செய்திகள் :

"டெல்லிக்குச் சென்றபோது இந்தி தெரியாமல் சிரமப்பட்டேன்" வருத்தப்பட்ட அமைச்சர் ராஜேஷ்குமார்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது. கனிமவளத் துறையின் இயக்குநரும், குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பிரபு சங்கர், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேக் வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில், "இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவருடைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, இன்றைக்கு இந்தியா ஒரு வல்லரசு நாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டவர் பண்டித ஜவஹர்லால் நேரு. அத்தகைய உலகம் போற்றும் ஒரு மாபெரும் தலைவருடைய பிறந்தநாளைத்தான் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தின விழாவாக நாம் கொண்டாடி வருகிறோம். ஏனென்றால், குழந்தைகள் ஜவஹர்லால் நேரு அவர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டு 'நேரு மாமா, நேரு மாமா' என்று அன்போடு அழைப்பார்கள். அதற்குப் பிறகு, இன்றைக்கு ஒரு நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களை இப்போதைய தலைமுறைப் பிள்ளைகளிடம் கேட்டால் 'விஜய் அங்கிள், விஜய் அங்கிள்' என்றுதான் அன்போடு அழைக்கிறார்கள். நான் தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காகச் சென்று அந்தந்தப் பகுதிகளில் வாக்குகளைச் சேகரித்தபோது, அங்குள்ள பிள்ளைகள் நான் சென்றவுடனே விசில் ஊதி 'விஜய் மாமா, விஜய் அங்கிள்' என்றுதான் உற்சாகமாகக் கூறினார்கள். அந்த அளவிற்கு இன்றைக்குப் பிள்ளைகளுடைய மனதில் நீங்காத இடம்பெற்றவராக நம்முடைய முதல்வர் திகழ்கின்றார்.

குழந்தைகளுக்கு கேக் ஊட்டும் அமைச்சர் ராஜேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவரும் கல்வி கற்றிருப்பார்கள். இங்குள்ள குடும்பங்களில் பெற்றோர்கள் கூலித் தொழில் செய்தாலும் கூட, தம்முடைய பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும், இச்சமூகத்தில் அவர்களும் முன்னேற வேண்டும், தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, மிகுந்த சிரமங்களுக்கு இடையிலும் பிள்ளைகளைப் படிக்க வைத்திருப்பார்கள். அதற்கு நானே உங்களுக்குச் சாட்சி. ஏனென்றால், நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கருங்கல் அருகிலுள்ள கருமாவிலை என்ற ஊரில் அமைந்துள்ள ஓர் அரசுத் தொடக்கப் பள்ளியில்தான் பயின்றேன். அதன் பிறகு, நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி அரசுப் பள்ளியிலும், கருங்கல் அரசுப் பள்ளியிலும் பயின்றேன். ஓரிரு இடங்களில் நான் தேர்வில் தோல்வியுற்றுத்தான் படித்தேன். நான் கல்வி பயின்ற காலங்கள் எல்லாம் மிக மிகக் கடினமான ஒரு காலகட்டமாக இருந்தது. காக்கி நிறக் கால்சட்டையும், வெள்ளை நிறச் சட்டையும்தான் எங்களின் சீருடை. அந்தச் சட்டையையும் கால்சட்டையையும் மறுநாள் அணிய வேண்டுமென்றால், அன்றைய தினமே துவைத்துக் காயப்போட வேண்டும். அதனை இஸ்திரி செய்வதற்குக்கூட வசதி கிடையாது. உணவருந்தும் டிபன் பாக்ஸில் நெருப்புக் கரிக்கட்டையைப் போட்டு அதன் மூலம் இஸ்திரி செய்வோம். அவ்வாறு இஸ்திரி செய்துதான் அன்றைக்கு நான் சட்டையும் கால்சட்டையும் அணிந்து பள்ளிக்குச் சென்ற நாட்கள் உண்டு.
அன்றைக்கு அத்தகைய சூழலில் படித்து, அதற்குப் பிறகு ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் (பி.காம்) பயின்று, அதன்பின்னர் சட்டக் கல்வி பயின்றேன். சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றி, அரசியலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, இன்றைக்கு மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடைய அரசுக் கூட்டணியில் இன்றைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

குழந்தைகள்தினவிழா

நான் படிக்கும்போது ஒரு வார்த்தையைத் தவறாக எழுதிவிட்டால் அதனை 100 முறை 'இம்போசிஷன்' எழுதி வந்து காண்பிக்குமாறு ஆசிரியர்கள் கூறுவார்கள். தற்போது அந்த இம்போசிஷன் எழுதும் முறை எவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், தண்டனையாக முழங்காலில் நிற்க வைப்பார்கள். வெயிலில் சூடான மணல் பரப்பில் முழங்காலிட்டு நிற்க வேண்டும். அன்றைக்கு அத்தகைய கண்டிப்பான சூழல் இருந்தது; ஆனால் இன்றைக்குப் பிள்ளைகளை முழங்காலில் நிற்க வைத்தாலோ அல்லது ஒரு சிறிய கம்பால் அடித்தாலோ உடனடியாகப் பயப்படக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. ஆசிரியர்களுக்கும் இதனால் பிரச்சனைகள் ஏற்படும் சூழல் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. படித்தவர் எந்த ஊரிலும் வாழலாம். நாம் நன்கு படித்திருந்தால் இவ்வுலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், நான் டெல்லிக்குச் சென்றபோது எனக்கு இந்தி மொழி தெரியாமல் சிரமப்பட்டேன். அப்போதுதான் நாமும் இந்தி மொழியைப் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எனக்குத் தோன்றியது. இவற்றையெல்லாம் நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், நாம் மீண்டும் மீண்டும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். நம் குடும்பத்தின் நிலையை நினைத்துப் பார்த்து, நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

"என்னுடன் விவாதம் நடத்தினால் மோடி பிரதமராக இருக்கமாட்டார்" - போனை பதிவு செய்வதாக கூறும் ராகுல்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் என்னிடம் கேளுங்கள் என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பொதுமக்கள் மற்றும் அவரது கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "'தீபத் தூண்' கட்டுக்கதை; நூற்றாண்டு மரபு மாறாது"- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது மற்றும் ஒட்டுமொத்த மலையையும் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: ``முதல்வர் விழிப்புணர்வுடன் பணியாற்றுகிறார்; அடுத்த 6 மாதத்தில்.."- வைகைச் செல்வன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்ன... மேலும் பார்க்க

"ஒரே நாளில் ஆந்திராவில் ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பிலான MoU; தவறவிட்ட தமிழ்நாடு?" - TRB ராஜா

ஒரே நாளில், ஆந்திரப் பிரதேசத்தின் ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு தொழிற்துறையின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்... மேலும் பார்க்க