செய்திகள் :

மின்சார வாகனங்கள்: நம்பிக்கை, சந்தேகம், நிஜம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று ஒன்றை பட்டியலிட்டால் அது ‘சக்கரம்’ தான்...

ஆம். ‘Invention of the wheel’ என்பது மனிதகுலத்தின் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்த தருணம். தவழ்ந்து முன்னேறிக்கொண்டிருந்த மனித சமுதாய நாகரீகம் அசுரப்பாய்ச்சலில் முன்னேற உதவியது இந்தச் சக்கரம் தான். சக்கரம் என்ற ஒன்று கண்டுபிடித்த மறுநிமிடமே ஒரு கம்பை இரு சக்கரத்தின் இடையேச் செருகி வண்டியை ஒட்டிவிடவில்லை.

வட்டம், அதன் பின்பு உறுதியை மேம்படுத்த ஆரம் என்று படிப்படியாகத்தான் நாம் இன்று பார்க்கும் சக்கரம் முழு வடிவம் பெற்றது. ஒற்றை சக்கர உந்து, பின்பு இருசக்கர மிதிவண்டி என்றழைக்கப்படும் பைசைக்கிள், அதன் பின் எரிபொருள் நிரப்பி ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர மகிழுந்துக்கள், பெருவாரியான மக்கள் பயணம் செய்ய ஏற்ற பேருந்துகள், ரயில்கள் அதன் பின் ஆகாய விமானம் என கடந்த நூற்றாண்டில் மனிதன் பறந்தே விட்டான்.

சரி, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருளை நிரப்பி சொகுசாகத்தானே மோட்டார் சைக்கிளை ஒட்டிக்கொண்டிருக்கிறோம். பின்பு ஏன் மின்சார வாகனத்திற்கு மாற வேண்டும்? என்ன காரணம்?

இரு காரணங்கள். ஒன்று பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயுக்களின் மூலப்பொருள் இன்னும் 50 வருடங்கள் மட்டுமே நீடித்திருக்கும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர் (உலக எரிசக்தி பற்றிய பிபி புள்ளிவிவர மதிப்பாய்வு). இன்னும் 50 வருடங்கள் கழித்துதானே? இப்பொழுதே ஏன் இவ்வளவு பரபரப்பு என்றால் மாற்று உபாயங்களை இப்பொழுது கண்டுபிடித்து வகைமை செய்துகொண்டால் தான் இந்த நாற்பதெழு வருடங்களுக்குள் அந்த மாற்று எரிபொருளை திறம்பட உபயோகிக்கும் தொழிநுட்பத்தில் நாம் கடந்தேறியிருப்போம். 

மற்றொரு முக்கிய காரணம் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் மேன்மை. எவ்வாறு நாம் நம்முடைய வீட்டு குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று இரவு பகல் பாராது உழைத்து பொருள் சேர்க்க முனைகிறமோ அதைப்போல எதையும் எதிர்பார்க்காமல் அள்ளிக்கொடுக்கும் இந்த பூவுலகையும் நேசிக்கக் கடமைபட்டுள்ளோம். ‘என்னங்க. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு ஒட்டினா அப்படி என்ன பிரச்சினை ஆய்டுது?’ என்று நீங்கள் கேட்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரே ஒரு லிட்டர் பெட்ரோல் தான். அந்த ஒரு லிட்டர் பெட்ரோலை எரிப்பதனால் ஏற்படும் மாற்றங்கள் பட்டாம்பூச்சியின் விளைவைப்போல ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விகிதம் நீங்கள் ஒரு மாதம் பயன்படுத்தினால் தோராயமாக 75 கிலோ கரிமில வாயுவை காற்றில் கரைக்கிறீர்கள் எனக்கொள்ளலாம்.

நன்கு வளர்ந்த ஒரு மரத்தினால் ஒரு வருடத்திற்கு 25 கிலோ கரிமில வாயுவை மட்டுமே உறிந்து இழுத்துக்கொள்ள முடியும். ஆனால் மேலே சொன்ன கணக்கின் பிரகாரம் இங்கே ஒரு மாதத்திற்கே மூன்று அடர்ந்த மரங்கள் தேவை. சற்று வாசிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் தெருவில் மரங்கள் அதிகம் இருக்கின்றனவா அல்லது இருசக்கர வாகனங்கள் அதிகம் இருக்கின்றனவா என்பதை எண்ணிப்பாருங்கள்.

