ஒரே இரவில் 'ஓகே' ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! - திமுக முகாமில் தேமுத...
ரஞ்சி கோப்பை: மைதானம் இல்ல; போதிய வசதிகள் இல்ல, ஆனாலும்!- ஃபைனலில் J&K அணி; இலக்கை அடைந்தது எப்படி?
“நாங்க சும்மா விளையாட வரல... ஜெயிக்க வந்திருக்கோம்!” - 70 ஆண்டுக்கால ஏமாற்றத்தை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஜம்மு-காஷ்மீர் அணி.
2014-ல் விழுந்த விதை!
அது 2014-ம் ஆண்டு. மும்பை வான்கடே மைதானம். 40 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கும், கத்துக்குட்டி அணியாகப் பார்க்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கும் மோதல். சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் என நட்சத்திர பட்டாளமே மும்பை அணியில் இருந்தது. ‘மும்பை ஈஸியா ஜெயிச்சிடும்’ என கிரிக்கெட் விமர்சகர்கள் அடித்துச் சொன்னார்கள்.

ஆனால், அன்று நடந்ததே வேறு! ஜாம்பவான் மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சரித்திரம் படைத்தது ஜம்மு-காஷ்மீர். அந்த வெற்றிதான் ‘நாமும் சாதிக்க முடியும்’ என்கிற நம்பிக்கையை அந்தப் பள்ளத்தாக்கு இளைஞர்களிடம் விதைத்தது.
பிஷன் சிங் பேடி எனும் ‘குரு’
இந்த மாற்றத்தின் பின்னணியில் இருந்தவர் மறைந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் பிஷன் சிங் பேடி. 2011-ல் அவர் பயிற்சியாளராக வந்தபோது, ‘தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தோடு களமிறங்காதீர்கள். போட்டியிடுங்கள்’ என வீரர்களின் மனநிலையை மாற்றினார்.

அவர் சொல்லிக் கொடுத்த அந்த நம்பிக்கை எனும் பாடம் தான், இன்று பர்வேஸ் ரசூல், அப்துல் சமத், உம்ரான் மாலிக் என அடுத்தடுத்த வீரர்களை இந்திய அளவில் ஜொலிக்க வைத்திருக்கிறது.
ஒரு சுவாரஸ்யமான கசப்பான உண்மை என்னவென்றால், 1957-ல் ஜம்மு-காஷ்மீரில் எத்தனை கிரிக்கெட் மைதானங்கள் இருந்ததோ (ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தலா ஒன்று), அதே இரண்டு மைதானங்கள் தான் இன்றும் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திடம் (JKCA) உள்ளது.
இர்ஃபான் பதானின் பங்கு
2018-ல் ஆலோசகராக நுழைந்த இர்ஃபான் பதான், வெறும் கோச்-ஆக மட்டும் இருக்கவில்லை. வீரர்களுக்கு அண்ணனாக, நிர்வாகியாக, உத்வேகம் அளிக்கும் ஆசானாக இருந்தார். அப்படியே அந்த டீமை செதுக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

"அப்பவே சொன்னேன், நாம விதைக்கிற விதை ஒருநாள் மரமாகி, பழம் கொடுத்து, எல்லாருக்கும் நிழல் தரும்னு, இன்னைக்கு அது நிஜமாகிடுச்சு!" என நெகிழ்கிறார் இர்ஃபான்.
பேட்டிங்கில் தெறிக்கும் பட்டாசு!
முன்பெல்லாம் ஜம்மு-காஷ்மீர் என்றால் 'பந்துவீச்சு மட்டும்தான் பலம்' என்று இருந்தது. ஆனால் இந்த சீசனில், அப்துல் சமத், ஷுபம் கஜூரியா, ஆகிப் நபி உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கிலும் மிரட்ட, வங்காளம் போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி இன்று இறுதிப்போட்டிக்கு தகுதியாகியுள்ளனர்.

பனி சூழ்ந்த பள்ளத்தாக்கில், போதிய வசதிகள் இல்லாத சூழலில், வெறும் திறமையையும் விடாமுயற்சியையும் மட்டுமே முதலீடாக வைத்து ஒரு மாநில அணி ரஞ்சி ஃபைனலுக்கு வந்திருப்பது சாதாரண விஷயமல்ல. இது வெறும் கிரிக்கெட் வெற்றி மட்டுமல்ல, தடைகளைத் தகர்க்க நினைக்கும் ஒவ்வோர் இளைஞருக்குமான வெற்றி!




















