Tiger Shroff: "வெளிநாட்டு வேலை, அதிக பணம்..." - துப்பாக்கியால் சுட்டவர்கள் சிக்க...
“10 கிராம் மண் வேணும்” – ஏன்? செவ்வாயின் நிலவுக்கு உலகின் முதல் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கிய ஜப்பான்!
ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA தலைமையில் உருவாக்கப்பட்ட ‘MMX’ (Martian Moons Exploration) விண்கலம், அக்டோபர் 20-ம் தேதி அதிகாலையில் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட சுமார் 71 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலம் ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்து தனது பயணத்தைத் தொடங்கியது.
எதற்கு இந்த திட்டம்?
செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ் (Phobos), டைமோஸ் (Deimos) என இரண்டு நிலவுகள் இருக்கிறது. இவற்றில் போபோஸ் நிலவிலிருந்து மண், தூசி, பாறை மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

சுமார் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் இந்தத் திட்டத்தின்படி, விண்கலம் 2027 ஆகஸ்ட்டில் செவ்வாய் கிரகத்தை அடையும். பிரான்ஸ், ஜெர்மனி இணைந்து உருவாக்கிய ‘ஐடெபிக்ஸ்’ (Idefix) என்ற சிறிய ரோவர், 2028-ன் பிற்பகுதி அல்லது 2029-ல் போபோஸ் நிலவில் தரையிறங்கி, சுமார் 100 நாள்கள் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், முக்கிய விண்கலம் போபோஸ் நிலவில் தரையிறங்கி, குறைந்தது 10 கிராம் மண், தூசி, பாறை மாதிரிகளைச் சேகரிக்கும். தொடர்ந்து டைமோஸ் நிலவையும் ஆய்வு செய்துவிட்டு, 2031-ல் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘அப்படி இந்த மண்ணுக்குள் என்ன ரகசியம்?’
போபோஸ், டைமோஸ் நிலவுகள் செவ்வாய் கிரகத்துடன் ஏற்பட்ட மோதலால் உருவானவையா அல்லது விண்வெளிச் சிறுகோள்கள் செவ்வாயின் ஈர்ப்பு விசையில் சிக்கியதால் உருவானவையா என்பதை அறிய இந்த மாதிரிகள் உதவலாம். மேலும் அந்தக் கிரகத்தின் பழங்காலச் சூழல் எப்படி இருந்தது, உயிர் தோன்றுவதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் கரிமப் பொருட்கள் சூரியக் குடும்பத்தில் எவ்வாறு பரவின என்பதற்கான தடயங்களைத் தேட உதவியாக அமையும்.
சுமார் 578 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான இந்தத் திட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை பங்களிக்கின்றன. செவ்வாயின் நிலவிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவரும் உலகின் முதல் முயற்சியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் செவ்வாயின் நிலவிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















