தீரன் சின்னமலை நினைவு நாள்: சாலைகளில் எல்லை மீறிய இளைஞர்கள், திணறிய காவல்துறை!
மும்பை எக்ஸ்ப்ரஸ் : க்ரே(ட்) காமெடி! | `சினி'ஸ்கோப் 12
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!
மூன்று உத்தமமான ஏழைகள், ஒரு சிறுவனைக் கடத்திவைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். அந்த மூன்று பேரில் ஒருவனான ராஜுவுக்கு எதிர்பாராத விதமாக உடல்நலமில்லாமல் போய்விடுகிறது. குழுத்தலைவனான சிதம்பரத்துக்கு, ராஜுவுக்காக தங்களது கடத்தல் திட்டத்தைக் கைவிடுவதில் சம்மதமில்லை. ’பேட் லக் ராஜு’ என்று சொல்லி அவனைக் கைவிடப் பார்க்கிறான். ஆனால், ராஜுவின் மனைவி துர்கா அவர்களையே பிளாக்மெயில் செய்து, ’என் பங்கு வந்தாக வேண்டும், வேண்டுமானால் ராஜுவுக்குப் பதிலாக என் தம்பி அவினாசியைக் கடத்தலுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று மடக்குகிறாள்.
வேறு வழியில்லாமல் சிதம்பரமும், ஜான்சனும் போய் சர்க்கஸில் மரணக்கிணற்றில் பைக் ஓட்டிக் கொண்டிருக்கும் அவினாசியைக் காரில் அழைத்துக்கொண்டு வருகிறார்கள். அவினாசிக்கு காது கேட்காது என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஒரு சிக்னலில் கார் நிற்கும் போது, காருக்கு வெளியே கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து அவினாசி கண்கலங்குவான்.
”இப்படித்தான் நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போது என்னை இடுப்புல வைச்சிகிட்டு, எங்கக்கா துர்கா சிக்னல் சிக்னலா பிச்சை எடுப்பா…”
முதலில் ஜான்சன் அதற்கு ஜாலியாகவும், வியப்பாகவும் ஒரு பதில் சொல்லுவான்,
“துர்காக்கா பிச்சை எடுத்துகிட்டிருந்துச்சா? ராஜுவைப் பாத்தாதான் பிச்சக்காரன் மாதிரி இருக்குது, இல்ல பாஸ்!”

’அட, இவன் ஒருத்தன், அவனே சோகத்துல சொல்லிகிட்டிருக்கான், எதையாச்சும் கேலி பண்ணிக் காரியத்தைக் கெடுத்துவிட்டுடாத’ என்று முறைத்துவிட்டு, அவினாசிக்கு ஆறுதலாக,
“என்ன பண்றது? ஆண்டவன் இப்படித்தான் நல்லவங்களையாப் பாத்து சோதிப்பான். நீங்க பழசையெல்லாம் நினைச்சு வருத்தப்படாதீங்க”
இந்த இருவர் சொல்லுவதையும் கவனிக்காமல், வெளியே பார்த்துக்கொண்டிருந்த அவினாசி,
“…நான் எந்தக் கவலையும் இல்லாம இடுப்புல உக்காந்து எதையாச்சும் தின்னுகிட்டிருப்பேன், ஹும், அதெல்லாம் ஒரு பொற்காலம்!”
அப்போது சிதம்பரத்தின் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே! அடுத்த காட்சியிலேயே மருத்துவமனையில் இருக்கும் ராஜுவைப் பார்க்க மூவரும் செல்லுவார்கள். அவினாசியைக் காது மெஷினை மாட்டிக்கொள்ளச்சொல்லிவிட்டு, திட்டத்தைச் சொல்லுவார்கள். பதறிப்போய் அவன் மறுப்பான். ’மச்சானுக்காக இதைக்கூட செய்ய மாட்டியா’ என்று துர்கா கேட்க,
“இப்படித்தான் மச்சானுக்காகன்னு சொல்லி போன தடவை போலீசிலயும் மாட்டினேன், எங்காதும் செவிடாப்போச்சு. வேணாம்க்கா, இப்பதான் நான் நேர் வழியில போயிகிட்டிருக்கேன்”
’அடப்பாவி, தெளிவா இருக்கானே’ என்ற யோசனையுடன், சட்டென செண்டிமெண்ட் ஆயுதத்தை எடுப்பாள் துர்கா.
