நெல்லை: களைகட்டிய தீபாவளி விற்பனை; பட்டாசு, ஐவுளி கடைகள், சந்தைகளில் நிரம்பிய ம...
'பெரியார் நூலகத்தை போலவே கலைஞர் நூலகத்திலும் ஊழல்' - முனைவர் பட்ட மாணவர்கள் அதிர்ச்சி புகார்!
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி நூல்களை போலி எழுத்தாளர்கள் பெயரில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ததில், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெரியார் நூலகத்தை போலவே, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பிரேம்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது, "கோவை பெரியார் நூலகத்தில் எங்களது முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக நூல்களை பார்க்க வந்தோம். அப்போது ஆயிரக்கணக்கான அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் மட்டுமே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை தந்தது. அந்த புத்தகங்கள் அனைத்தும் ஏ.ஐ மூலம் உருவாக்கிய போலி நூல்கள். இதேபோல கலைஞர் நூலகத்திலும் ஆய்வு செய்த போது, ஊழல் நடைபெற்று இருப்பது தெரியவந்தது.

பெரியார் நூலகத்தில் சர்ச்சையில் சிக்கிய பீனிக்ஸ் பதிப்பகத்தின் ஆயிரக்கணக்கான நூல்கள் கலைஞர் நூலகத்திலும் உள்ளன. அவை அனைத்தும் அறிவியல், கோட்பாடுகள் சார்ந்த ஆங்கில நூல்கள். இந்த நூல்களின் ஐ.எஸ்.பி.என் போலியானது அல்ல. ஐ.எஸ்.பி.என் வைத்து ஆய்வு செய்தபோது, பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு தேன்மொழி என்ற பெயரில் 1,000 நூல்களுக்கு ஐ.எஸ்.பி.என் வாங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பீனிக்ஸ் யு.கே, பீனிக்ஸ் யு.எஸ்.கே போன்ற பல பெயர்களில் பப்ளிகேஷன்ஸ் பெயர்கள் மாறி மாறி உள்ளன.

ஒரு பெயரில் ஐ.எஸ்.பி.என் வாங்கிவிட்டு, வேறு பெயரில் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். சுமார் 200 பக்க நூல்களுக்கு 3,000 ரூபாய் வரை விலை வைத்துள்ளனர். இந்த பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. 2022 ம் ஆண்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட இரண்டு மாதத்தில், தேன்மொழி என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஐ.எஸ்.பி.என் வாங்கியுள்ளார். 2023 ல் கலைஞர் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை ஆங்கிலத்தில் உள்ள இந்த நூல்களும் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டு, போலியான வெளிநாட்டு எழுத்தாளர்கள் பெயரை போட்டு வெளியிட்டுள்ளனர். இதனை ஆங்கிலத்தில் இருந்ததால் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகங்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை. இரண்டு நூலகத்திலும் உள்ள பீனிக்ஸ் பதிப்பகத்தின் மின்னஞ்சல் முகவரி ஒன்றுதான். ஒரு கும்பல் தொடர்ந்து திட்டமிட்டு இதனைச் செய்துள்ளனர். பீனிக்ஸ் மற்றும் அகல் விளக்கு பதிப்பகத்தின் இரண்டு முகவரியும் ஒன்றுதான். இது குறித்த ஆவணங்களை கல்வித் துறை அமைச்சரிடம் ஒப்படைக்க உள்ளோம். இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.