மாற்று எரிபொருளாக இப்பொழுது மின்சார வாகனம் நம் முன்னே நிற்கிறது. முழுக்க முழுக்க ‘zero emission’ என்று சொல்லப்படுகின்ற பூஜ்ஜிய உமிழ்வு கொள்கையை பின்பற்றி ஓடுகிற வாகனங்களே மின்சார வாகனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மின்சார வாகனத்தை இரு பகுதிகளாக அலசலாம்.

முதலாவதாக இருசக்கர மின்சாரவாகனம். ஆரம்பத்தில் ஒரு முறை சார்ஜ் போட்டுவிட்டால் 120km என்று இருந்த நிலை மாறி, இன்று பரவலான பல நடுத்தர ஸ்கூட்டர்கள் 150km முதல் 180km வரையிலும், சில ப்ரீமியம் மாடல்கள் 200km-ஐ தாண்டியும் நிஜப் பயன்பாட்டில் ரேஞ்ச் தருகின்றன.

கணினி அல்லது மொபைல் சார்ஜரைப்போன்று வீட்டிலேயே போட்டுக்கொள்ளலாம் என்பது இதனுடைய பிளஸ் பாயிண்ட். மாலை அல்லது இரவு வேளைகளில் பிளக் பாயிண்டில் சொருகிவிட்டோமென்றால் அடுத்த நாள் காலை நமது வேலைக்கு இது தயாராக இருக்கும்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி கூட பல ஸ்கூட்டர்களில் வந்துவிட்டது. பால், பேப்பர் மற்றும் தினசரி காய்கறி வியாபாரிகளிடம் இது பரவலான உபயோகத்துக்கு வந்துவிட்டது. வாகனத்தின் தினசரி ஓட்டம், பயணித்த தூரம் மற்றும் எரிபொருள் செலவுகளைப் பல மாதங்களாக நாம் தொடர்ந்து துல்லியமாகப் பதிவு செய்து கணக்கிட்டுப் பார்த்தோமென்றால், பெட்ரோல் வாகனத்தை விட EV-யின் ஒட்டுமொத்தப் பராமரிப்புச் செலவு பல மடங்கு குறைவு என்பது தெளிவாகப் புரியும்.

ஓவர்நைட் சார்ஜ் போடுவதால் லீக்காகி பேட்டரி தீப்பிடிப்பது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்று யோசிக்கலாம். மின்சார ஸ்கூட்டர் அறிமுகமான 2006 முதல் இன்று வரை இதன் தொழில்நுட்பம் முன்னேறிக்கொண்டுதான் வருகிறது. முழு சார்ஜ் ஆனபின்பு மின் சக்தியை பேட்டரிக்கு போகாத வண்ணம் தடுக்கும் ஓவர்சார்ஜிங் கட் ஆஃப் போன்ற வசதிகள் முன்பே வந்துவிட்டன. அதனால் பயம் தேவையில்லை. ஆனால் ஆங்காங்கே பேட்டரி வெடித்து தீவிபத்து போன்றவை நிகழ்கின்றன என்று உங்களுக்கு தோன்றினால், நாம் வீட்டுக்கு வீடு பயன்படுத்தும் இன்வெர்டர் பேட்டரி சாதனத்தை கண்டு தான் முதலில் பயப்பட வேண்டும். படுத்துறங்கும்பொழுது சார்ஜ் போட்டுவிட்டு தலைக்கு அருகில் வைத்துக்கொள்ளும் மொபைலை பார்த்தும் கிலி அடைய வேண்டும். ஆகவே இருசக்கர மின்சார வாகனங்களை அரசு அனுமதியளித்துள்ள தரமான நிறுவனகளிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

