``சட்டமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தது" - திருநாவுக்...
திருப்பதி: 'ஒரு கிலோ முடி ரூ.84 ஆயிரம்' - பக்தர்கள் செலுத்திய முடி ரூ.119 கோடிக்கு விற்பனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்பவர்கள் மொட்டை போட்டுக்கொள்வது வழக்கம். ஏழுமலையானைத் தரிசிக்க வருபவர்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் மொட்டை போட்டுக்கொள்கின்றனர்.
அவ்வாறு மொட்டை போட்டுக்கொள்பவர்களின் முடியை திருப்பதி கோயில் நிர்வாகம் சேகரித்து அதனை ஏலம் முறையில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்து கோடிக்கணக்கில் வருவாய் பெறுகிறது . முடியை நீளம், கலர் அடிப்படையில் தரம் பிரித்து விற்பனை செய்கின்றனர்.
இந்த ஆண்டு முடியைத் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. இதில் அதிக நீளமுள்ள கருப்பு கலர் 27 இஞ்ச் முடியை விற்பனை செய்ய குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.76913 எனக் கோயில் தேவஸ்தம் போர்டு நிர்ணயம் செய்து இருந்தது.
ஆன்லைன் மூலம் இதற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகபட்சமாக 84314 ரூபாயிக்கு ஒரு கிலோ ஏலம் போனது. மொத்தம் 27 இஞ்ச் முடி 97.3 டன் இருந்தது. இதன் மூலம் கோயிலுக்கு 119 கோடி வருமானம் கிடைத்தது.

இதே கருப்பு கலர் கொண்ட 10.3 இஞ்ச் நீளமுள்ள முடியின் விலை ரூ.34209 என்ற விலையில் விற்பனையானது. அதேசமயம் 27 இஞ்ச் முடிக்குத் தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதே 27 இஞ்ச் சாம்பல் நிற முடியின் விலை விலை ரூ.60 ஆயிரத்திற்கும், 10.3 இஞ்ச் முடி ரூ.23434க்கும் விற்பனையானது.
ஒருவருக்கு 27 இஞ்ச் அளவுக்கு முடி வளர வேண்டுமானால் அதற்கு 4.5 ஆண்டுகள் முடியை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்கப்படும் முடி 100 கிராம் ரூ.8400க்கு விற்பனையாகி இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மொட்டை அடைத்துக்கொள்கின்றனர்.
அதாவது தினமும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடைத்துக்கொள்கின்றனர். அதிகபட்சமாக விழாக்காலங்களில் தினமும் 50 ஆயிரம் வரை மொட்டை போடுவதாக திருப்பதி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் முடியைத் தரம்பிரித்து சீனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர். சீனா அந்த முடியை விக் தயாரித்து அதனை அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறது. உலகில் 80 சதவீதம் முடி இந்தியாவில் இருந்து கிடைக்கிறது.
ஆனால் அதில் வெறும் 2 சதவீதம் மட்டுமே மதிப்புக்கூட்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முடியை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகம் ஆண்டுக்கு முடி விற்பனை மூலம் வெறும் 17 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டியது. ஆனால் இப்போது 100 கோடியைத் தாண்டி இருக்கிறது.











