`அண்ணனின் சீர், தாய் கேர் முதல் ஏ.ஐ நகரம் வரை.! - தவெக அரசின் முதல் பட்ஜெட் ஹைலை...
Dhanush: 'தனுஷ் ப்ளாக்' - படித்த பள்ளிக்கு கட்டிட உதவி செய்து கொடுத்த தனுஷ்!
நடிப்பைத் தாண்டி பொதுச் சேவைகளையும் தற்போது நடிகர் தனுஷ் அதிகமாகவே செய்து வருகிறார்.
அன்னதானம், ரத்த தான உதவி எனச் சமீபத்தில் தனுஷ் ரசிகர்கள் நடத்திய நிகழ்வுகள் அனைத்தும் பேசுபொருளாயின. தற்போது தான் படித்த பள்ளிக்குக் கட்டிடம் கட்ட உதவி செய்திருக்கிறார் தனுஷ்.

சென்னை சாலிகிராமத்திலுள்ள தாய் சத்யா பள்ளியில்தான் தனுஷ் 10-ஆம் வகுப்பு வரை படித்தார்.
இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையை அகற்றிவிட்டு, மூன்று தளங்கள் கொண்ட கட்டிடத்தை தனுஷ் கட்டிக் கொடுத்துள்ளார். இதனால் அதற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், அவருடைய சகோதரிகள், பேட்ச் மாணவர்கள், அவருடைய கிளாஸ்மேட்டும் ஒளிப்பதிவாளருமான ஏ. குமரன் ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
இந்தக் கட்டிடம் குறித்தும் தனுஷ் குறித்தும் பேசிய ஒளிப்பதிவாளர் ஏ. குமரன், "தனுஷும் நானும் என் மனைவியும் இங்கேதான் 10-ஆம் வகுப்பு வரை படித்தோம். பின்னர் வேறு பள்ளியில் நானும் தனுஷும் பிளஸ் டூ படித்தோம். அவர் சினிமாவுக்குச் சென்றுவிட்டார்.

நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எதிர்பாராத விதமாகச் சினிமாவுக்கே வந்துவிட்டேன். ஒளிப்பதிவாளராக மாறி தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', 'தங்கமகன்' ஆகிய படங்களில் பணியாற்றினேன்.
இந்தப் பள்ளியின் கட்டிட நிலை பற்றி அறிந்துகொண்ட தனுஷ், தானாகவே முன்வந்து இந்த மிகப்பெரிய உதவியைச் செய்துள்ளார். இன்னும் பிற கட்டிடங்களைச் சீரமைத்தும் காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டிடங்களைக் கூடக் கட்டிக் தருவதாக அவர் கூறியிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.




















