``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி
பணமே தகுதியானால்... எளியோர் ஆட்சியாளர் ஆவதெங்கே?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
“ஏழை எளியவர்கள் ஆட்சியாளர்களாவதே சனநாயகம். பணம் படைத்தவர்களைப் பதவியில் அமர்த்துவதன்று!” என்றார் தத்துவ வித்தகர் அரிஸ்டாட்டில்! [Democracy is when the indigent, and not the men of property, are rulers. – Aristotle]
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சனநாயகத்தின் நிலை அதற்கு நேர்மாறாக இருக்கின்றது. கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்தாம் தேர்தலிலேயே நிற்க முடிகின்றது. மற்றவர்களுக்கெல்லாம் போட்டியிடக்கூட வாய்ப்பில்லை. நிலைமை இப்படியிருக்க எளியோர் ஆட்சியாளர் ஆவதெங்கே?
தனித்துப் போட்டியிட்டுத் தேர்தலில் வெல்வதென்பதும் இப்போது திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கே இயலாத காரியமாகிவிட்டதைக் காண்கிறோம். விதிவிலக்காக நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தனித்துக் களம் காண்கின்றன.
தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகள் வாக்குச் சேகரிக்கச் செல்லும் காட்சி, சங்க காலக் கூத்தர்களையும் பாணர்களையும் நினைவுபடுத்துவதாக உள்ளது.

அன்று, கூத்தர்களும் பாணர்களும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் அரசனை நாடிச்சென்று, அவனை ’வானளாவ’ப் புகழ்ந்து, தம் வறுமை நீங்குமாறு அவனிடம் பரிசில்பெற்றுத் திரும்புவர். இன்று, கட்சி வேட்பாளர்கள் மேடைபோட்டுத் தம் பெருமையைத் தாமே பேசிக்கொண்டும், தம்மை ஆட்சியில் அமர்த்தினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்; நல்லதை அளிப்போம்; அல்லதை அழிப்போம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிக்கொண்டும் வாக்குக் கேட்கத் தொடங்கிவிட்டனர். இவர்களின் வாக்குறுதிகளை நம்பலாமா வேண்டாமா என்று முடிவுசெய்து தம் பொன்னான வாக்குகளை இவர்களுக்குப் ’பரிசிலாக’ வழங்கவேண்டிய மன்னர்களாக மக்கள் உள்ளனர்.
வாக்காளர்களுக்கு வெள்ளையப்பனை இலஞ்சமாக வழங்கி அவர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் வித்தையும் இன்றைய அரசியல் கட்சிகளுக்கு அத்துபடி!
இப்படிப்பட்ட சூழலில் மக்கள் தம் விலைமதிப்பற்ற வாக்கை யாருக்கு அளிக்கவேண்டும்?
யார் ’ஓட்டு’க்கு அதிக ‘நோட்டு’க் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் போட்டுவிடலாமா?
கூடாது!
“துப்பாக்கித் தோட்டாவைவிட வலிமையானது வாக்குச்சீட்டு” என்றார் அமெரிக்க மேனாள் அதிபரான ஆபிரகாம் லிங்கன் (“The ballot is stronger than the bullet.”) ஆகவே, வாக்களிப்பதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் சீரியசாக அணுகவேண்டும்!

வாக்களிப்பதற்குமுன் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
தேர்தலில் நிற்கின்ற கட்சிகளில் எது மக்களின் நல்வாழ்வுக்கு மிகவும் அவசியமானதை, தான் ஆட்சியமைத்தால், செய்வதாகக் கூறுகின்றதோ, அதனைத் தெரிவுசெய்ய வேண்டும். சான்றாகப் பெண்களுக்கு உதவித்தொகை தரும் கட்சியைக் காட்டிலும் சாராயக் கடைகளை மூடுவதாகக் கூறும் கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவோம் என்று முழங்கும் கட்சியைவிடப் மாணவியரின்/பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மை தந்து அவர்களுக்கெதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை அளிப்போம் என்றுரைக்கும் கட்சிக்கு முதன்மை தரவேண்டும்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமானவையா, வெறும் வார்த்தை சாலங்களா என்பதை ஆய்ந்துபார்க்க வேண்டும்.
குறுகிய கால நலன்களைத் தரும் திட்டங்களைவிட, நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பும் கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
புதிய வேலைவாய்ப்புகள், கல்வித்தரம், மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் கொள்கைகள் உள்ளனவா என்பதைக் கவனித்து மதிப்பீடு செய்யவேண்டும்.
சமூகத்தில் ஒற்றுமை, சமத்துவம், அமைதி ஆகியவற்றைப் பேணும் மனப்பான்மை கொண்ட கட்சியா, பிரிவினையை தூண்டுவதில் ஆர்வமுள்ள கட்சியா என்பதை ஆராய வேண்டும்.
ஊழலற்ற தன்மை, நிர்வாகத் திறன், பொதுநலத்தில் ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் கட்சித் தலைவர்களின் நம்பகத்தன்மையை மக்கள் எடைபோட வேண்டும்.
இயற்கை வளங்களைப் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனச் சூழலியல் சார்ந்த பொறுப்புணர்வு கட்சிக்கு உள்ளதா என்பதையும் கட்டாயம் ஆய்ந்துபார்க்க வேண்டும்.
ஈதொப்பப் பல கோணங்களில் நுட்பமாய் ஆராய்ந்து, தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் நலம் பயக்கும் கட்சியைத் தெரிவுசெய்து ஆட்சியில் அமர்த்துவதே வாக்காளரின் கடமை; அதுவே வலிமையான வாக்குச்சீட்டுக்கு நாமளிக்கும் பெருமையும்கூட!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.







.jpg)










