Rain Alert: உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி; எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?
தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?
ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான் அரசின் விமானப் படை.
கடந்த 6-ம் தேதியில் இருந்து பாகிஸ்தானில் 3 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றிற்கு ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழும் தீவிரவாதிகளே காரணம் என்று குற்றம்சாட்டி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

"எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் தாலிபன் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குச் சொந்தமான ஏழு தீவிரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை உளவுத்துறை அடிப்படையிலான தகவலின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளதாவது...
"பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சியிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட பாகிஸ்தான் எப்போதும் பாடுபட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில், குடிமக்களின் பாதுகாப்பும் எங்களது முன்னுரிமையாக உள்ளது.
இந்தப் பின்னணியில், பழிவாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் தாலிபன்கள் மற்றும் அதன் துணை அமைப்புகள் மற்றும் ISKP-க்கு சொந்தமான ஏழு தீவிரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களை உளவுத்துறை தகவல் அடிப்படையில் தேர்ந்தெடுத்து குறிவைத்து துல்லியமாக தாக்கியுள்ளோம்".

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைக் குறி வைத்து தாக்கியதாக கூறுகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கமோ, "நேற்று இரவு, பாகிஸ்தான் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் எங்கள் குடிமக்கள் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்... உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.