“எது மரணக்கிணத்துல சுத்திகிட்டு இருக்கிறதுதான் நேர் வழியா? இப்படிக் காசில்லாம என் புருசன் ஆஸ்பத்திரில கிடக்காரு, போயிச்சேந்துட்டாருனா நான் தனி மரமா கிடந்து சாகணும். உன்னை இடுப்புல வைச்சிகிட்டு சிக்னல் சிக்னலா, அம்மா, தாயேன்னு பிச்சை எடுத்ததெல்லாம் மறந்து போச்சா உனக்கு? அப்படிப்பட்ட அக்காவுக்கு நீ காட்டுற நன்றிக்கடன் இதுதானா? அக்கா அக்கா உனக்காக எவ்வளவு செஞ்சாலும் நன்றிக்கடன் தீராதுனு சொல்லுவியே? உனக்காக வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி பாடுபட்டு வளர்த்தேனே, எனக்கு யாரும் இல்ல, தம்பி இல்ல, புருசன் இல்ல…”

என்று கண்ணை மூடிக்கொண்டு அழுவாள். அருகில் சிதம்பரம் தேமே என்று உட்கார்ந்துக்கொண்டிருப்பான். ’அடப்பாவி, எடுத்துக்கொடுத்தா பிக்கப் பண்ணாம, இவன் வேற வாயைப் பொளந்து பார்த்துகிட்டிருக்கானே’ எனும் நினைப்புடன்,
“எல்லாத்தையும் நானே சொல்லியழணுமா?”
என்று முனகலாகச் சொல்லி அவனது தொடையைக் கிள்ளுவார், அதன் பிறகுதான் சிதம்பரம் சுயநினைவுக்கே வருவான். ஏனென்றால் துர்காவின் பர்ஃபார்மன்ஸ் அப்படி! அப்படியே அடுத்தக் காட்சிக்குப் போனால், சம்மதித்துவிட்ட அவினாசிக்கு திட்டத்தை விளக்கிக் கொண்டிருப்பார்கள் சிதம்பரமும், ஜான்சனும்.
“மூணு உத்தமமான ஏழைகள். ஒருத்தன் வெல்டர். இன்னொருத்தன் குதிரைக்காரன். ஜுஹு பீச்சுல குழந்தைகள் சவாரி செய்யுற குதிரைகளை வைச்சு பிழைப்பு நடத்திகிட்டிருந்தான்…”
அப்போது குறுக்கே புகும் ஜான்சன், அவினாசியின் தொடையைச் சுரண்டி, நாந்தான் அது என்பது போல சைகை காண்பித்தபடியே ஆரம்பிப்பான்,
“எங்கப்பா! ஆறு குதிரை வைச்சிருந்தாரு! விக்டோரியா வீராச்சாமி! அந்தக் காலத்துல…”
அப்போது ஜான்சனின் முகபாவனையில் இருக்கும் பாவத்தை நாம் கவனிக்கவேண்டும். ’எப்படி இருந்த எங்க பரம்பரையில இன்னைக்கு நான் பைத்தியக்கார, பேப்பர் தின்கிற ஒரு குதிரையை வைத்துக்கொண்டு படும்பாடு இருக்கிறதே’ எனும் வலி. ஜான்சன் பாவம்தான்! ‘டேய், பழைய கதைக்கெல்லாம் போனா எப்ப பிளானைச் சொல்றது?’ என்று அவனைத் தடுத்து பிளானைப் பேசுவார்கள்.

அடுத்து அவினாசி கேட்கும் சந்தேகங்களை ‘குளோரோபாரம்’ பாட்டிலையெல்லாம் காட்டி நிவர்த்தி செய்வான் சிதம்பரம். ’என்னது இது குழந்தைங்க குடிக்கிற கூல்டிரிங்கா’ என்று அதை முகர்ந்து பார்ப்பதில் தொடங்கும் ரகளைகள்! இத்தனையும் தொடக்க பத்து நிமிடங்களிலேயே சரமாரியாக வரும் காட்சிகள். அடுத்தடுத்து, கதையும், காமெடியும் பரபரக்கும்.
சிதம்பரம் குதிரைக்கடி வாங்குவான். லெஃப்ட் ஹேண்ட் டிரைவ் காரை ஓட்டமுடியாமல் இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட் தம்புவை காரை விட்டு ஏற்றுவார்கள். தம்புவை கடத்தல் திட்டத்தின் நான்காவது பார்ட்னராக சேர்த்துக்கொள்ளுவார்கள். ஹைவேஸுக்கு இந்தப்பக்கமிருந்து அந்தப் பக்கத்துக்கு கிரேனில் தொங்கிக்கொண்டு ஊருலகமே பார்க்கும் படி ரகசியமாக ஒரு பையனைக் கடத்துவார்கள்.
