"யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்சாரமா? இது யார் வீட்டுக் காசு சார்?" - தவெக அரசை...
ரீல்ஸ் பார்ப்பதும் ஒரு முதலீடா? – வாழ்க்கையை ஜெயிக்க உதவும் எளிய 'CAKE' ஃபார்முலா!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
முதலீடு என்பது ஏதோ வங்கிகளிலோ, பங்குச்சந்தையிலோ பணத்தைப் போட்டு வைப்பது மட்டும் தானா? நிச்சயமாக இல்லை! முதலீடு என்பது வெறும் பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. சிறந்த நாளைக்காக, இன்று நாம் எதைக் கொடுக்கிறோம் என்பதைப் பற்றியது.
என் அன்பான நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் முதற்கண் மாலை வணக்கம்.
பொதுவாக, முதலீடு (Investment) என்றால் என்ன சொல்வார்கள்? வருமானம் அல்லது லாபத்தை எதிர்நோக்கி, நமது பணம் அல்லது வளங்களைச் சரியான சொத்துக்களில் ஒதுக்குவதே முதலீடு என வரையறுக்கப்படுகிறது. ஆனால், பங்குகளையோ (Shares), பரஸ்பர நிதிகளையோ (Mutual Funds), தங்கம் அல்லது ரியல் எஸ்டேட்டையோ பற்றி யோசிப்பதற்கு முன்பாக, முதலீட்டைப் பற்றிய ஒரு மிக விரிவான மற்றும் பரந்த பார்வையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், முதலீடு என்பது ஏதோ ஒரு மொபைல் ஆப்பிற்குள்ளோ அல்லது டிமேட் (Demat) கணக்கிற்குள்ளோ மட்டுமே நடந்து முடிந்துவிடும் ஒன்று அல்ல!
நாம் நமது நேரத்தை முதலீடு செய்கிறோம். நாம் நமது ஆற்றலை முதலீடு செய்கிறோம். நாம் நமது அறிவை முதலீடு செய்கிறோம். நாம் நமது பணத்தையும் முதலீடு செய்கிறோம்.
இவை ஒவ்வொன்றிலும், நாளை ஒரு சிறந்த பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று ஏதோ ஒன்றை நாம் விட்டுக்கொடுக்கிறோம்.
இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கமே முதலீடு என்ற கருத்தாக்கத்தை மிகவும் எளிமைப்படுத்துவதுதான். நமது வளங்களைச் சரியான வழியில் செலுத்தி, மிகச்சிறந்த பலனைப் பெறுவதே முதலீடு என்னும் கலை.

சற்றுச் சுற்றிலும் உற்றுப் பாருங்கள்:
தெருவில் இருக்கும் ஒரு பிச்சைக்காரர், தன் நேரத்தை பிச்சை எடுப்பதில் செலுத்துகிறார். அவர் எதிர்பார்க்கும் பலன்—அன்றைய நாளுக்கான உணவு மற்றும் பணம்.
ஒரு மாணவனாக, நான் என் தேர்வுகளைத் தெளிவான மதிப்பெண்களுடன் கடப்பதற்காக, தகவல்களையும் குறிப்புகளையும் திரட்டுவதில் என் நேரத்தைச் செலுத்துகிறேன்.
ஒரு பேச்சாளராக, சிறந்த உரைகளை உருவாக்குவதற்காக என் சிந்தனைகளையும் எண்ணங்களையும் செலுத்துகிறேன்.
ஒரு தொழில்முனைவோர், தன் நிறுவனத்தை ஒரு பிரம்மாண்டமான கார்ப்பரேட் சாம்ராஜ்யமாக மாற்றத் தன் முழு நேரத்தையும் செலுத்துகிறார்.
இங்கே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பலனைப் பெறுவதற்காகத் தங்களிடம் உள்ள ஏதோவொரு வளத்தைச் செலுத்துகிறார்கள். அதனால் தான் உரக்கச் சொல்கிறேன்—"என் அன்பான நண்பர்களே... நாம் அனைவருமே முதலீட்டாளர்கள் தான்!"
