மாவட்டத்தில் 20,570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 44.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 20,570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 44.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் மன வளா்ச்சி குன்றியோா் பராமரிப்பு உதவித் தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 12,666 பேருக்கு ரூ. 30.39 கோடி மதிப்பில் மனவளா்ச்சி குன்றியோா் பராமரிப்பு உதவித் தொகையும், 5,010 பேருக்கு ரூ. 12.02 கோடி மதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகையும், 358 பேருக்கு ரூ. 85.92 லட்சம் மதிப்பில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகை உள்பட மொத்தம் 20,570 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 44.48 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.