மதுரை மீனாட்சியம்மன் தேர் திருவிழா: அம்மனாகவும் கருப்பசாமியாகவும் வந்த குழந்தைகள...
'தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா?' - வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை - தீர்வு என்ன?
திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும் நடைமுறைதான் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கிறது.
ஆனால், நான்கு வாரத்திலேயே திரைப்படம் ஓடிடி-யில் வருவதால், மக்கள் படத்தை ஓடிடி-யில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள் எனவும், இதனால் திரையரங்க பிசினஸ் பாதிக்கப்படுகிறது எனவும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அதனால் ஓடிடி வெளியீட்டை, திரையரங்க வெளியீட்டிற்கு 8 வாரங்களுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆனால், பாலிவுட்டில் இருப்பதைப் போன்ற இந்த 8 வார ஓடிடி ரிலீஸ் நடைமுறையைப் பின்பற்றினால், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது தயாரிப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது.
சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் சங்கங்கள் இது தொடர்பாக ஹைதராபாத்தில் ஆலோசித்துப் பேசியிருந்தன.
மே 10-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் உட்பட பலருடன் சேர்ந்து கலந்தாலோசிக்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. இந்தப் பிரச்னையில் தீர்வுகாண புதிய கமிட்டி ஒன்றையும் தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் தொடங்கியிருக்கின்றனர்.

இப்படியான சூழலில், இரண்டு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், "திரையரங்கிற்கு வந்து 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும் படங்களை மட்டுமே இனி திரையரங்குகளில் திரையிடுவோம்" எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், 8 வார ஓடிடி ரிலீஸ் என்பது சாத்தியமா, இதனால் தயாரிப்பாளர்களுக்கு எத்தகைய நஷ்டம் ஏற்படும் என்பது குறித்துத் தமிழ் சினிமா வட்டாரத்தினர் சிலரிடம் பேசினேன்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், "ஓடிடி (OTT) உரிமத்தைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவின் நான்கு மொழிகளையும் சேர்த்தே நிறுவனங்கள் வாங்குகின்றன. உதாரணமாக, ஒரு படத்தை அவர்கள் தமிழில் வாங்கினால், உடனடியாக மற்ற தென்னிந்திய மொழிகளில் சப்டைட்டில்கள் சேர்த்தோ அல்லது டப்பிங் செய்தோ வெளியிடுகின்றனர்.
கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விடத் தற்போதைய சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. எனவே, இது குறித்துத் தென்னிந்தியாவின் நான்கு மாநிலத் தயாரிப்பாளர்களும் இணைந்து ஹைதராபாத்தில் முதற்கட்ட ஆலோசனையை நடத்தியுள்ளோம். சினிமா என்பது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்த ஒரு கூட்டுக் குடும்பம் போன்றது.

இதன் அடுத்தகட்டமாக மே 10-ம் தேதி மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்துகொண்டு, ஆரோக்கியமான முறையில் இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காணலாம் என்று விவாதிக்க உள்ளோம்.
இதற்காகத் 'தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' மூலம் ஒரு கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு நிறையச் சிறிய திரைப்படங்கள் வருகின்றன. அதில் பல படங்களுக்குப் 'பே பெர் வியூ' (Pay Per View) முறைதான் பின்பற்றப்படுகிறது. இதில் தயாரிப்பாளர்களுக்குத்தான் ரிஸ்க் இருக்கிறது. நான்கு வாரத்தில் ஓடிடி வெளியீடு நடைமுறையில் இருக்கும்போதே, நிறையப் படங்கள் விற்பனையாவது கிடையாது.
2020-2021 காலகட்டத்திற்குப் பிறகு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் பெருமளவில் உயர்ந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
5 கோடி ரூபாய் வாங்கியவர்கள் இன்று 25 கோடி ரூபாயும், 10 கோடி வாங்கியவர்கள் 50 கோடி ரூபாயும் வாங்குகின்றனர். இதனால் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. ஓடிடி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும்போது, அதில் 50 சதவீதத்தை இந்தி மொழிக்கும், எஞ்சியதைத் தென்னிந்திய மொழிகளுக்கும் ஒதுக்குகின்றன. தற்போது 4 வார கால இடைவெளியில் படம் வெளியாவதற்கே அவர்கள் குறைந்த தொகையைத்தான் வழங்க முன்வருகின்றனர்.

