'சண்டை இன்னும் முடியல!' - பட்ஜெட்டுக்கு தனித்தனியாக வந்த எடப்பாடி & எஸ்.பி.வேலும...
மதுரை: 'பனை ஓலைப் பொருட்கள், செக்கு எண்ணெய்...' - காந்தி மியூசியத்தில் சிறுதானிய திருவிழா கோலாகலம்
மதுரை காந்தி மியூசியத்தில் கிரீன் ஃபார்ம்ஸ் (Green Farms) அமைப்பு சார்பில், 12-வது மாத சிறுதானிய திருவிழா மற்றும் ஆரோக்கிய சந்தை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த ஆரோக்கிய சந்தை, தனது ஓராண்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் 12-வது மாத நிகழ்வை விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் லோட்டஸ் டைம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சாஸ்திரி V. மல்லாடி மற்றும் பென் பிரீனர் (Penpreneur) மதுரை பிரிவு, நிவேதா லேடீஸ் ஹாஸ்டல் உறுப்பினருமான தனலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
பெண்களின் தொழில் முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்தச் சந்தையில், ஏராளமான பெண் தொழில்முனைவோர் மற்றும் விற்பனையாளர்கள் தாங்கள் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், சிறுதானியங்கள், கைவினைப் பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட பாரம்பர்ய உணவுப் பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

மேலும், இயற்கை சிறுதானிய விதைகள், சமையல் பொருட்கள், துணிப் பைகள், நூல் பைகள், ஆடைகள், மரச்செக்கில் ஆட்டப்பட்ட தூய்மையான எண்ணெய்கள், பூக்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன், பாரம்பர்யத்தைப் போற்றும் வகையில் பனை ஓலைப் பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், மசாலா பெட்டிகள், கைவினை ஆபரணங்கள், பஞ்சகவ்ய விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இந்தச் சந்தையின் முக்கிய சிறப்பம்சமாக, தயாரிப்பாளர்களை பொதுமக்கள் நேரடியாகச் சந்தித்து பொருட்களின் தரம், தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு குறித்து சந்தேகங்களைக் கேட்டறியும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, உணவுத் திருவிழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் உற்சாகமாக நடைபெற்றன.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று நடைபெறும் இந்த ஆரோக்கிய சந்தையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து கலந்துகொண்டு தங்களது வீட்டுத் தேவைகளுக்கான இயற்கைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் சிறுதானியங்கள், இயற்கை விதைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கிப் பயனடைந்து வருகின்றனர்.