நமது மதிப்புமிக்க வளத்தின் ஒரு பகுதியை, ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து நாம் செலுத்துகிறோம். அதைத்தான் நான் 'முதலீடு' என்று அழைக்கிறேன்.
இங்கே தான் முதலீடு பற்றிய யோசனை இன்னும் சுவாரஸ்யமாக மாறுகிறது.
தினமும் மூன்று மணி நேரம் விடாமுயற்சியுடன் படிக்கும் ஒரு மாணவன் செய்வது ஒரு முதலீடு. தன் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து ஒரு புதிய மென்பொருளையோ அல்லது தொழில் நுட்பத்தையோ கற்றுக்கொள்ளும் தொழில்முறை வல்லுநர் (Professional) செய்வது ஒரு முதலீடு. ஒரு தொழிலில் தன் சொந்த மூலதனத்தைப் போட்டு வளர்க்கும் தொழில்முனைவோர் செய்வதும் முதலீடே.

இங்கே நாம் பயன்படுத்தும் வளம் வேறாக இருக்கலாம். நமக்குக் கிடைக்கும் பலன் வேறாக இருக்கலாம். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் அடிப்படைத் தத்துவம் ஒன்றுதான்—சிறந்த நாளைக்காக இன்று எதையாவது ஒன்றை நாம் தியாகம் செய்கிறோம் அல்லது தருகிறோம்.
சரி, முதலீடு என்றால் என்னவென்று இப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது. அடுத்து, நாம் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி: "ஒரு சிறந்த மற்றும் வளமான முதலீட்டிற்கு நமக்கு என்னென்ன தேவைகள்?"
இந்தக் கேள்விக்கான முழுமையான விடையைத்தான் இனி விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
ஒரு வெற்றிகரமான முதலீட்டிற்கு உங்களுக்கு நான்கு முக்கியத் தேவைகள் உள்ளன:
மூலதனம் (Capital)
பகுப்பாய்வு (Analysis)
நம்பிக்கை (Confidence)
எதிர்பார்க்கப்படும் பலன் (Expected Return)
இனி, இவை ஒவ்வொன்றையும் ஆழமாகப் அலசுவோம்.
1. மூலதனம் (Capital): பணம் மட்டுமல்ல!
முதலீடு செய்வதற்காக நீங்கள் உள்ளே செலுத்தும் எந்தவொரு வளமும் 'மூலதனம்' தான். அது பணமாக இருக்கலாம், நேரமாக இருக்கலாம், மனநிறைவாக இருக்கலாம், அல்லது உங்கள் உழைப்பாகக்கூட இருக்கலாம். எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஒரு பலனுக்காக இன்று நீங்கள் ஏற்கும் ஒரு செலவே இது.
ஒரு நடைமுறை உதாரணத்தைப் பார்ப்போம்: ஒரு தனியார் நிறுவன ஊழியர், பகல்முழுதும் வேலை செய்து களைப்பாக வீட்டிற்கு வருகிறார். வழக்கமாக அந்த நேரத்தில் ஓய்வெடுக்கவோ அல்லது டிவி பார்க்கவோ தோன்றும். ஆனால், அவர் தினமும் மாலை இரண்டு மணி நேரத்தை ஒதுக்கி 'பைதான்' (Python) மற்றும் புள்ளிவிவரப் பகுப்பாய்வு (Statistical Analysis) கற்கச் செலவிடுகிறார்.

இங்கே அவருடைய மூலதனம் எது தெரியுமா? பணத்தை விடவும் மேலானது-அவருடைய கவனம், மன ஆற்றல் மற்றும் அவர் தியாகம் செய்யும் ஓய்வு நேரம் (Opportunity Cost).