கடத்தப்பட்டவனோ தவறான பையன். அவன் கமிஷனரின் கள்ளக்காதலிக்குப் பிறந்தவன். கமிஷனரோ, அவரது ஒரிஜினல் மனைவிக்குப் பிறந்த மகளின் திருமணத்தில் சிக்கிக் கொண்டிருப்பார். கடத்தப்பட்ட பையனின் அம்மா உட்பட அத்தனை பேருக்கும் ரகசியத் திட்டங்கள் இருக்கும். இவர்களுக்கு நடுவே பொய்யே சொல்லாத அப்பாவியாக அவினாசி மட்டும் இந்தச் சுழலில் சுற்றிக்கொண்டிருப்பான். அவனுக்கும், அந்தப் பையனுக்குமிடையே ஓர் அழகான அன்பு உருவாகும். இறுதியில் என்னவானது என்பது கதை முடிவு!

அவினாசியாக கமல்ஹாசன். அவரது நடிப்பைத் தனித்துக் குறிப்பிட வேண்டியதில்லை எனினும், இந்தப் படத்தில் ஏதோ ஒரு தனித்துவமான, இதற்கு முன்னும்பின்னும் நாம் பார்த்திராத ஒரு மேஜிக்கை செய்ய முனைந்திருப்பார். அக்கா துர்காவாக வரும் கோவை சரளா தொடக்கத்தில் அவரைச் சம்மதிக்க வைக்கும் போது கமல், தலையை மிக மிகச் சன்னமாக, ஒரு குதிரையைப்போல தலையை அசைத்தபடி, ஒரு பாடலைப் பாடுவதைப்போன்ற தாளலயத்துடன் பேசுவார்.
ரசனையான முயற்சி. சிதம்பரமாக பசுபதி, ஜான்சனாக வையாபுரி நடித்திருந்தார்கள். வையாபுரியின் பேட்டிகளைப் பார்த்தால், அவர் இயல்பாகவே ஓர் அப்பாவியான சிந்தனை கொண்டவராக இருப்பதாகத் தோன்றும். இந்தப் படத்தில் நூறு சதவீதம் அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிப்போயிருப்பார். எதை எப்போது எங்கே வைத்துச் சொல்வது என்று தெரியாதவராக, அருமையான டைமிங் சென்ஸுடன் நடித்திருப்பார். அவினாசிக்கும், ஜான்சனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் பாத்திரத்தில் பசுபதி. இன்னும் ரமேஷ் அரவிந்த், நாசர், மனீஷா கொய்ராலா, சந்தானபாரதி போன்ற பலரும் நடித்திருந்தார்கள்.
டெக்னிக்கலாக இந்தப் படத்தை, ஒரு பெரிய முன்னத்தி ஏர் என்றுதான் சொல்லவேண்டும். ஹாலிவுட்டில் 2002-ம் ஆண்டு ஜார்ஜ் லூகாஸ் இயக்கிய ’ஸ்டார் வார்ஸ் : எபிசோட் 2- அட்டாக் ஆஃப் தி க்ளோன்ஸ்’ முழு முற்றாக டிஜிட்டலில் படம் பிடிக்கப்பட்டு, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தபோது, இந்தியாவில் 2005-ல் மும்பை எக்ஸ்ப்ரஸ், அதே வேலையைச் செய்தது.
இப்போது நாம் டிவியிலும், மொபைலிலும் கூட 2கே, 4கே தரத்தில் விடியோக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், அப்போது மும்பை எக்ஸ்ப்ரஸ் 720p தரத்தில்தான் படம்பிடிக்கப்பட்டதாக கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றைய நிலையில் பேனசோனிக், ரெட் எபிக் மற்றும் சோனி சினிஆல்டா போன்ற முதல் தலைமுறை டிஜிட்டல் சினிமா கேமராக்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் மிக வேகமாக ஐந்தாறு வருடங்களிலேயே தமிழ்சினிமா முற்றிலுமாக டிஜிட்டலுக்கு மாறிவிட்டது. இந்தப் படத்தை டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்தவர் சித்தார்த் ராமசாமி. பின்னாளில் ஹிந்தி சினிமா, வெப்சீரிஸ் என வடக்குப் பக்கம் போய்விட்டாலும், யாரடி நீ மோகினி, அரவான் போன்ற தமிழ்ப் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
இசை இளையராஜா. பின்னணி இசையில் ராஜா, வழக்கம் போல அவரது ராஜாங்கத்தை நடத்தியிருப்பார். பாடல்களுக்கு அத்தனை முக்கியத்துவமில்லாத படமாக இருந்தாலும், தன் தாய்க்கும், அவினாசிக்கும் இடையிலான ஓர் உறவுக்குப் பாலமாக அந்தப் பையனே அமைந்திருப்பான்; அதை அழகாக வெளிப்படுத்தும் வண்ணம் வாலி எழுதி, சோனு நிகம், ஸ்ரேயா கோஷல் பாடிய ‘பூ பூத்தது தோட்டம் யார் போட்டது?’ பாடல் அமைந்திருந்தது.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருந்தவர் கமல்ஹாசன். அவரது நகைச்சுவைப் படங்களுக்கு வசனம் எழுதுவதற்கான முதல் தேர்வாக இருக்கும், கிரேசி மோகன்தான் வழக்கம் போல இதற்கும் அணுகப்பட்டார். ஆனால், அந்தச் சமயத்தில் அவர் அமெரிக்க- நாடகச் சுற்றுலாவில் இருந்ததால் இந்தப் படத்துக்கு அவரால் வசனம் எழுத முடியாமல் போய், கமல்ஹாசனே வசனமும் எழுதியிருந்தார். நகைச்சுவைப் படங்களுக்கான வசனங்களைப் பொறுத்தவரை கமல்ஹாசனும், கிரேசி மோகனும் ஒரே மீட்டரில் இயங்கக் கூடியவர்கள். சில சமயங்களில் யார் எதை எழுதியது என்று கண்டுபிடிப்பதும்கூட கொஞ்சம் சிரமம்தான்.
