கோத்தகிரி: கலையின் வழியாக பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிர்ம...
`நல்ல சம்பளம், சின்னதா ஒரு பிசினஸ்... அதான் துபாய்லயே செட்டில் ஆகிட்டேன்!' - 'மை டியர் பூதம்' கௌதம்
சன் டிவியில் ஒளிபரப்பான 'மை டியர் பூதம்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா?
வியட்நாம் வீடு சுந்தரம், வையாபுரி, சங்கீதா பாலன், ராஜ்கமல் - லதாராவ், டி பி கஜேந்திரன் என சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் ஒருபுறமும், மாஸ்டர் பரத், கௌதம் என குழந்தை நட்சத்திரங்கள் மறுபுறமுமாக நடிக்க சுமார் ஆயிரம் எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர்.
இந்த தொடரில் கௌதம் என்கிற கேரக்டரில் நடித்த அந்தச் சிறுவனும் அந்தக் காலத்தில் ரொம்பவே பிரபலம். 'அமர்க்களம்', 'முகவரி' ஆகிய படங்களில் சிறுவயது அஜித்தாக நடித்த அந்த கௌதம் மேலும் சில சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் எங்கே இருக்கிறார்? டிவி, சினிமா என எங்கும் இவரது முகம் தென்படவில்லையே எனத் தேடிய போது, 'அவர் இப்போது துபாயில் செட்டில் ஆகி விட்டார்' என்கிற தகவல் கிடைத்தது.
அவருக்கு நன்கு நெருக்கமான சிலர் மூலம் துபாயிலிருந்தவரை லைனில் பிடித்தோம்.
''நடிப்பை விட்டு விலகி வருஷக் கணக்குல ஆச்சே, இப்ப என்ன பேசறது' எனத் தயங்கியவரை கன்வின்ஸ் செய்து உரையாடலைத் தொடர வைத்தோம்..

''சின்ன வயசுல குழந்தை நட்சத்திரமா நடிக்கத் தொடங்கினேன். என்னுடைய சித்தப்பா நீலகண்டன் ஏற்கனவே சினிமா லைன்ல இருந்ததால் அவர் மூலமா நானும் நடிக்கத் தொடங்கினேன். ராஜ் டிவி, ஜெயா டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடிச்சேன். டிவியில முகம் வந்ததும் சினிமா வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பிச்சது.
பதினைஞ்சு படங்கள் பன்னியிருப்பேன்னு நினைக்கேன். முக்கியமான படங்கள்னா 'அமர்க்களம்', 'முகவரி' படங்களைக் குறிப்பிடலாம். 'அமர்க்களம்' படத்துல நடிச்சதைப் பார்த்து அஜித் சாரே 'முகவரி' படத்துக்கும் சிபாரிசு செஞ்சார்.
டிவியில 'மை டியர் பூதம்' எனக்கு ரொம்பவே பேர் வாங்கித் தந்த தொடர். முதல் எபிசோடுல இருந்து கடைசி எபிசோடு வ்ரை அந்த தொடரில் நடிச்சிருந்தேன்.
அந்தச் சமயத்துலெல்லாம் வீட்டை விட்டு வெளியில வந்து ரோட்டுல இறங்கினாலே மக்கள் அடையாளம் கண்டு கிட்ட வந்துடுவாங்க. அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க, படிக்கிற பள்ளிக்கூட ஏரியா என எல்ல இடத்துலயும் அப்படியொரு ரெஸ்பான்ஸ் கிடைக்கும். ஒருமாதிரி ஜாலியாத்தான் போச்சு அந்த நாட்கள்.
ஆனா எல்லாமே நான் பத்தாவது வகுப்பு வர்ற வரைக்கும்தான்.
பத்தாவது வகுப்பு தொடங்கினதுமே படிப்பு பாதிக்கக் கூடாதுன்னு வீட்டுல கொஞ்ச நாள் நடிப்புக்கு பிரேக் விட்டுடலாம்னு சொன்னாங்க. அதனால வந்த வாய்ப்புகளையெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டோம்.
நிறைய வாய்ப்புகளைத் தவற விட்டதால, 'அவன் இனி நடிக்கப் போறதில்லையாம்'ங்கிற ஒரு பேச்சு பரவி, கூப்பிடுறவங்களுமே நிறுத்திக்கிட்டாங்க.

பிறகு பிளஸ் டு முடிச்சுட்டு சென்னையிலதான் காலேஜ் சேர்ந்தேன். காலேஜ் முடிச்சுட்டு நடிப்பைத் தொடரலாம்னு ஒரு எண்ணம் கூட இருந்தது.
ஆனா படிச்சு முடிச்சதுமே துபாய் போற வாய்ப்பு அமைய அங்க போயிட்டேன்.
நல்ல சம்பளத்துல அங்க ஃபர்னிச்சர் தயாரிக்கிற ஒரு பெரிய நிறுவனத்துல வேலை கிடைக்க, அங்கேயே இருந்துட்டேன்.
கூடவே சைடுல சின்னதா ஒரு பிசினஸும் தொடங்கியிருக்கேன். இது ரெண்டுக்குமே நேரம் சரியா இருக்கறதால பிறகு நடிக்கவே முடியாமப் போச்சு.
ஆனா வாய்ப்புகள் இன்னைக்கு வரை வந்துட்டுதான் இருக்கு. நடிச்சிட்டிருந்தப்ப இருந்த நண்பர்கள் கூட தொடர்புலயே இருக்கறதால அவங்கள்ல சிலரே அப்பப்ப கூப்பிட்டபடிதான் இருக்காங்க.
ஆனா மறுபடியும் டிவி, சினிமாவுல வருவேனாங்கிறதை காலம்தான் முடிவு செய்யும்னு நினைக்கிறேன்" என்கிறார் கெளதம்.



