இது ஒரு மிக முக்கியமான புள்ளி. 'மூலதனம்' என்ற சொல்லைக் கேட்டவுடனேயே நமது மூளை உடனடியாகப் பணத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கத் தொடங்குகிறது. ஆனால், மூலதனம் என்பது பணத்தையும் தாண்டியது. உங்கள் நேரம் ஒரு மூலதனம். உங்கள் உழைப்பு ஒரு மூலதனம். உங்கள் அறிவு ஒரு மூலதனமாக மாறக்கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் செய்யும் தியாகம் (Opportunity Cost) உங்கள் மூலதனமாக மாறுகிறது.
அதேபோல, உங்கள் கவனமும் (Attention) ஒரு வளம் தான். தினமும் குறிப்பிட்ட அளவே உள்ள இந்த வளங்களை நாம் எங்கே முதலீடு செய்கிறோம் என்பதுதான் இங்கே கேட்கப்பட வேண்டிய கேள்வி.
நீங்கள் இரண்டு மணி நேரத்தைச் சும்மா சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் பார்த்து ஸ்க்ரோல் செய்தால், அந்த இரண்டு மணி நேரத்தையும் அங்கே முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஆனால், அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன?
அதே இரண்டு மணி நேரத்தை ஒரு புதிய திறனைக் கற்கவோ, ஒரு போட்டித் தேர்வுக்குத் தயாராகவோ அல்லது உங்கள் தகவல்தொடர்புத் திறனை (Communication skills) வளர்த்துக்கொள்ளவோ செலவிட்டால், அதிலிருந்து கிடைக்கும் பலன் முற்றிலும் வேறாக அல்லவா இருக்கும்?
அதனால்தான் சொல்கிறேன்—முதலீடு என்பது உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பற்றியது மட்டுமல்ல. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் வளங்களை நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பற்றியதும் கூட!

2. பகுப்பாய்வு (Analysis): செலவு என்ன? பலன் என்ன?
அடுத்ததாக, இரண்டாவது தேவை—பகுப்பாய்வு. எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன்பாக, நாம் ‘செலவு-பலன் பகுப்பாய்வு’ (Cost-Benefit Analysis) என்ற ஒன்றைச் செய்ய வேண்டும்.
இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு சுவாரஸ்யமான உதாரணம்: தினமும் காலை அலுவலகத்திற்குச் செல்லும்போது, ₹50 கொடுத்து ஆட்டோவில் செல்வதா அல்லது 15 நிமிடங்கள் நடந்து செல்வதா என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஆட்டோவில் செல்வதன் பலன்கள்: உங்களின் பொன்னான நேரம் மிச்சமாகிறது, வெயிலிலும் புழுதியிலும் அலைவதைத் தவிர்க்கலாம், அலுவலகத்திற்குப் புத்துணர்ச்சியோடு செல்லலாம்.
செலவுகள்: தினமும் ₹50 கட்டணம் (இது ஒரு மாதக் கணக்கில் பெரிய தொகையாக மாறும்) மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை இழப்பது.
இப்போது இதைச் செலவு-பலன் பகுப்பாய்வு வழியே யோசித்துப் பாருங்கள்: அன்றைய தினம் உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது, நீங்கள் புத்துணர்ச்சியோடு இருப்பது அவசியம் என்றால், நேரம் மிச்சப்படுவதும் சௌகரியமும் அந்த ₹50 செலவை விட மேலானது. அதனால் ஆட்டோவில் செல்வது பாசிட்டிவ் பலனைத் தரும்.
மாறாக, அந்த மாத பட்ஜெட் மிகவும் நெருக்கடியாக இருக்கிறது, உடலையும் பிட்டாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால், ₹50 மிச்சப்படுவதும் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கியமும் அந்த 15 நிமிடச் சிரமத்தை விட மேலானது. அப்போது நடப்பதே சிறந்த தேர்வு.
இறுதியில், அந்த குறிப்பிட்ட தருணத்தில் உங்களுக்கு எது அதிக மதிப்புடையதாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு அமைகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் என்ன மூலதனமிடுகிறோம், எதை இழக்கிறோம், அந்த இழப்பு நமக்குத் தேவையான பலனைத் தருமா என்று பகுப்பாய்வு செய்வது மிகவும் அவசியம். முதலீட்டு உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த சிந்தனை முறை இந்தச் 'செலவு-பலன் பகுப்பாய்வு' தான்.
