செய்திகள் :

`நாவல்' எழுதி போலீசிடம் சிக்கிய கொலையாளி கிறிஸ்டியன் பாலா: போலந்தின் நிஜ கதை! - குருதிச் சுவடுகள் 1

post image

சினிமாக்களில் கூட கற்பனை செய்யத் தயங்கும் பல வினோதங்களை நிஜ வாழ்க்கை நிகழ்த்திக் காட்டிவிடுகிறது. ஒரு கொலையை நேர்த்தியாக நிகழ்த்திவிட்டு, அதைத் துப்பறியும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மறைத்துவிட்டதாக நினைக்கும் ஒரு கொலையாளி, தனது அகங்காரத்தால் தானே ஒரு க்ரைம் நாவலை எழுதி போலீஸிடம் மாட்டிக்கொண்டால்...

2000-களின் தொடக்கத்தில் போலந்து நாட்டை உலுக்கிய கிறிஸ்டியன் பாலா (Krystian Bala) வழக்கு, உலக குற்றவியல் வரலாற்றிலேயே மிக விசித்திரமான, திகிலூட்டும் ஒரு நிஜ அத்தியாயம். 'சரியான குற்றத்தை செய்துவிட்டோம்' என்ற மமதையில் ஒரு எழுத்தாளன் தனது பேனாவாலேயே தனக்கான தூக்குக் கயிற்றை நெய்த நிஜக் கதை இது.

கிறிஸ்டியன் பாலா
கிறிஸ்டியன் பாலா

ஆற்றில் மிதந்த சடலமும் முடங்கிய வழக்கும்

டிசம்பர் 2000. தென்மேற்கு போலந்தின் வ்ரோக்லாவ் (Wrocław) நகரைக் கடந்து செல்லும் ஓடர் (Oder) ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர், தண்ணீரில் ஏதோ மர்மமான பொருள் மிதப்பதைக் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது உறைந்துபோனார்கள்; அது ஒரு மனிதனின் அழுகிய சடலம். உடனே போலீஸாருக்கு தகவல் பறந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையும் சம்பவ இடத்தின் ஆய்வும் அதிகாரிகளை நிலைகுலைய வைத்தன.

அந்த நபரின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, கழுத்துடன் சேர்த்து தூக்கி நிறுத்தப்பட்ட ஒரு வகை சித்திரவதை முறையில் கட்டப்பட்டிருந்தது. கடுமையாக பட்டினி போட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட பிறகே அவர் ஆற்றில் வீசப்பட்டிருந்தார்.

விசாரணையில், இறந்தவர் அதே ஊரில் சிறிய விளம்பர நிறுவனம் நடத்திவந்த டேரியுஸ் யானிஷெவ்ஸ்கி (Dariusz Janiszewski) என்பது தெரியவந்தது. ஆனால், அவர் யாருக்கும் எதிரி அல்ல; எளிய வணிகர். அவரிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே மாயமாகியிருந்தன. யார் கொன்றார்கள், எதற்காக இவ்வளவு கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதற்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. விரல் ரேகைகள் இல்லை, நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, 2001-ல் இந்த வழக்கு போலீசாரால் தீர்க்க முடியாத `Cold Case’ கோப்புகளின் கீழ் முடக்கப்பட்டது.

கிறிஸ்டியன் பாலா
கிறிஸ்டியன் பாலா

மீண்டும் திறக்கப்பட்ட கோப்பு

2003-ம் ஆண்டு. போலந்து போலீஸின் தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜாசெக் ஸ்லெப்சோவ்ஸ்கி (Jacek Slepcow) பழைய தீர்க்கப்படாத வழக்குகளை மறுஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். யானிஷெவ்ஸ்கியின் மர்மக் கொலை அவரை மிகவும் ஈர்த்தது.

அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலகட்டம் என்பதால், கொல்லப்பட்ட யானிஷெவ்ஸ்கியின் திருடப்பட்ட செல்போன் என்னவானது என்பதை இணையம் மற்றும் சர்வதேச ஏல தளங்கள் வழியே தீவிரமாக டிராக் செய்தார். பல மாத தேடலுக்குப் பிறகு ஒரு முக்கியத் துப்பு சிக்கியது. கொல்லப்பட்ட நபரின் செல்போன், அவர் காணாமல் போன சில நாட்களிலேயே போலந்தின் பிரபலமான ‘Allegro’ என்ற ஆன்லைன் ஏல இணையதளத்தில் விற்கப்பட்டிருந்தது.

அந்த செல்போனை விற்ற கணக்கு யாருடையது என ஆராய்ந்தபோது, போலீஸுக்கு கிடைத்த பெயர்: கிறிஸ்டியன் பாலா.

