Chiranjeevi: "சூர்யா, கல்விக்காக செய்பவை எனக்கு ஊக்கமளிக்கின்றன!" - புதிய முயற்ச...
`தடயமே இல்லாத வழக்குகளையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியும்'- தூத்துக்குடி மாணவி வழக்கு குறித்து ஐ.ஜி
தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் 11-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடித்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என பெற்றோர்கள், உறவினர்கள் திட்டவட்டமாகக் கூறினர். ஊர் மக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில், 9 நாள்களுக்குப் பிறகு குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, ”கடந்த மார்ச் 11-ம் தேதி, மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி தலைமையில் உயர் அதிகாரிகள் முகாமிட்டு, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
சுமார் 150 காவலர்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த 98 கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. சுமார் 2,524 செல்போன் எண்களின் 2,500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் நுணுக்கமாகப் பரிசோதிக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதில் 5 பேரின் டி.என்.ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், சம்பவ இடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் திடீரென மறைந்தது போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அருகில் இருந்த காற்றாலை சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருப்பதும், அது பார்த்திபனூரில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.
சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர்களின் பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்ம முனீஸ்வரன் அடையாளம் காணப்பட்டார். ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், உயர் நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்து, தினமும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திடும் நிபந்தனையின் கீழ் இருந்துள்ளார்.

தனிப்படையினரால் பிடிக்கப்பட்ட தர்ம முனீஸ்வரனிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் மாணவியைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். தகவல் சேகரிப்பு, நுணுக்கமான விசாரணை மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வு இருந்தால், தடயமே இல்லாத வழக்குகளையும் வெற்றிகரமாகத் தீர்க்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்று" என்று ஐ.ஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.




