ஏனெனில், ஒவ்வொரு முதலீட்டிற்கும் ஒரு செலவு உண்டு. சில நேரங்களில் அந்தச் செலவு நேரடியாகக் கண்ணுக்குத் தெரியும். சில நேரங்களில் மறைமுகமாக இருக்கும்.

நீங்கள் ₹1 லட்சத்தை முதலீடு செய்தால், நேரடியாகத் தெரியும் செலவு ₹1 லட்சம். ஆனால், அந்த ₹1 லட்சத்தைக் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்? அந்த மாற்று வாய்ப்பும் (Alternative Opportunity) உங்கள் முடிவின் ஒரு பகுதிதான். பொருளாதார நிபுணர்கள் இதையே ‘வாய்ப்புச் செலவு’ (Opportunity Cost) என்கிறார்கள்.
நேரத்திற்கும் இது நூற்றுக்கு நூறு பொருந்தும். ஒரு குறிப்பிட்ட படிப்பிற்காக மூன்று ஆண்டுகளைச் செலவிடுகிறீர்கள் என்றால், அதே மூன்று ஆண்டுகளில் வேறு ஏதோ ஒன்றைச் செய்யும் வாய்ப்பை நீங்கள் விட்டுக்கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எனவே எந்தவொரு முதலீட்டைச் செய்வதற்கு முன்பும், நம்மை நாமே இரண்டு கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்:
இதிலிருந்து நான் என்ன பெறப்போகிறேன்?
அதைப் பெறுவதற்காக நான் எதை விட்டுக்கொடுக்கிறேன்?
நமது வைகைப்புயல் வடிவேலு பாணியில் சொல்வதானால்: "எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும், ஓகே?" வாழ்க்கையின் அனைத்து முதலீடுகளுக்கும் இந்தச் செலவு-பலன் பகுப்பாய்வை மறக்காமல் செய்யுங்கள்.
3. நம்பிக்கை (Confidence): பாலில் பிழிந்த எலுமிச்சை துளி!
இப்போது மூன்றாவது தேவையை நோக்கி நகர்வோம்—நம்பிக்கை. இதை விளக்க ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் 500 பேரைக் கொண்ட ஒரு சிறிய ராஜ்ஜியம் இருந்தது. அந்த ராஜ்ஜியத்தில் திவாகர் என்ற அரசர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு முன் பாப்லு என்ற அரசர் 15 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தார். இப்போது ராஜா திவாகர் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாகப் பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டினருக்குப் பரிமாறுவதற்காக சமையல்காரர்கள் 100 லிட்டர் பாலில் பிரம்மாண்டமாகப் பால்கோவா செய்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த முன்னாள் ராஜா பாப்லுவுக்குப் பொறாமை தாங்கவில்லை. "நான் 15 வருஷம் ஆட்சி பண்ணேன், என்னை மதிச்சானா? இவன் 10 வருஷம் ஆட்சி செஞ்சதுக்கே பால்கோவா செய்யுறாங்களா?" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
யாரும் பார்க்காத நேரத்தில், மெதுவாக அந்த அண்டாவின் அருகில் சென்று, ஒரே ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்துப் பிழிந்துவிட்டு வந்துவிட்டார்! அவ்வளவுதான்... முழு நாட்டின் பால்கோவா கனவும் பாழாய்ப் போனது.
யோசித்துப் பாருங்கள், 100 லிட்டர் பாலைக் கெடுப்பதற்கு ஒரே ஒரு துளி எலுமிச்சை சாறு போதுமானது. அதேபோலத்தான், உங்கள் முதலீட்டில் 100% நம்பிக்கை இருந்தாலும், உங்களுக்குள் தோன்றும் 0.02% சந்தேகம் அல்லது பயம், உங்கள் முழு முதலீட்டையும் பேரழிவாக மாற்றிவிடக்கூடும்!
துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து முடித்த பிறகு, நமது மூலதனத்தை விதைப்பதற்குப் போதுமான நம்பிக்கை இருக்க வேண்டும். முடிவுகளைப் பெறுவதற்கு முன்பாகவே அவசரப்பட்டு அதை மாற்றியமைக்கக் கூடாது. எளிமையாகச் சொன்னால்: கணிப்புகளை நம்புங்கள், அற்புதம் நிகழக் காத்திருங்கள் (Trust the calculations and let the magic unfold).
இங்கே தான் முதலீடு என்பது ஒரு உளவியல் சார்ந்த விஷயமாக மாறுகிறது.
உலகிலேயே மிகச்சிறந்த பகுப்பாய்வை நீங்கள் வைத்திருக்கலாம்; ஆனால் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அந்தப் பகுப்பாய்வால் எந்தப் பயனும் இல்லை. பங்குச்சந்தை மேலே ஏறலாம், திடீரெனக் கீழே விழலாம். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் பேராசையால் துள்ளலாம் அல்லது பயத்தால் அலறலாம்.
நம்பிக்கை என்பது குருட்டுத்தனமாக ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பது அல்ல. அந்த முதலீட்டை முதன்முதலில் ஏன் செய்தோம் என்பதற்கான காரணத்தைத் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பது. உங்கள் ஆரம்பக்காலக் கணிப்புகள் சரியாக இருக்கும் வரை, தற்காலிக ஏற்ற இறக்கங்கள் உங்கள் நம்பிக்கையைச் சிதைக்கக் கூடாது.
அதே நேரத்தில், சூழல்களும் உண்மைகளும் மாறும்போது பிடிவாதம் பிடிப்பதும் தவறானது. பிடிவாதத்திற்கும் நம்பிக்கைக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவை நம்புவதும், தேவைப்படும்போது புதிய பாடங்களைக் கற்றுக்கொண்டு மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதுமே உண்மையான நம்பிக்கை.

4. எதிர்பார்க்கப்படும் பலன் (Expected Return): ஆசைக்கும் எதிர்பார்ப்பிற்கும் உள்ள வேறுபாடு
கடைசி மற்றும் மிக முக்கியமான நான்காவது அம்சம்—எதிர்பார்க்கப்படும் பலன்.
நாம் செய்யும் எந்தவொரு முதலீட்டின் இறுதி விளைவே 'பலன்' (Return). முதலீடு நமக்குத் தரும் முதன்மையான பலன்கள் இரண்டு: ஒன்று பணம், மற்றொன்று மனநிறைவு. எந்தவொரு முதலீட்டிலும் எந்தவொரு பலனும் கிடைக்காது என்றால், அந்த முதலீட்டைச் செய்யவே செய்யாதீர்கள்!
அதேபோல, நியாயமான பலனை எதிர்பார்க்கப் பழக வேண்டும். தேர்வு நடக்கும் முந்தைய நாள் இரவு மட்டும் புத்தகத்தைத் திறந்து வைத்துவிட்டு, மறுநாள் 100-க்கு 100 மதிப்பெண் எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமா? நிச்சயம் இல்லை. உங்கள் உழைப்பிற்கு ஏற்ற சரியான பலனை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.
முதலீட்டுப் பாடங்களில் இது மிக மிக முக்கியமான பாடம். 'எதிர்பார்க்கப்படும் பலன்' என்பது 'உறுதியளிக்கப்பட்ட பலன்' அல்ல. 'எதிர்பார்க்கப்படும்' என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும்.
யாராவது ஒருவர், "எந்தவித ஆபத்தும் (Risk) இல்லாமல் மிக அதிக லாபம் தருகிறேன்" என்று வாக்குறுதி அளித்தால், உடனடியாக எச்சரிக்கையாகி விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு முதலீடும் பலன், அபாயம் மற்றும் காலம் ஆகிய மூன்றின் தொடர்பை வைத்து மட்டுமே இயங்குகிறது.
