செய்திகள் :

தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா... உரிமையா?' - பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் சிலப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், ஆளும் அரசின் மீது தவறான பிம்பத்தைக் கட்டமைக்க இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. மற்றொருபுறம், தேர்தலுக்கு முன்பே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவாதங்களில் பதிலளிக்கப்படுகிறது.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

எனவே, இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டப் போராட்டக்காரர்களிடமே பேசிவிட்டால் என்ன? என எழுந்தக் கேள்விக்கு பதிலாக உருவானதே இந்தக் கட்டுரை.

போராட்டம் மூலம் தங்கள் கோரிக்கையின் ஒரு பகுதியை நிறைவேற்றிக்கொண்ட அரசு ஊழியர்களின் பிரதிநிதியிடம் பேசினோம்.

முதலில் இந்தியாவின் முக்கிய தேசியத் தொழிற்சங்க மையமான சி.ஐ.டி.யு (CITU) அமைப்பின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துச் சம்மேளனச் செயலாளர் கே.ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.

``தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் 22 ஆண்டுக்காலப் போராட்டத்துக்கு ஒரு பகுதி வெற்றி கிடைத்திருக்கிறது. ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் உண்டு என்கிற உத்தரவாதம் இப்போது கிடைத்துள்ளது. இருப்பினும், தொழிலாளர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்வது இதில் உள்ள முக்கிய குறைபாடு.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இத்தகைய பிடித்தம் கிடையாது. இந்த முன்னேற்றத்தை வரவேற்கும் அதே வேளையில், இதில் உள்ள குறைபாடுகளைக் களையத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும், நீண்ட காலப் போராட்டத்தின் விளைவு.

கே.ஆறுமுக நயினார்
கே.ஆறுமுக நயினார்

கடந்த 3, 4 ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். தேர்தல் நெருங்கும் வேளையில் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அரசு பணியும் என்ற அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையிலேயே இப்போது போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் எங்கு எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது? இன்னும் சொல்வதானால், ஓய்வூதியத்தைப் பறித்ததே அ.தி.மு.க அரசுதான். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போதுள்ள அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தந்ததாலேயே இந்த அறிவிப்புகள் வந்துள்ளன.

தண்ணீர் வசதி, சாலை வசதி என அடிப்படைத் தேவைகளுக்காகச் சாமானிய மக்களே சாலைமறியலில் ஈடுபடுவதுண்டு. அதேபோல்தான் ஊழியர்களின் போராட்டமும். போராட்டம் என்பது எங்களின் கடைசி ஆயுதம். எங்களின் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணர்ந்துதான் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருகிறது. அதேபோல நாங்களும் திடீரென எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. உரியமுறையில் பொதுமக்களுக்கு அறிவித்து, நோட்டீஸ் கொடுத்து, பொதுமக்களுக்கும் அரசுக்கும் அவகாசம் வழங்கிய பிறகே களமிறங்குகிறோம்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டால், அதை அடுத்து வரும் அரசு மாற்றுவது கடினம். மீறினால் நீதிமன்றம் செல்லவோ அல்லது மீண்டும் போராடவோ எங்களுக்கு ஒரு வலுவான பிடிமானம் கிடைக்கும். அதன் காரணமாகவே, துறைவாரியாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது." என்றார்.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்துவம் வரும் அங்கன்வாடி ஊழியர்களின் பிரதிநிதியாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முனீஸ்வரியிடம் பேசினோம்.

``எங்களின் போராட்டத்தில் நாங்கள் எந்தப் புதிய கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 313-வது வாக்குறுதியாக அளித்த 'அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குவோம்' என்ற வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்கிறோம்.

நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, இப்போது கேட்காமல் வேறு எப்போது கேட்பது? எங்கள் போராட்டமும் திடீரென வீதிக்கு வரவில்லை. இது எங்களின் ஐந்தாம் கட்டப் போராட்டம். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலிருந்தே மெயில் மூலமாகவும், நேடியாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். 'நிதி பற்றாக்குறை உள்ளது, கால அவகாசம் கொடுங்கள்' என்று அரசு கேட்டதால், நாங்கள் மனசாட்சியோடு இரண்டு ஆண்டுகள் பொறுமை காத்தோம். ஆனால், தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியதால் இப்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புகள்கூட எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. அங்கெல்லாம் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. அரசு செவிசாய்த்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட்டால் எங்களின் களம் போராட்டக் களம் அல்ல, தேர்தல் களம்!" என்றார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் குறித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பகத் சிங்குடன் பேசினோம்.

