்கள் இதோ!

‘இதுகூட நடந்துவிட்டது, இன்னும் GTA 6 வரவில்லை!’ இணையத்தில் எதிர்பாராத சம்பவம் எது நடந்தாலும், அதற்குக் கீழே இப்படியொரு மீம் வந்துவிடும். ஒரு கட்டத்தில், அந்த கேமை ஆடாதவர்களுக்குக்கூட அந்த நகைச்சுவை பு... மேலும் பார்க்க