யார் இந்த கிறிஸ்டியன் பாலா?

கிறிஸ்டியன் பாலா சாதாரண ஆள் அல்ல. வ்ரோக்லாவ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்ற ஒரு புத்திசாலி, உலக நாடுகளைச் சுற்றிவந்த பயணி, புகைப்படக் கலைஞர், தீவிர இலக்கிய வாசிப்பு கொண்ட ஒரு எழுத்தாளர். அவருக்கு குற்றப் பின்னணியோ, ரவுடிக் கும்பல்களுடன் தொடர்போ இருந்ததில்லை.

அப்படியானால், ஒரு தத்துவ மாணவர் எதற்காக இந்த எளிய தொழிலதிபரின் செல்போனை விற்க வேண்டும்? போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியது. அப்போதுதான் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது.

கிறிஸ்டியன் பாலா
கிறிஸ்டியன் பாலா

பாலாவின் மனைவி ஸ்டானிஸ்லாவா, பாலாவின் சந்தேகப் புத்தி, முரட்டு சுபாவம் தாங்காமல் விவாகரத்து பெற்று பிரிந்திருந்தார். விவாகரத்துக்கு சற்று முன்பு, ஸ்டானிஸ்லாவா ஒரு விடுதியில் வைத்து டேரியுஸ் யானிஷெவ்ஸ்கியை தற்செயலாக சந்தித்துப் பேசியுள்ளார்.

தன் மனைவியின் மீது அளவு கடந்த possessiveness, சந்தேகம் கொண்டிருந்த பாலாவுக்கு, தன் மனைவி யானிஷெவ்ஸ்கியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒரு குருட்டுத்தனமான ஆத்திரம் மூண்டது (உண்மையில் அவர்கள் இருவரும் உறவில் இருக்கவில்லை). பழிவாங்க வேண்டும் என்ற வெறி அவரின் மூளையில் தீயாக மூண்டுள்ளது.

நாவலான கொலை

போலீஸ் பாலாவின் பின்னணியை தோண்டியபோது மற்றொரு அதிர வைக்கும் தகவல் சிக்கியது. 2003-ம் ஆண்டில் பாலா `அமோக்’ (Amok - வெறிபிடித்த நிலை) என்ற பெயரில் ஒரு க்ரைம் நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். ஆய்வாளர் ஸ்லெப்சோவ்ஸ்கி அந்த நாவலை வாங்கி ஒரு வரி விடாமல் படித்தார். படிக்கப் படிக்க அவரது முதுகெலும்பில் நடுக்கம் பரவியது.

நாவலில் வரும் 'கிறிஸ்' என்ற பிரதான கதாபாத்திரம், தனது முன்னாள் காதலியுடன் தொடர்பு வைத்திருந்ததாக நினைக்கும் ஒரு தொழிலதிபரை கடத்துகிறது. அவனை அடித்தள அறையில் கட்டிவைத்து, பல நாட்கள் பட்டினி போட்டு சித்திரவதை செய்து, விசித்திரமான முறையில் கயிறுகளால் பிணைத்து, ஆற்றில் வீசிக் கொல்கிறது.

கிறிஸ்டியன் பாலா
கிறிஸ்டியன் பாலா

இது வெறும் புனைகதை அல்ல என்பது போலீஸாருக்குப் புரிந்தது. ஏனெனில், சடலம் மீட்கப்பட்ட போது போலீசார் பொதுவெளியில் வெளியிடாத, அந்த கொலையாளிக்கு மட்டுமே தெரிந்த உடற்கட்டு முறைகள் நாவலில் அச்சுப்பிசகாமல் விவரிக்கப்பட்டிருந்தன. பலியானவரின் உடலின் எந்தெந்தப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன என்ற உடற்கூறு விவரங்கள் நாவலில் மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. பலியான நபர் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளின் விவரங்கள் வரை கதைக்குள் நுணுக்கமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.

கிறிஸ்டியன் பாலா, தான் ஒரு `சரியான கொலையை’ (Perfect Murder) செய்துவிட்டதாகவும், இந்த முட்டாள் போலீஸாரால் தன்னைக் கண்டுபிடிக்கவே முடியாது என்றும் நம்பினார். அந்த வெற்றிக் களிப்பையும், தனது விசித்திர அகங்காரத்தையும் வெளிக்காட்டவே அதை நாவலாக எழுதி ரசித்திருக்கிறார்.

