மதுரை மீனாட்சியம்மன் தேர் திருவிழா: அம்மனாகவும் கருப்பசாமியாகவும் வந்த குழந்தைகள...
கோத்தகிரி: கலையின் வழியாக பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிர்மலா!
பழங்குடியின மக்களிடம் பாட்டுப்பாடி, நடனமாடி கல்விக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நிர்மலா.
நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரியின் குளிர்ந்த மலைமூட்டங்களுக்கிடையிலும், சருகுகள் அடர்ந்த வானுயர்ந்த மரங்களுக்கு இடையிலும் இடையறாது சோர்வில்லாமல் பயணிக்கின்றன நிர்மலாவின் கால்கள்.
இவர் தொலைதூர பழங்குடியினக் கிராமங்களுக்குச் சென்று பாட்டுப்பாடி, பொம்மலாட்டம் கதைச்சொல்லி அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நிர்மலா கடந்த பத்து ஆண்டுகளாக, தன் சொந்த முயற்சியால் மலைகளின் நடுவே வாழும் தோடர்கள், பணியர்கள், காட்டு நாயக்கர்கள், குரும்பர், இருளர், கோத்தர்கள் போன்ற பழங்குடியின மக்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவரின் இந்தச் செயல் குறித்து அறிந்த நாம், இரண்டு நாள்கள் நிர்மலாவுடன் பயணத்தை மேற்கொண்டோம்.

முதலில் ஜக்கநாரை கிராமத்திற்குச் செல்லும்போது பேசிய நிர்மலா ,
“இங்கு இருக்கும் கிராம மக்கள் எங்கள ஏற்றுக்கொள்ளவே இல்லை. எங்கள பார்த்தாலே அவங்களுக்குப் பயமும், தயக்கமும் இருந்துச்சு. காரணம் நாங்க அவங்கள புடிச்சிட்டு போயிருவோம்னு. இந்த மக்கள் ஸ்கூல் போவதற்கு விரும்பல. நாலா-னு பழங்குடியின மக்களுக்காகவே அசோசியேஷன் இருக்கு. அது மூலமாக வந்து குழந்தைகளுக்கு ஸ்கூல் பத்தி நாங்க விழிப்புணர்வு கொடுத்தோம்.
நாங்க எவ்வளவு சொல்லியும் குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்தார்கள். ஏன்னா கல்விங்கிறது அவங்க வாழ்க்கையில தேவையற்ற ஒன்றாக நினைச்சாங்க. நாலா மூலமா ஜீப் அனுப்பி நாங்க இந்தக் குழந்தைகளை ஸ்கூலுக்குக் கூட்டிட்டு போனோம். போக போக அவங்களுக்கு கல்வியோட முக்கியத்துவம் புரிஞ்சுது.

ஆனா, இது எதுவுமே எங்களால ஈசியா பண்ண முடியல. முதல்ல அவங்களோட நம்பிக்கையைப் பெறுவதுதான் சரியா இருக்கும்ன்னு அவங்களோடு வாழ்ந்து, அவங்களோடு சிரித்து, அவங்க மொழியையே கத்துக்கிட்டு அவங்கள்ல ஒருவர மாறினேன்.
இவங்களுக்கு பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, நடனம், கதைச்சொல்வதன் மூலமா சுத்தம், சுகாதாரம், கல்வியின் முக்கியத்துவத்தை, கர்ப்பகால விழிப்புணர்வு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு இது போல அடிப்படை விஷயங்களைச் சொல்லித் தருவேன்" என்றவர், குழந்தைகள் நடுவே சென்று பொம்மலாட்டத்தை நடத்த துவங்கினார்.
“நாம் தினமும் குளிக்க வேண்டும்… நல்ல உணவு சாப்பிட வேண்டும்… பள்ளிக்குப் போக வேண்டும்…” என்று சொல்லச் சொல்ல அங்கிருந்த குழந்தைகளும் அதையே உச்சரித்தனர். அதே நேரத்தில், ``நான் பெண்களுக்கு கர்ப்பகாலப் பராமரிப்பு, மாதவிடாய் சுகாதாரம், மருத்துவ சேவையின் அவசியத்தைப் பற்றியும் இங்குள்ள பெண்களுக்குப் பாட்டுப்பாடி, கதைச்சொல்லி புரிய வைப்பேன்" என்றார்.

``இங்கு கலைமணி என்ற ஒரு சிறுமி பள்ளியில் சேர்ந்தவள், படிக்க பிடிக்காமல் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டாள். நான்தான் அவளையும் அவளுடைய பெற்றோரையும் சமாதானப்படுத்தி மீண்டும் பள்ளியில் சேர்த்தேன். அந்தச் சிறுமி பின்னர் பட்டப்படிப்பு முடித்தாள். பட்டப்படிப்பை முடித்த கலைமணி காடுகளில் கிடைக்கும் தேன், மிளகு, மூங்கில் மூலம் செய்யப்படும் பொருட்களை பேக்கிங் செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
நான் ஒரு நாள் விழிப்புணர்வு ஏற்படுத்த செல்லும்போது கலைமணியை அங்கு பார்த்தேன். அவள் இப்போது கோத்தகிரி நூலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
இங்கிருக்கக்கூடிய பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பர்யத்தையும் மறந்து வருகிறார்கள். நான் இங்கு வரும்போது எல்லாம் இவர்களின் பாரம்பர்ய உடையை அணியச் சொல்வேன். நானும் அவர்களுடன் சேர்ந்து பாரம்பர்ய நடனமாடி அதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்பாடு, கதைகள் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

நான் இவர்களைப் பார்க்க வரும்போது என்னால் முடிந்த சிறு சிறு பொருட்கள், சாக்லேட், உணவு, உடை என முடிந்த அளவு வாங்கி செல்வேன். நான் இவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்குவேன். அவர்கள் கேட்ட சிறிய விருப்பங்களையும் நிறைவேற்றுவேன்" என்றார் நிறைவாக.


















