கொலையில் முடிந்த மதுபோதை தகராறு, வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்த...
புதுக்கோட்டை ஆசிரியர் பொன்.சக்திவேல்; பார்வையற்றோரின் இருள் விலக்கும் `டிஜிட்டல் ஏகலைவன்!'
சக்திவேலின் டிஜிட்டல் புரட்சி
"கண் பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு புத்தகத்தை வாசித்துக் காட்ட ஆள் கிடைப்பது வரம். ஆனால், பிறர் உதவியை எதிர்பார்க்காமல் அவர்களே அந்தப் புத்தகங்களை வாசிக்கும் சூழலை உருவாக்கினால் என்ன?" – இந்த ஒற்றை லட்சியம்தான், புதுக்கோட்டை மாவட்டம், சிதம்பர விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் பொன்.சக்திவேலை ஒரு 'டிஜிட்டல் புரட்சியாளராக' மாற்றியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கத்தக்குறிச்சி அருகே உள்ள சண்முகநாதபுரம் என்கிற ஒரு குக்கிராமத்தின் ஓலைக் குடிசையில் பிறக்கும்போதே பார்வைத்திறன் சவாலுடன் பிறந்தவர் சக்திவேல். தம்பியும் அப்படியே. வறுமை ஒருபுறம், இருண்ட உலகம் மறுபுறம்.

" ஊருக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியில் ஒன்றாம் வகுப்பிலேயே இரண்டு முறை தோல்வியடைந்தவன் நான். அப்போதுதான் ஆரியப்பன் என்பவர் காட்டிய வழியில் புதுக்கோட்டை பார்வையற்றோர் அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். அங்குதான் 'பிரெய்லி' முறை எனக்கு அறிமுகமானது. ஒரு பார்வையற்றவன் மற்றவர் துணையின்றி எப்படிச் சுதந்திரமாக நடக்க வேண்டும், உண்ண வேண்டும் எனப் பயிற்சி பெற்றேன். அந்தப் பள்ளியே என் வாழ்க்கையின் திசையை மாற்றியது" எனத் தன் கடந்த காலத்தை அசைபோடுகிறார்.
அன்று ஒன்றாம் வகுப்பில் தடுமாறிய அதே மாணவன், பின்னர் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடமும் பெற்று வியக்க வைத்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, காந்தி கிராமப் பல்கலைக்கழகம் எனப் படிப்படியாக வளர்ந்து இன்று தமிழாசிரியராகவும், முனைவர் பட்ட ஆய்வாளராகவும் உயர்ந்து நிற்கிறார்.
கண்ணீரில் கனிந்த தொழில்நுட்ப அறிவு
படிக்கும் காலத்தில் புத்தகங்களை வாசித்துக் காட்ட ஆளில்லாமல், பல இரவுகள் கண்ணீரோடு உறங்கியிருக்கிறார். "கல்லூரி நாள்களில் பாடங்களை பிரெய்லி முறையில் எழுதி வைத்துக்கொண்டு, அதை என் சொந்தக் குரலிலேயே டேப் ரெக்கார்டரில் பதிவு செய்வேன். அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுத்தான் படித்தேன்," என்று சொல்லும் அவர், 2012-ல் அரசு வழங்கிய லேப்டாப்பைத் தன் 'மூன்றாவது கண்ணாக' மாற்றிக்கொண்டார்.
“2012-ல தமிழக அரசு வழங்கிய லேப்டாப் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமா அமைஞ்சுது. அதுல இருந்த 'ஸ்கிரீன் ரீடர்' மூலமா சுயமாகக் கணினியை இயக்கக் கத்துக்கிட்டேன். ஒரு புத்தகத்தை ஸ்கேன் செஞ்சு அதை வாசிக்க வைக்க ஆரம்பத்துல 4 மணிநேரம் வரை ஆகும். ஆனா விடாமுயற்சியால தொழில்நுட்பத்தைக் கத்துக்கிட்டு, நெட் (NET) தேர்வுல ஜே.ஆர்.எஃப் (JRF) பெற்றுத் தேர்ச்சி பெற்றேன்.