``2021 தேர்தலுக்கு முன்பாக, உதவித் தொகை உயர்த்தித் தர வேண்டும் என நாங்கள் நடத்தியப் போராட்டத்துக்கு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வந்தார். 'ஆட்சிக்கு வந்தவுடன் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்' என உறுதியளித்தார்.

பகத் சிங்
பகத் சிங்

ஆனால், ஆட்சிக்கு வந்து கொரோனா மற்றும் நிதிச்சுமையைக் காரணம் காட்டி, வெறும் ரூ.500 உயர்த்திவிட்டு, `படிப்படியாக உயர்த்துவோம்' எனக் கூறினார். ஆனால், அரசு காலம் தாழ்த்தியதே இன்றைய போராட்டத்திற்கு வித்திட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலகட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

உதவித்தொகை கோரி விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டம், கடந்த மாதம் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். அதன் இறுதி வாய்ப்பாகச் சென்னையில் முன்னெடுக்கப்பட்டதுதான் முற்றுகைப் போராட்டம்.

மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த வேண்டும் என்று எந்தப் பெண்களும் கேட்கவில்லை. ஆனால், அரசியல் லாபத்திற்காக அதனை உயர்த்தும் அரசு, வீதியில் இறங்கி 6 கட்டமாகப் போராடும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்த ஏன் மறுக்கிறது? உழைக்கத் தகுதியுள்ளவர்களுக்கு ஒரு நீதி, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியா? மற்ற துறைகளில் அந்தந்த அமைச்சர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் துறை முதலமைச்சரிடம் இருப்பதால், அவரைச் சந்திப்பதில் உள்ள 'புரோட்டோகால்' சிக்கல்களே கோரிக்கைகள் தேங்கிப் போகக் காரணம்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்படும் தகவல் முதலமைச்சருக்குத் தெரியாது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது திட்டமிட்ட புறக்கணிப்பு.

அரசின் ஆயுட்காலம் இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இப்போது உத்தரவு வராவிட்டால் 2031 வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதே எங்களின் அச்சம். எங்களை ஏமாற்றினால், அடுத்த தேர்தல் களத்தில் மாற்றுத்திறனாளிகளின் வலி என்ன என்பதை அரசு உணரும்." என்றார்.

எந்த ஒரு ஜனநாயக சமூகத்திலும் போராட்டம் என்பது வெறுமனே அரசுக்கு எதிரான கலகம் அல்ல. அது எளிய மக்களின் கடைசிப் புகலிடம். தற்போதைய சூழலில் நிலவும் இந்தப் போராட்டங்கள், ஏதோ ஓர் அரசியல் கட்சியின் தூண்டுதலால் உருவானவை என்று சுருக்கிப் பார்ப்பது, பல ஆண்டுக்காலமாக நீடிக்கும் அடிப்படைப் பிரச்னைகளைத் திசைதிருப்பும் முயற்சியாகவே அமையும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஊழியர்கள் உள்ளனர். அதே வேளையில், நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இடையே வாக்குறுதிகளைச் செயல்படுத்த வேண்டிய நெருக்கடியில் அரசு இருக்கிறது. 'மக்களாட்சி' என்பது வாக்குறுதிகளைத் தருவது மட்டுமல்ல, தந்த வாக்குறுதிகளைக் காலத்தே நிறைவேற்றுவதும்தான். ஊழியர்களின் இந்தக் குரல்கள் தேர்தல் களத்தில் எதிரொலிக்குமா அல்லது அதற்கு முன்பே அரசு ஒரு சுமுகத் தீர்வை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரே இரவில் 'ஓகே' ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! - திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் ... மேலும் பார்க்க

சீமான் எடுத்த முடிவு; 21-ம் தேதியை எதிர்நோக்கும் நாதக-வினர்; பரபரக்கும் மாநாட்டு ஏற்பாடுகள்!

திருச்சியில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் மாநாட்டை நடத்துகிறது, நாம் தமிழர் கட்சி. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கட்சி மாநாடு என்பதால் மேடையில் யார் இருப்பார்கள், யாரெல்லாம் பேசுவார்கள் என்ற எத... மேலும் பார்க்க

திமுக-வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை - பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று 'அன்புச் சகோதரி' என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக என்.டி.ஏ... மேலும் பார்க்க

“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” - செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுக கூட்ட... மேலும் பார்க்க

ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் - கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில், கூட்டணி மாற்றம், தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும... மேலும் பார்க்க