கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
யானை: `57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி' - பன்னா புலிகள் காப்பகம் மகிழ்ச்சி
சம காலத்தில் நிலத்தில் வாழும் பேருயிரான யானைகள் சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. சில சமயங்களில் 80 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான ஆண்டுகளும் அரிதாக வாழ்கின்றன.
அதேபோல் பாலூட்டிகளில் மிக நீண்ட காலமாக கருவைச் சுமக்கும் உயிரினமாகவும் யானைகள் தான் உள்ளன.

கிட்டத்தட்ட 22 மாதங்கள் யானைகளின் கர்ப்ப காலமாக இருக்கிறது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுப்பதும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான அனார்கலி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.
யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இது குறித்து தெரிவித்துள்ள பன்னா புலிகள் காப்பக நிர்வாகம், "சோனாபூர் கண்காட்சியில் இருந்து 1986 - ம் கொண்டு வரப்பட்ட அனார்கலி பெண் யானையை பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரித்து வருகிறோம்.
57 வயதான இந்த யானை அண்மையில் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றது. இரண்டுமே நல்ல நிலையில் உள்ளன. யானைகளைப் பொறுத்தவரை இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பன்னா புலிகள் காப்பக யானைகள் முகாமின் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

