அப்போ ஃபெல்லோஷிப் மூலம் கிடைச்ச 69 ஆயிரம் ரூபாயிலேதான் தரமாகவும் தெளிவாகவும் ஸ்கேன் செய்யுற ஒரு மார்டன் ஸ்கேனரை வாங்கி என்னோட பி.ஹெச்.டி., படிப்புக்குப் பயன்படுத்தினேன். அது 500 பக்கப் புத்தகத்தைக்கூட ஐந்தே நிமிடத்தில் நான் படிக்கும் வகையில் மாற்றித் தரும். ஆனால், இதே வசதி அனைத்துப் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்காது அல்லவா? எனவே, அச்சுப் புத்தகங்களை அனுப்பி வைத்தால் மின்னூலாக மாற்றித் தருகிறேன் என அறிவித்தேன். நூற்றுக்கணக்கான பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்கள் எனக்குப் புத்தகங்களை அனுப்பத் தொடங்கினர். இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட அச்சுப் புத்தகங்களை மின்னூலாக மாற்றியிருக்கிறேன்.
ஆய்வாளர்கள், இலக்கிய வாசகர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்கள் எனப் பலரும் இதன் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள். ஒருமுறை தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாணவி என்னிடம், '20 புத்தகங்கள் இருக்கின்றன, ஒரு மாதத்தில் தேர்வு வருகிறது, எப்படியாவது மாற்றித் தர முடியுமா?' எனக் கேட்டார். 'நீங்கள் அனுப்பி வையுங்கள், மாற்றித் தருகிறேன்' என்றேன். 'எவ்வளவு நாளில் மாற்றித் தர முடியும்?' எனக் கேட்டார். 'ஒரு நாளில் மாற்றித் தர முடியும்' என்று சொன்னபோது, 'உண்மையிலேயே ஒரு நாளில் மாற்றித் தந்துவிட முடியுமா?' என அவர் மகிழ்ந்து போனார்.
"கூகுள் தான் என் குரு!"
சக்திவேல் வெறும் தமிழாசிரியர் மட்டுமல்ல, ஒரு தேர்ந்த யூடியூபரும் கூட. 2015-ல் 'பார்வையற்றவன்' என்ற பெயரில் சேனல் தொடங்கி, வீடியோ எடுப்பது முதல் எடிட்டிங் வரை அத்தனையையும் தனி ஆளாகச் செய்கிறார்.
"வீடியோ எடுக்கும்போது கேமரா ஆங்கிள் சரியாக இருக்கிறதா என்பதை ஐபோன் வசதியே சொல்லிவிடும். 'வலது பக்கம் திரும்புங்க, இடது பக்கம் திரும்புங்க' என அது கொடுக்கும் ஆடியோ கட்டளையை வைத்துக் கிம்பிள் (Gimbal) கருவியைப் பயன்படுத்தி வீடியோ எடுக்கிறேன். பார்வையற்றவர்கள் என்றாலே பின்னாடி ஒரு சோக இசையைப் போட்டு காட்டும் வழக்கத்தை உடைக்க வேண்டும்.

நாங்களும் மற்றவர்களைப்போல ஜாலியாகத்தான் இருக்கிறோம் என்பதற்காகத்தான் நானும் என் மனைவியும் எங்கள் வாழ்வியலை வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகிறோம்" எனச் சிரிக்கும் அவர், தன் மனைவி குழந்தைக்குச் சோறு ஊட்டும் வீடியோ 1.8 மில்லியன் பார்வைகளைக் கடந்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
இணையம் வழியாகக் கிடைத்த இல்லறம்
இவரது வாழ்க்கைத் துணையும்கூட இணையம் வழியாகவே அறிமுகமானவர். 'கிளப் ஹவுஸ்' செயலியில் அறிமுகமான சுந்தரி என்பவரைக் காதலித்து மணம் புரிந்தார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற சுந்தரியும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிதான். இன்று இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கிறது.
அமேசான் கிண்டில் (Amazon Kindle) தளத்தில் ஒரு பார்வையற்றவரால் வெளியிடப்பட்ட முதல் தமிழ்ப் புத்தகம் இவருடையதுதான். "என்றேனும் ஒரு நாள் நான் கவிதை எழுதக்கூடும்", "நூதன பிச்சைக்காரர்கள்" என இதுவரை நான்கு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
"எனக்கு ஓரளவுக்கு டூ வீலர் வண்டி ஓட்டத் தெரியும். யாரும் இல்லாத நேரத்துல ஆசைக்காக ஓட்டுவேன். சைக்கிள் கூட ஓட்டுவேன். அந்த நிதானம் எனக்குத் தெரியும். எங்க வீட்டுப் பாதைங்கிறதுனால எது நேரா போகும், எங்க வளையும்னு குத்துமதிப்பா கண்டுபிடிச்சுடுவேன்.” என்று சிறிதும் தன்னம்பிக்கை குறையாமல் பேசுகிறார்.

"தொழில்நுட்பம் இருந்தால் எதுவுமே சவால் அல்ல!"
இன்றளவும் கொரியரில் புத்தகங்களைப் பெறுவதிலிருந்து புத்தகக் கண்காட்சிகளுக்கு அலைவது வரை பல நடைமுறைச் சவால்களைச் சந்தித்து வருகிறார். ஆனாலும் தளராத உறுதியுடன் அவர் சொல்வது இதுதான்:
"பார்வையற்றவர்கள் சமூகத்தில் முன்னேற கல்விதான் ஒரே வழி. அதற்கு அடிப்படை புத்தகங்கள். முன்னெல்லாம் பகுத்தறிவை மட்டும் வைத்துப் போராடினோம். இப்போது அதனுடன் சேர்த்து நவீன தொழில்நுட்ப அறிவின் துணையோடு பார்வையில்லாத் திறன் என்பதைத் தோற்கடித்து வருகிறோம். தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால், யாருமே எதையும் சாதிக்க முடியும்!" என்கிறார் உறுதியாக. கண் முன்னே இருள் இருந்தாலும், தன் தொழில்நுட்ப அறிவால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு 'டிஜிட்டல் கண்களாக' மாறியிருக்கும் தமிழாசிரியர் பொன். சக்திவேல், ஒரு நிஜமான டிஜிட்டல் ஒளி விளக்கு..!
















