``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி
'இந்த சமூகம் பார்க்க மறுக்கிற மனிதர்களை அவங்க ரியல் தன்மையோட காட்டணும்' - ஓவியர் சத்ய பிரியா!
மதுரையைச் சேர்ந்த ஓவியர் சத்ய பிரியா இன்ஸ்டாகிராமில் ‘மேகதூதம்’ என்ற பெயரில் அறியப்படுபவர். இவருடைய உழைக்கும் மக்கள் சார்ந்த ஓவியங்கள் மிக முக்கியமானவை. ஆகவே, இவரின் கலைச் சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஓர் கோடை மழைச் சாரலில் உரையாடத் தொடங்கினோம்.

“எனக்கு சொந்த ஊரு மதுரை சிம்மக்கல் தான். பி.ஏ. ஆங்கிலம் தியாகராஜர் காலேஜ்ல தான் படிச்சேன். அப்போ படிக்கும் போது காலேஜ் முடிச்சிட்டு போலீஸ் ஆகணுங்கிறது தான் ஆசையா இருந்தீச்சு. அதனால மதுரையிலே ஒரு அகாடமில படிச்சிட்டு இருந்தேன்.
அங்க படிச்சிட்டு இருக்கும் போது தான் எனக்கு முதல் லவ் ஆரம்பிச்சது. அந்த லவ் பிரேக்கப் ஆகும்போது அந்த ஃபீலீங்க்ஸ்ல இருந்து வெளிய வர்றதுக்காக சும்மா கிறுக்க ஆரம்பிச்சது தான் முதன்முதலா நான் வரைய ஆரம்பிச்சது. நான் வரைய ஆரம்பிக்கும் போது யாராவது இதைப்பாத்துட்டு பாராட்டுவாங்களான்னு எதையுமே நான் எதிர்ப்பார்க்கல.

அந்தச் சூழலில் ஒரு கையறு நிலையில இருக்கும் போது அந்த ஆர்ட் என்னை என்னவா மாத்துதுங்கிறது தான் எனக்கு முக்கியமா தெரிஞ்சது. நான் ஓவியம் வரைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போலீஸ் மேலயும் அரசு மேலயும் இருந்த கண்ணோட்டம் இப்போ வேற ஒண்ணா மாறியிருக்கு.
வரைய ஆரம்பிக்கும் போதே உருவங்களை தான் வரையனும்ன்னு நினைச்சேன். முதல்ல நமக்குள்ளே என்ன இருக்குதோ அதுதான் முதல்ல வெளிவரும் அதுக்கப்புறம் தான் அந்த கலை அரசியல் மையப்படவே ஆரம்பிக்கும். என்னுடைய உருவத்தை வச்சு என்னுடைய திறனை உனக்கு எதுவுமே தெரியாதுன்னு வேறொருத்தர் முடிவு பண்ணும் போது ஏற்படுற ஆதங்கம் தான் இதை நோக்கி என்னை வரைய வச்சிதுன்னு நினைக்கிறேன். நிறத்துலன்னு மட்டுமில்லாம சாதி, மதம், தொழில், பாலினம்ன்னு எல்லா விதத்திலும் மக்கள் அணுகப்படுறது எவ்வளவு கேவலமானது.