இந்நிலையில், திரையரங்கு வெளியீட்டிற்கும் ஓடிடி வெளியீட்டிற்கும் இடையிலான கால இடைவெளியை 8 வாரங்களாக உயர்த்தினால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை யார் ஈடுசெய்வது என்ற கேள்வி எழுகிறது.
ஓடிடி வெளியீட்டைத் தள்ளிப்போடுவது என்பது சுலபமாக எடுக்கக்கூடிய முடிவு அல்ல. தமிழகத்தில் மட்டும் தனிப்பட்ட முடிவை எடுத்தால், ஓடிடி நிறுவனங்கள் தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. எனவேதான், நான்கு மாநிலங்களும் இணைந்து அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பில்லாத ஒரு சுமுகமான தீர்வை எட்ட முயன்று வருகிறோம்" எனக் கூறியிருக்கிறார்.
இது குறித்துத் தயாரிப்பாளர் தனஞ்செயன், "2017-லிருந்து இந்த நான்கு வார ஓடிடி முறையை மக்களுக்குப் பழக்கப்படுத்திவிட்டோம். இதிலிருந்து மாறினால் பெரிய தாக்கம் ஏற்படும். இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.
4 வார ஓடிடி ரிலீஸுக்குப் போடும் ஒப்பந்தத்திலிருந்து 8 வாரங்களுக்கு மாற்றும்போது, 50 சதவீத வருவாய் குறைய வாய்ப்பிருக்கிறது. தயாரிப்பாளருக்கு இந்த இடத்தில் நஷ்டம் ஏற்படும். தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதற்குத்தான் இந்த முடிவா?
இது குறித்துத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. இன்றைய பொருளாதாரச் சூழலில், ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு ஓடிடி தளம் மூலம் கிடைக்கும் வருமானம் மிக முக்கியமானதாக உள்ளது. தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்? இந்தி சினிமாவில் அனைத்துப் படங்களும் 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வெளியாகின்றன.

8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும் அத்தனை படங்களும் திரையரங்குகளில் நல்லபடியாக ஓடுகின்றனவா? ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதும் ஓடாததும் அந்தப் படத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்ததுதான்.
நான்கு வாரங்களுக்குப் பிறகு படம் ஓடுவதில்லை. அதன் பிறகு அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் குறைந்துவிடுகிறது. எதிர்பார்ப்பு இல்லாத திரைப்படத்தை எப்படி ஓடிடி நிறுவனங்களிடம் கொடுப்பது? எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களைத்தான் ஓடிடி நிறுவனங்கள் வாங்க நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தயாரிப்பாளர்கள்தான் சிக்கிக்கொள்கிறார்கள்.
இது தயாரிப்பாளர்களுக்கு ஆபத்தாக மாறிவிடும். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. தயாரிப்பாளர்கள் இருந்தால்தான் திரையரங்குகள் இயங்கும், திரையரங்குகள் இருந்தால்தான் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். இது தொடர்பாக அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஆலோசிக்கும்போது, ஒரு சுமுகமான முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்" என்றார்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், "எங்கள் பக்கமிருந்து நாங்கள் வைத்த கோரிக்கையைத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில் பேசியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதில் உடன்பாடில்லை எனத் தெரிவித்துவிட்டார்கள். எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
4 வாரங்களிலேயே படத்தைத் ஓடிடி-யில் வெளியிடுவது எங்களுக்குச் சிரமத்தை அளிக்கிறது. இந்தியில் அனைத்துப் படங்களும் 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வெளியிடுகிறார்கள்.
அதை இங்கு நடைமுறைப்படுத்துவது எப்படிச் சாத்தியமில்லாமல் போகும்? நம்மை விடப் பெரிய மாநிலம் அது. அதை அவர்கள் வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில், ஓடிடி தொடங்கப்பட்டது முதல், 4 வாரங்களிலேயே படம் வெளியிட்டுப் பழகிவிட்டார்கள் தான். எல்லாமே பிராக்டிஸ்தான். முன்பு ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தோம். ஹெல்மெட் போடும்படி அரசு உத்தரவு வந்ததற்குப் பிறகு நாம் ஹெல்மெட் போடத் தொடங்கிவிட்டோம்.
அதுபோன்றதொரு பயிற்சிதான் இதற்கும் பொருந்தும். முதலில் நான்கு வார ஓடிடி வெளியீடு எங்களுக்குப் பிரச்னையாக இருக்காது என்றோம். ஆனால், அது எங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.
மே 10-ம் தேதி தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கம் அனைவரும் கூடிப் பேசவிருக்கிறார்கள். அதற்கு எங்களையும் அழைத்தார்கள். ஆனால், அதில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டோம்.
தயாரிப்பாளர்கள் வேறு இடத்தில் பணத்தைப் போட்டுவிட்டு எங்களைத் தொந்தரவு செய்கிறார்கள். 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த நடிகருக்கு 70 கோடி ரூபாய், 80 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இதனால் நஷ்டமும் ஏற்படுகிறது என்கிறார்கள். எங்கள் சிரமத்தை நாங்கள் சொல்லிவிட்டோம். நாங்கள் இப்படியான நடைமுறையைத்தான் பின்பற்றத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டோம்.

அவர்களின் பதில் என்ன என்பதைக் காலம்தான் சொல்லும்" என்றவரிடம், "ஓடிடி-யில் நான்கு வாரங்களில் வெளியானாலும், 'யூத்', 'தாய் கிழவி' போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் நல்ல வசூல் ஈட்டியிருக்கிறதே?" எனக் கேட்டோம். அதற்கு அவர், "நிறையப் படங்கள் அப்படி ஓடுவதில்லை. அதுதான் பிரச்சினை.
எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும்போது, படத்தைத் திரையரங்குகளில் பார்ப்போம் என்கிற மனநிலை மக்களுக்கு ஏற்படும். இனி 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளிவரும் படத்தைத் தான் நாங்கள் திரையிடுவோம். இதை நாங்கள் நடைமுறைப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்" எனக் கூறினார்.
சினிமாவின் ஆரோக்கியமான சூழலுக்கு, தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என இருவரின் நலனும் காக்கப்பட வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும்.!




