எதிர்பார்க்கப்படும் பலன் அதிகமாக இருந்தால், அங்குள்ள அபாயங்களையும் நாம் அவ்வளவு கவனமாக ஆராய வேண்டும். ஒரு முதலீடு மிகச் சிறந்ததாக இருந்தாலும் கூட, அது முழுப் பலனைத் தருவதற்குக் கால அவகாசம் எடுக்கும். ஒரு விதை ஒரே இரவில் மரமாவதில்லை. அதேபோலத்தான் முதலீடும், உடனடியாகத் தன் முழுத் திறனையும் வெளிப்படுத்தாது.
அபாயம் (Risk) என்னும் தவிர்க்க முடியாத காரணி!
நான்கு தேவைகளைப் பற்றிப் பார்த்துவிட்டோம். ஆனால், முதலீட்டில் தவிர்க்க முடியாத மற்றொரு காரணி உண்டு. அதுதான்—அபாயம் (Risk).
ஒரு முதலீட்டைச் செய்வதற்கு முன், "நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?" என்று மட்டும் கேட்கக்கூடாது. "ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால், என்னால் எவ்வளவு இழப்பைத் தாங்க முடியும்?" என்றும் கேட்க வேண்டும். அந்த இழப்பை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்.
புகழ்பெற்ற உலக முதலீட்டாளர் வாரன் பஃபெட் (Warren Buffett) கூறுவார்:
"விலை என்பது நீங்கள் கொடுப்பது; மதிப்பு என்பது நீங்கள் பெறுவது."
அந்தப் பலனைப் பெறுவதற்கு நீங்கள் என்ன விலை கொடுக்கப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். ஒரே அளவிலான பலனைத் தரும் இரண்டு முதலீடுகள் முற்றிலும் மாறுபட்ட அபாயங்களைக் கொண்டிருக்கலாம்.
எனவே, ஒரு நல்ல முதலீட்டாளர் லாபத்தை மட்டும் குருட்டுத்தனமாகத் துரத்த மாட்டார்.
மூலதனம் + அபாயம் + காலம் + எதிர்பார்க்கப்படும் பலன்
இந்த நான்கிற்கும் இடையே உள்ள பிணைப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்.
CAKE சூத்திரம்: வெற்றிக்கான எளிய வழி!
இனி எல்லாவற்றையும் ஒன்று திரட்டிச் சுருக்கமாகப் பார்ப்போம். முதலீடு என்பது நமது வளங்களைச் சரியான வழியில் செலுத்திச் சிறந்த பலனைப் பெறும் கலை.
ஒரு சுவையான கேக்கின் மீது கிரீம் தடவி சாப்பிடுவது போல, முதலீட்டில் கிரீமி போன்ற வெற்றியைச் சுவைக்க உங்களுக்கு இந்த CAKE தேவை:
C - Capital (மூலதனம்)
A - Analysis (பகுப்பாய்வு)
C - Confidence (நம்பிக்கை)
E - Expected Return (எதிர்பார்க்கப்படும் பலன்)
இந்தச் சூத்திரத்தின் அழகே இது பணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் என்பதுதான். உங்கள் வாழ்க்கை, தொழில், படிப்பு, உறவுகள் என ஒவ்வொன்றிலும் ஏதோவொரு வளத்தைச் செலுத்தி பலனை எதிர்பார்க்கிறீர்கள். அதனால்தான் முதலீடு என்ற கருத்தாக்கம் பங்குச்சந்தையை விடவும் மிகப் பெரியது என்கிறேன்.
நாம் அடிக்கடி கேட்கும் கேள்வி: "என் பணத்தை எங்கே முதலீடு செய்வது?"
ஆனால், அதற்கு முன் நாம் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி: "என் வாழ்க்கையை நான் எங்கே முதலீடு செய்து கொண்டிருக்கிறேன்?"
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
















