``அங்க என்ன பண்ற.. சீக்கிரம் சேப்பாக்கத்துக்கு ஓடி வா!" - அஸ்வின் போட்ட போஸ்ட்! ...
பொலிட்டிக்கல் ஸ்ட்ராட்டஜிஸ்ட் `டு' அமைச்சர் - தவெக ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம் ஒரு பார்வை!
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட 43 வயது ஆதவ் அர்ஜுனா, தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் (மகளின் கணவர்) ஆவார்.
அடிப்படையில் விளையாட்டு வீரர் மற்றும் உடற்பயிற்சியாளரான இவர், இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆகியவற்றின் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

2015 முதல் 2021 வரை திமுகவிற்காகத் தேர்தல் வியூகப் பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2021 தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றிய பின், 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற தேர்தல் வியூக மற்றும் கொள்கை உருவாக்க நிறுவனத்தைத் தொடங்கினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து, 2024-ல் திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டை நடத்தியதில் முக்கியப் பங்காற்றினார்.
அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தபோது, "40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?" என்று அவர் எழுப்பிய கேள்வி, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவில், "பிறப்பால் ஒருவர் முதல்வர் ஆகக் கூடாது; மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்" என திமுக-வை மறைமுகமாக விமர்சித்ததால், விசிக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகினார்.
நிர்மல்குமார் தவெக-வில் இணைந்த அதே நாளில், இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா, 66,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகனை 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா களத்தில் போட்ட உழைப்பும், விஜய்யின் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.