படத்தை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். அவர் இந்தப் படத்தை இயக்கிய போது அவருக்கு வயது 74. சுமார் 20 வருடங்கள் கமல்ஹாசனுக்கும், சிங்கீதத்துக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் சினிமாவைப் பொறுத்த வரை இருவரும் ஒத்த ரசனைகொண்ட சக நண்பர்களாகவே பயணித்து வருகிறார்கள். சமீபத்தில் தனது 94 வயதில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ’சிங் கீதம்’ எனும் படத்தின் அறிமுகவிழாவில் கலந்துகொண்டது, ராஜ்கமல் நடத்திய ’அபூர்வ சிங்கீதம்’ பாராட்டுத் தொடர் நிகழ்வை முன்னெடுத்தது மூலமாக அவர்களுக்கிடையே உள்ள நட்பை நம்மால் உணரமுடிகிறது. 1981- ராஜபார்வையில் தொடங்கி 2005 மும்பை எக்ஸ்பிரஸ் வரை இவர்கள் தொடர்ந்து பயணித்திருக்கிறார்கள். இவர்களுடைய கூட்டுப்பணியில், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களும் அடங்கும். கடத்தல், பிளாக்மெயில், கள்ளக்காதல் போன்ற இருண்ட விஷயங்களை, துளி கசப்பும் இல்லாமல் இந்தக் கூட்டணி சிரிப்பாக மாற்றியதால்தான் மும்பை எக்ஸ்ப்ரஸ், க்ரே காமெடிக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

எத்தனையோ படங்களை அண்டர் ரேட்டட் மூவிஸ் என்று நாம் வர்ணிக்கிறோம். கமல்ஹாசனின் பல படங்களும் கூட அது வெளியான சமயத்தில் வெற்றி பெறாமல், கண்டு கொள்ளப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் பட்டியலிட்டு, மோஸ்ட் அண்டர் ரேட்டட் மூவி ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், மும்பை எக்ஸ்பிரஸ் அதில் முதலிடம் பிடிக்கும். அந்தளவுக்கு இதில் ரசனையான காட்சிகள் கொட்டிக் கிடந்தன. காமெடிப் படங்களோ, சீரியஸான படங்களோ ரசனையான காட்சிகள் தற்செயலாக உருவாவதில்லை. அதற்கொரு கல்வி தேவைப்படுகிறது. பின்னர் பயிற்சி தேவைப்படுகிறது. அதிலிருந்து உருவாகும் மேதைமை தேவைப்படுகிறது.
’ஒரு சினிமா இயக்குனர் என்பவருக்கு, இரண்டு விதமான பார்வை மிக அவசியமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு காட்சியில் என்ன நடக்கிறது, ஒரு சின்ன நுணுக்கத்தில், ஒரு சின்ன வசனத்தில் அது என்னவாக உருவாகிக் கொண்டிருக்கிறது, அதனளவில் சிறப்பாக இருக்கிறதா என்பதைத் துல்லியமாக மைக்ரோ லெவலில் பார்க்கக் கூடிய ஓர் எறும்புப் பார்வையும் வேண்டும்; அதே நேரம், அந்தக் காட்சி முழு படத்தில் என்ன வேலையை செய்து கொண்டிருக்கிறது, முக்கியக் கதையின் சரியான ஒரு பங்காக உருவாகிக்கொண்டிருக்கிறதா என்ற புரிதலோடு மேக்ரோ லெவலில் பார்க்கக் கூடியதொரு பருந்துப் பார்வையும் வேண்டும்’
–சிங்கீதம் சீனிவாசராவ்.
ஒரு துறையைக் கசடறக் கற்க வேண்டுமானால், இப்படியான மேதைகளை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும்.
(தொடரும்)

