இரண்டாவதாக நான்கு சக்கர வாகனங்கள். முன்காலத்தில் முழு EV கார்களின் ரேஞ்ச் அதிகபட்சமாக 400km என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் இன்று, நடுத்தர விலையிலான கார்களே 350-400km ரேஞ்சையும், சற்றே விலை உயர்ந்த கார்கள் 600km முதல் 800km வரையிலும் மைலேஜ் ரேஞ்ச் தருகின்றன. தற்போதிருக்கும் நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினால் வழியில் இரண்டு மணிநேரம் சார்ஜ் செய்யக் காத்திருக்க வேண்டியதில்லை.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 40-50 கிலோமீட்டருக்கும் வந்துவிட்ட DC Fast Charging நிலையங்களில், தேநீர் அருந்தும் 20 முதல் 30 நிமிடங்களில் வண்டியை 80% வரை சார்ஜ் செய்துவிட்டுப் பயணத்தைத் தொடரலாம். பிரேக் அடித்து அடித்து ஓட்டினால் பேட்டரியில் எலெக்ட்ரிக் சார்ஜ் ஏறுகிறது. சிட்டி ரைடிங்க் பொறுத்தவரை இது மிகச் சிறந்த ஆப்ஷன்.

இது ஒரு புறமெனில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சில நடைமுறைச் சிக்கல்களும் இருந்தன. பெட்ரோல் நிரப்புவது போல ஓரிரு நிமிடங்களில் வண்டியை ரீசார்ஜ் செய்யமுடியாது. ஆனால், அதிவேக சார்ஜிங் (Fast charging) தொழில்நுட்பத்தால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கேற்ப சார்ஜிங் ஸ்டேஷனுடன் இணைந்த பல்பொருள் அங்காடி, ஓய்வறை போன்ற வணிக மேம்பாட்டு இடங்களும் நெடுஞ்சாலைகளில் உருவாகிவிட்டன.

அது போலவே, பெட்ரோல் வண்டிகள் இரண்டு மாதம் உபயோகப்படுத்தவில்லை என்றால் கூட ஸ்டார்ட் செய்து ஓட்டலாம். மூன்று நான்கு முறை கிக் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் EV யில் அதுபோன்று வாய்ப்பில்லை. ஸ்டாண்ட் பை டைம் என்று ஒன்று இருக்கிறது. மொபைல் சார்ஜ் போல இறங்கி கொண்டே இருக்கும். வண்டி ஓட்ட வில்லையென்றாலும் பேட்டரியை அப்படியே போட்டு விட முடியாது. சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் நடந்தே தீர வேண்டும்.

ஜீரோ மெய்ன்டனன்ஸ் என்று சொன்னாலும் குறிப்பிட்ட காலத்தில் இதன் பேட்டரியை மாற்ற வேண்டியிருக்கும். ஆரம்பக் காலகட்டங்களில் இது வாகனத்தின் விலையில் 60% ஆக இருந்தது. ஆனால் இன்று லித்தியம்-அயன் மற்றும் LFP பேட்டரிகளின் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறைந்துவிட்டதால், இது வாகனத்தின் விலையில் 35% முதல் 40% ஆகக் குறைந்துவிட்டது.

இவையெல்லாவற்றையும் தாண்டி நான் EV வாங்கிவிட்டேன். இப்பொழுது நான் சுற்று சூழலுக்கு நண்பன் தானே என்றால், கட்டாயாமாக இல்லை. ஏன்?

இந்த வாகனங்களுக்கான மின்சாரத்தேவைக்கான உற்பத்தியை எதன் மூலம் நிறைவேற்றப்போகிறோம் என்பது முக்கிய கேள்வியாகிறது. மீண்டும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் தான் என்றால், இந்த மாற்றத்திற்கான அர்த்தமே தகுதியிழந்து விடுகிறது. ஆனால் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அரசின் மானியத் திட்டங்களால் இன்று வீடுகள்தோறும் சோலார் பேனல்கள் அமைப்பது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. நமது வீட்டின் மேற்கூரையில் சூரிய ஒளியில் உற்பத்தி செய்த மின்சாரத்தில் வண்டியை சார்ஜ் செய்வது முழுமையான ‘ஸீரோ எமிஷன்’ குறிக்கோளை தற்போது சாத்தியமாக்கியுள்ளது.

மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களில் உபயோகப்படுத்தும் இந்த பேட்டரி குப்பைகளை எவ்வாறு கையாளப்போகிறோம் அல்லது மறுசுழற்சி செய்யப்போகிறோம் என்பது மிக மிக முக்கியம். சில ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சி நிலையில் இருந்த இந்த மறுசுழற்சி கட்டமைப்பு, இன்று லித்தியம் பேட்டரிகளை 95% வரை மறுசுழற்சி செய்து மீண்டும் புதிய பேட்டரிகள் தயாரிக்கும் அளவுக்கு (Circular Economy) இந்தியாவில் பெரும் நிறுவனங்களால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் வாகனத்தின் பேட்டரி ஆயுள் அதாவது ஸ்டேட் ஆஃப் ஹெல்த் என்பது 70 சதவீதத்துக்கும் கீழ் சென்றுவிட்டால் அதை வாகனத்தில் உபயோகபடுத்த முடியாது. இதுபோன்று குறைந்த SoH உள்ள பேட்டரிகள் சேமிப்பு அமைப்பு போன்ற இரண்டாம் கட்ட பயன்பாடுக்கு செல்கின்றன. அதன் பிறகு முழுமையாக பிரித்தெடுக்கபட்டு முழுமையான மறுசுழற்சிக்கு தயாராகின்றன.

இந்திய அரசு EVகளை ஊக்குவிக்க பல கொள்கைகளை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிட வேண்டிதிருக்கிறது.

EMPS (Electric Mobility Promotion Scheme): EV வாங்குதலுக்கான புதிய மானியத் திட்டம்.

மாநில அரசுகளின் சலுகைகள்: பல மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்கு 100% சாலை வரி (Road Tax) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

PLI Scheme: Advanced Chemistry Cell (ACC) பேட்டரி உற்பத்திக்கு ஊக்கம்.

Charging Standards: Bharat DC-001 (சின்ன கார்களுக்கு), CCS2 (பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பெரிய ரக பேட்டரிகளுக்கு).

தற்பொழுது கையிலிருக்கும் பெட்ரோல் டீசல் வாகனத்தை விடுத்து எலெக்ட்ரிக் வாகனம் வாங்கலாமா கூடாதா என்று கேள்வி எழும் பட்சத்தில், வளர்ந்து வரும் சார்ஜிங் கட்டமைப்பு, பேட்டரி கழிவுகளை மறுசுழற்சி செய்து கையாளும் நவீன தொழில்நுட்பம் மற்றும் அரசின் ஊக்கக் கொள்கைகள் ஆகியவற்றை நோக்கும்போது, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு நிலையான தீர்வாக முழுமையடைந்துவிட்டன என்றே கூறலாம்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

கைது! | குறுந்தொகை முதல் சமூக ஊடகங்கள் வரை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வேலூரிலிருந்து உலக அரங்கம் வரை: இந்தியத் தடுப்பூசித் துறையின் வழிகாட்டித் தாய்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோட்டைக்குள்ளே குள்ள நரி | உளவன் 15

உளவன் 15கோட்டைக்குள்ளே குள்ள நரிவோல்கோவ் (Konstantin Dmitrievich Volkov). இந்தப் பெயர் நினைவிருக்கிறதா? இஸ்தான்புல்லில் இருந்து மாஸ்கோவுக்கு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டாரே… ரஷ்ய துணைத் தூதராக - த... மேலும் பார்க்க

'வீடே நூலகம்' நூலகர் இல்லா இலவச நூலகம் அமைத்த திருச்சி யோகா மாஸ்டர் - 30 ஆண்டு பழம்பொருள் காட்சியகம்

நம் சமூகத்தின் ஆகப்பெரும் செல்வம் கல்வி. மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். ஒருவரின் செல்வத்தையோ, சொத்தையோ அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வதைக் காட்டிலும், அறிவைக் கடத்துவதற்கு புத்தகங்களால் ம... மேலும் பார்க்க

பணத்தை அனுப்ப முடிகிறது; நேரத்தை அல்ல! – வீடியோ கால்களில் இயங்கும் 'Long-distance Parenting'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'பாத்துக்கலாம்' என்ற ஒற்றை வார்த்தை! – மூடநம்பிக்கைகளை உடைத்து தன்னம்பிக்கை விதைத்த தாய்க்கிழவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க