திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவுகள்; பின்னணி என்ன?
பழனி: "திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே தவெக-வுக்கு ஆதரவு" - எஸ்.பி. வேலுமணி
பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் அவர்களின் புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.கவின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி, “கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் எங்களுக்குப் புதிய பொறுப்புகளை அறிவித்திருந்தார். ஆனால், நானும் அண்ணன் நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட 10 மூத்த தலைவர்கள் இணைந்து, தலைமை அறிவித்த புதிய ஏற்க முடியாது. நாங்கள் சாதாரணத் தொண்டர்களாகவே தொடர்கிறோம் என ஏற்கனவே தெளிவாகக் கடிதம் கொடுத்துவிட்டோம்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வருவதற்கு அண்ணன் சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் என அனைவரும் ஆதரவு அளித்தோம். பழைய பொறுப்புகள் அப்படியே தொடரும் என்ற வாக்குறுதியின் பேரிலேயே இணைந்து பணியாற்றினோம். ஆனால், சொன்ன வார்த்தை காப்பாற்றப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராயப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், முடிவுகளை எடுக்கக் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், தோல்விகளை ஆராயாமல் தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் வழியில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றால், பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும். சின்னம்மா சசிகலா அவர்கள், டி.டி.வி. தினகரன் அவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
அ.தி.மு.க என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிக் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சி. ஆனால், இன்றைக்கு நமது கட்சி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
த.வெ.க ஆளுங்கட்சியாகவும், தி.மு.க எதிர்க்கட்சியாகவும் இருக்கும் சூழலில், அ.தி.மு.க 3-வது இடத்தில் இருப்பது வேதனையளிக்கிறது. தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தோம்” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ”கழகப் பொதுச்செயலாளர் மனசாட்சியோடு, தர்ம நியாயத்தோடு ஒரே ஒரு முறை தனது சிந்தனைக்கு உட்பட்டு நினைத்துப் பார்க்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா மறைந்தபோது, அ.தி.மு.க-விற்கு 134 சட்டமன்ற உறுப்பினர்களும், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். அவ்வளவு பெரிய பலத்தோடுதான் அம்மா ஆட்சியை விட்டுச் சென்றார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் 134 ஆக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடுத்த தேர்தலில் 47 ஆகக் குறைந்தது. 50 ஆக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 'பூஜ்ஜியம்' (Zero) ஆனது

இந்தியாவிலேயே 3-வது பெரிய அரசியல் கட்சியாக இருந்த அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' என்பார்களே, அதுபோலத்தான் இவருடைய தலைமையில் அ.தி.மு.க-வின் நிலைமை மாறியுள்ளது.
இவர் பொறுப்பேற்றது அ.தி.மு.க-வின் வளர்ச்சியா? அல்லது தளர்ச்சியா? என்பதைத் தலைமை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் பல நல்ல ஆலோசனைகளைச் சொன்னோம். ஆனால் அவர் கேட்கவில்லை. தேர்தல் வரக்கூடும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.














