கொலையில் முடிந்த மதுபோதை தகராறு, வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்த...
`ஒருவழியா குடியிருக்க ஒரு வீடு தந்துட்டாங்க; விகடனுக்கு பெரிய நன்றி!'- நடிகர் ராஜசேகர் மனைவி தாரா
வங்கிக் கடன் கட்ட முடியாத நிலையில் தன்னுடைய வீடு ஏலத்தில் போனதையடுத்து, தனக்கு குடியிருக்க ஒரு வீடு ஒதுக்கித் தர வேண்டுமென மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்ததை அறிவீர்கள்.
இது தொடர்பாக விகடன் தளத்துக்குப் பிரத்யேகமாகப் பலமுறை பேசியிருந்தார் தாரா.
இந்த நிலையில் தற்போது தாராவுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டு மனை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு இந்த வீட்டு மனையை ஒதுக்கித் தந்துள்ளது தமிழக அரசு.
ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகரன் கோவிட் காலத்தில் சென்னையில் மரணமடைந்தார். இறக்கும்போது சென்னை வடபழனியில் வங்கியில் கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கியிருந்ந்தார். திடீரென அவர் இறந்த நிலையில், அவர் மனைவி தாராவால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகவே, வீட்டை வங்கி ஏலம் விட்டு விட்டது. எனவே குடியிருக்க வீடு இல்லாத காரணத்தால் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடு ஒதுக்கித் தரவேண்டி முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று மனு அளித்தார் தாரா. ஆனால் எந்த பலனும் கிடைத்தபாடில்லை.

இந்தச் சூழலில் திமுக ஆட்சி முடியும் தருவாயில் தமிழக அரசின் திரைக்கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ராஜசேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை வாங்கச் சென்ற இடத்தில், விருதை வழங்கிய துணை முதல்வர் உதயநிதியிடமே தன் நிலைமையைச் சொன்னார் தாரா.
விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் சொல்லியிருந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால் மேற்கொண்டு எந்த வேலையும் நடக்கவில்லை.
இந்த நிலையில்தான் தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தாராவுக்கு வீட்டு மனை ஒதுக்கியுள்ளது.

தாராவிடம் பேசினோம்.
''என்னுடைய வீடு ஏலத்துல போனதுல் இருந்து தெரிஞ்சவங்க வீடுகள்லதான் தங்கிட்டு வர்றேன். வீட்டு வசதி வாரியம் மூலமா ஒரு வீடு வாடகைக்காவது ஒதுக்கித் தரச் சொல்லி முதலமைச்சர் தனிப்பிரிவு உட்பட நிறைய இடங்களுக்கு மனு போட்டேன். வீடு கிடைக்கிற மாதிரி சில நடவடிக்கைகள் நடக்கும். பிறகு ஏதாவது தடை வந்து அது நடக்காது. இப்படியே இழுத்துட்டுப் போனதால எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு. அதேநேரம் விகடன் இந்த விஷயத்துல எனக்கு பெரிய உதவி செஞ்சது.
ஜூனியர் விகடனில் நான் பேசியிருந்ததைப் பார்த்துட்டுதான் முதல்வர் அலுவலகத்துல இருந்து பேசினாங்க. எப்படியோ பண்ணின முயற்சிக்கு பலன்ங்கிற மாதிரி இப்ப மனை ஒதுக்கி ஆர்டர் தந்திருக்காங்க. விகடனுக்கு என் நன்றியை தெரிவிச்சுக்கறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசினார் அவர்.



