கைதும் நீதிமன்ற விசாரணையும்

2005-ம் ஆண்டில் கிறிஸ்டியன் பாலா கைது செய்யப்பட்டார். போலந்து ஊடகங்களில் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் `தன்னுடைய கொலையையே நாவலாக எழுதிய எழுத்தாளர்’ என தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

விசாரணையில் பாலா தன்னை மிகக் கடுமையாக தற்காத்துக் கொண்டார். "இது வெறும் புனைகதை. ஒரு நாவலாசிரியனின் கற்பனையை வைத்து அவனைக் கொலையாளி என எப்படி குற்றம் சாட்ட முடியும்? குற்றச் சம்பவங்களை செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்துகொண்டுதான் நாவலில் எழுதினேன்!" என்று வாதிட்டார்.

ஆனால், போலீஸ் இந்த முறை நாவலை மட்டுமே நம்பி நிற்கவில்லை. அவர்கள் திரட்டிய தடயங்கள் அசைக்க முடியாதவையாக மாறின. பலியானவரின் செல்போனை விற்ற Allegro இணையதள கணக்கு பாலாவினுடையது. சம்பவத்துக்கு முன்பு, பாலாவின் கிரெடிட் கார்டு மூலம் ஒரு குறிப்பிட்ட தடிமன் கொண்ட கயிறுகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் வாங்கப்பட்டதற்கான ரசீதுகள் கிடைத்தன.

கிறிஸ்டியன் பாலா
கிறிஸ்டியன் பாலா

இணையதள கஃபேக்களில் இருந்து யானிஷெவ்ஸ்கி தொடர்பான வழக்கு விவரங்களை பாலா தொடர்ந்து தேடி வந்ததற்கான ஐபி முகவரி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வைத்து 2007-ம் ஆண்டு, போலந்து நீதிமன்றம் கிறிஸ்டியன் பாலாவை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேல்முறையீட்டிற்குப் பிறகும், 2008-ம் ஆண்டில் அதே 25 ஆண்டு சிறைத்தண்டனை இறுதி செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

சரியான குற்றங்கள் உலகில் சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த வழக்கு இது. கிறிஸ்டியன் பாலா ஒருவேளை அந்த நாவலை எழுதாமல், அந்த பழைய செல்போனை விற்காமல் தன் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால், ஒருவேளை அந்த வழக்கு என்றென்றும் தீர்க்கப்படாமல் போயிருக்கலாம்.

ஆனால், குற்றவாளிகளின் மிகப்பெரிய பலவீனம் அவர்களது அகங்காரம்தான். தான் சட்டத்தை விட புத்திசாலி என்பதை உலகிற்குப் பறைசாற்ற வேண்டும் என்ற கிறிஸ்டியன் பாலாவின் விபரீத ஆசையே, அவர் தனது சொந்த நாவலின் மூலமாகவே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படக் காரணமானது.

மது விருந்து... அம்மிக்கல் ஆயுதம்; மனைவி உட்பட 7 பேரை சினிமா பாணியில் கொன்று புதைத்த டாக்ஸி டிரைவர்!

பெங்களூருவில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் இந்து சேகர். இவரது மனைவி சுனிதா. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

குமரி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஜினீயரிங் மாணவர்; போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டத... மேலும் பார்க்க

வேலூர்: 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற 22 வயதான இளைஞன், சாலையில் தனியாகச் சென்ற 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி அழுதபடியே வீட்டுக்கு ஓடிச் சென்று த... மேலும் பார்க்க

கேரளம்: பாலியல் புகாரை மறைக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்; மருத்துவரைத் தாக்கிய நடிகை கைது

கேரள மாநிலம் கொச்சி திருப்பூணித்துறை ஹில்பேலஸ் பகுதியில் வசித்து வருபவர் நடிகை அதுல்யா சந்திரா. மும்பையில் பிறந்து வளர்ந்த அதுல்யா சந்திரா, கொச்சியில் உள்ள பிரபல குற்றவியல் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பண... மேலும் பார்க்க

உ.பி: மனைவியை சேரில் கட்டிவைத்து எரித்த கணவர்... எலும்புக்கூடாக மீட்ட போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம், கன்னௌஜ் மாவட்டத்தில் ஜகாபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனம். இவரது கணவர் சுக்பிர் சிங். இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துத்தான் திருமணம் ச... மேலும் பார்க்க

நெல்லை: முதல்வர் நிகழ்ச்சி பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸூக்குப் பாலியல் தொல்லை - எஸ்.எஸ்.ஐ கைது!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முதல்வர் விஜய் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி 3-ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிக்காக நெல்லையில் இருந்து போலீஸார் சென்றிருந்தனர். அந்தக் குழுவில் சென்ற ப... மேலும் பார்க்க