நம்ம வாழ்ற சூழல்ல இதுதான் அழகுங்கிறதை கட்டமைச்சி வச்சிருக்கிறாங்க. கருப்பா இருந்தாலும் நீ கலையா இருந்தாதான் அழகுன்னு சொல்றாங்க. அப்போ எனக்கு என்மேலயே நான் அழகு இல்லையாங்கிற கேள்வி உருவாகுது. என்னோட நிறத்தை வச்சி நான் இந்த சாதியாத்தான் இருப்பேன். எதுவுமே தெரியாம மக்கத்தான் இருப்பேன்னு அடையாளப்படுத்தப்படுறது எவ்வளவு சிக்கலானது.
எனக்கு நடந்த இந்தமாதிரியான விஷயங்கள் எதுவும் என்னை பாதிச்சதில்லைன்னு நினைச்சேன். ஆனா நான் வரையனும்ன்னு உட்காரும் போது அதுதான் வருது. ஆர்ட்டையும் ஆர்ட்டிஸ்டையும் பிரிக்கவே முடியாது. உங்களுக்குள்ள ஆழமா என்ன பதிஞ்சிருக்கோ அதுதான் வெளிய வரும். ஆர்ட்டு எந்த எல்லைக்குள்ளும் அடங்காம வளர்ந்துக்கிட்டே தான் போகும். நம்மளோட அடிப்படை பிரச்சனையோ மனிஷனை சக மனுஷனா பாக்காதது தான்.

நாம அன்றாடம் எத்தனையோ உழைக்கிற மக்களை கடந்து போறோம். நம்மைச் சுத்தி குப்பை அள்ளுறவங்களையோ, மலக்குழிக்குள் இறங்குறவங்ளைளோ ரொம்ப சாதாரணமா கடந்து போகுறோம். அவங்களை பார்க்குறதுக்கே மறுக்குறோம். அது எவ்வளவு கொடுமையானது கீழ்த்தரமானது. நம்ம கண்ணு முன்னாடி இருக்கிற மனுசங்களை பார்க்கிறதோ அவர்களை பத்தி பேசுறதோ இழிவு தெரியுது. ஆனா அவங்க சுத்தம் செய்ற இடத்துல தான் நாம வாழ்ந்திட்டு இருக்கோம். எனக்கு எது அழகாப்படுதோ முக்கியமாக படுதோ அவங்களை தான் நான் வரையிறேன்.

தெருக்கூத்து கலைஞர்களோ, கருமூட்டத்துல வேலைப்பார்க்கிறவங்களோ, உப்பளத்துள வேலைப்பார்க்கிறவங்களோ உழைக்கிற மக்கள் தான் வரையிறேன் . அவங்களை விசிப்பிலாக்கணும். அவங்க சொல்றதை கேக்கணும்.
எனக்கு சாதரணமா பார்க்க மறுக்கப்படுகிற மனிதர்களை வரையனும் அவ்வளவு தான். எங்க வீட்டுல நான் வரையிறேன்னு சொன்னப்போ எதிர்க்க தான் செஞ்சாங்க. ஆனா என்னோட முயற்சியை எப்பவும் கைவிடல. தொடர்ந்து பண்ணிட்டே தான் இருந்தேன்.

ஆர்ட் எனக்கு நிறைய நல்ல விஷயங்களை தான் செஞ்சிருக்கு. பொதுவா இங்க அழகியலை காட்டி வரையிறதை என்னால வரைய முடியல. இதெல்லாம் நம்ம எதுக்கு வரையணும்ங்கிற கேள்வி உருவாகிட்டே இருக்கு. இங்க பெரும்பாலும் உழைக்கிற மக்களாக தலித் மக்கள் தான் இருக்கிறாங்க. உடல் வருத்தி செய்யக்கூடிய, மனிதர்களை கீழ்மைப்படுத்தும் தொழில்களை எல்லாம் இந்த சமூகம் அவர்களிடம் தான் திணித்து வைத்திருக்கிறது. அதுனால அவங்களோட வலியை அழகியல் தன்மையாக காட்டுறதோ ரொமண்டிசைஸ் பண்ணுறது சரியா இருக்காதுன்னு நினைக்கிறேன். உழைக்கிற மக்களோட வலியை வாழ்க்கையை எந்தவித பூச்சும் இல்லாமல் ரியல் தன்மையோட காட்ட வேண்டிய பொறுப்பிருக்கு. அதுல நேர்மையோட செயல்படணும்ன்னு நினைக்கிறேன்.” என்பவரின் முகம் வீரியத்தன்மையோடு மிளிர்கிறது.




.jpg)












