செய்திகள் :

'விடிவதற்குள் தேங்கிய நீர் வடிந்துவிட்டது; திமுக அரசின் சரித்திரம் இது.!'- கே.என் நேரு

post image

திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைத் திட்டப் பணிகளைத் தொடர்ந்து, திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " நேற்று முன்தினம் சென்னை மாநகரில் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீர், திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் நடவடிக்கைகளின் காரணமாக உடனடியாக வெளியேறி, சென்னைவாழ் மக்களின் பாதிப்பைப் பெருமளவில் குறைத்துள்ளது. இதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள்.

சென்னைவாழ் பெருமக்கள் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசிற்குக் கிடைத்துள்ள பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத த.வெ.க.வினர், சமூக வலைதளங்களில் “4,000 கோடி ரூபாய் செலவு செய்தது இதற்குத்தானா?” என்ற அளவில் முகாந்திரமில்லாத வெட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

திராவிட மாடல் அரசில் எண்ணற்ற திட்டங்கள் சென்னை மாநகரத்திற்காக நிறைவேற்றப்பட்டன. ஆட்சிக்கு வந்தவுடன் திருப்புகழ் கமிட்டியை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று, அவற்றுள் இடைக்காலப் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றிய அரசு, எங்கள் அன்றைய முதலமைச்சரும் இன்றைய கழகத் தலைவருமான திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசு என்பதை இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். திராவிட மாடல் அரசு சென்னை மாநகருக்கு மட்டும் நிறைவேற்றிய திட்டங்களில் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த ஐந்தாண்டுகளில் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முடித்தோம். மீதமுள்ள பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன! கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மட்டும் 600 கிலோமீட்டருக்கு மேல் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. 37 நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரித்து, வெள்ள அபாயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீர் தேங்குவதைத் தவிர்க்கவும் 770 இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் கொசஸ்தலையாறு, கோவளம் வடிநிலப் பகுதிகளும் அடக்கம்! சென்னை மாநகராட்சியில் உள்ள 60 நீர்நிலைகளைப் புனரமைக்கவும், தூர்வாரவும், கரைகளைப் பலப்படுத்தவும், நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்ததும் திராவிட மாடல் அரசுதான்!

விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பணிகள், கோவளம் வடிநிலப் பணிகள், கொசஸ்தலையாறு வடிநிலப் பணிகள், டிரஸ்ட்புரம் கால்வாய்ப் பணிகள், கடப்பாக்கம் ஏரி மேம்பாடு, அடையாறு ஆற்றுப் புனரமைப்பு, ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்கள் புனரமைப்பு, தூர்வாரும் பணிகள் எனவும், வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு, நிவாரண மையம் அமைக்கும் பணிகள் எனவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, சென்னை மாநகருக்குக் கனமழைகளால் ஏற்படும் பாதிப்புகளை அடியோடு நீக்கத் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை நிறைவேற்றியதும், களப்பணியாற்றியதும் எங்கள் ஆட்சிதான்! இந்தச் சாதனைத் திட்டங்களால் ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்திருக்கிறது! கழக அரசு கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நிகழ்த்திக் காட்டியுள்ள சரித்திரம் இது!

சென்னை மாநகராட்சிக்குத் திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்று திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து, “ரீல்ஸ்” விடுவோருக்கு, ஆட்சியிலிருந்து நாங்கள் நிகழ்த்திய “ரியல்” சாதனைகள் புரியவில்லை என்றே தெரிகிறது. கனமழை என்றாலும், வெள்ளம் என்றாலும் முதலில் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆய்வு செய்பவராக எங்கள் முதலமைச்சர் இருந்தார்.

வெளியூர்ச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவில் திரும்பினால்கூட நேராக ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறைக்கு வந்து ஆய்வு செய்யும் நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றவர் எங்கள் அன்றைய முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். இப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரிப்பன் மாளிகைக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அதன்பிறகு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், “கடந்த காலங்களில் இருந்ததைவிட இப்போது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் குறைந்துள்ளன” என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்கள் ஆட்சியின் சாதனைக்கு எடுத்துக்காட்டு!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேலும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள்தான் இப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கிறார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. குமரகுருபரன் தற்போதும் தலைமைச் செயலகத்தில் அரசுச் செயலாளராகத்தான் இருக்கிறார்.

ரிப்பன் மாளிகைக்குப் போன மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் கேட்டாலே, கடந்த ஐந்தாண்டு காலத்தில் சென்னை மாநகராட்சியில் திராவிட மாடல் அரசால் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் அனைத்தையும் மிக எளிதாகப் பட்டியலிட்டுச் சொல்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்று, திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் மீது ஏதோ எங்கள் அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தவறான பிம்பத்தைத் திட்டமிட்டுத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள். அது தவறு! திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளில் இடைக்காலப் பரிந்துரைகள், நீண்டகாலத் திட்டங்களுக்கான பரிந்துரைகள் என்ற அடிப்படையில் இருவிதமான பரிந்துரைகள் இருந்தன. அவற்றில் இடைக்காலப் பரிந்துரைகளை முதலில் நிறைவேற்றிய அரசுதான் திராவிட மாடல் அரசு. சட்டமன்றத்திலேயே நான் இதுகுறித்துப் பேசும்போது, “திருப்புகழ் கமிட்டியின் இடைக்காலப் பரிந்துரைகளை நிறைவேற்றியுள்ளோம். நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குள் தேர்தல் வந்துவிட்டது” எனக் கூறி, “இப்போதும் அறிக்கை அரசிடம்தான் இருக்கிறது. தாராளமாக அந்த நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றலாம்” எனக் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதும், ஏற்கெனவே திராவிட மாடல் அரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டியதும் த.வெ.க. அரசின் பொறுப்பு என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! - எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!

அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) தலா ஒரு பங்கை இலவசமாக வழங்கப்போவதாக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.தனது 'X'... மேலும் பார்க்க

"SIR அவசியம்... அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது" - சி.முருகன் IAS

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென்கிற குரல்கள் நாடெங்கும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.எஸ்.ஐ.ஆர் என்ற தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை எனவும், தேர்தல் ஆணையம் ஆளும் ... மேலும் பார்க்க

`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள வடமாம்பாக்கம் மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். மனுவில் அவர், ... மேலும் பார்க்க

Jailer 2: 'திரையிடப்பட்ட ரஜினி மேஷ் அப்; கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!- மன்னிப்புக் கேட்ட திரையரங்கம்!

சென்னை அம்பத்தூரில் முருகன் திரையரங்கில் ஜெயிலர் 2 படத்துக்கு இடையில் ரஜினி ரசிகர்களை குஶுப்படுத்த திரையிடப்பட்ட மேஷ் அப் வீடியோ விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. சமூகவலைதளங்களில் விஜய் ரசிக... மேலும் பார்க்க

'தவெக அரசின் கீழ்தரமான அரசியல்; வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை'- கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீ... மேலும் பார்க்க

ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதியில் குப்பைகளால் நிரம்பும் சாக்கடை: பொதுமக்கள் அவதி!

ஈரோடு மணிக்கூண்டு அருகே உள்ள கொங்கலம்மன் கோயில் வீதியில் சாக்கடை முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்களும் கடைக்காரர்களும் புகார் தெரிவிக்கின... மேலும் பார்க்க