Tiger Shroff: "வெளிநாட்டு வேலை, அதிக பணம்..." - துப்பாக்கியால் சுட்டவர்கள் சிக்க...
மும்பையில் மீண்டும் துப்பாக்கி சத்தம் : நிழல் உலக காலியிடத்தைநிரப்பும் வட இந்திய கேங்ஸ்?
மும்பையில் 2000ம் ஆண்டு வரை இருந்த ரவுடிசம் மற்றும் மாபியா போன்ற நிழலுக தாதாக்கள் தொடர் என்கவுண்டர் மூலம் பெரும் முயற்சிகளுக்கு பின் ஒழிக்கப்பட்டனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு ரவுடியோ அல்லது மாபியாவோ மும்பையில் உருவாகவில்லை. முக்கிய ரவுடிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டனர். இதனால் பில்டர்கள் மற்றும் திரைப்படத்துறையினர் நிம்மதியாக வேலை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் மும்பையில் மாபியா தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த மாபியா கும்பல் மும்பையில் இருந்து உருவாகவில்லை. இக்கும்பல் வட மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறது. இதனால் பாலிவுட் பிரபலங்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்ற போது ஒரு அபூர்வ வகை மானை வேட்டையாடினார். அந்த மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக மதிப்பதாக கூறப்படுகிறது.

எனவே அந்த மானை வேட்டையாடியதற்கு சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது டெல்லியை சேர்ந்த மாபியாவான லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் சல்மான் கான் மன்னிப்பு கேட்க மறுத்து வருகிறார். இதனால் சல்மான்கானை அச்சுறுத்தவும், அவரை மன்னிப்பு கேட்க வைக்கவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மும்பையில் நுழைந்தது.
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, சல்மான் கானின் நெருங்கிய நண்பரான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் என்பவரையும் அதே கும்பல் சுட்டுக்கொலை செய்தது. கடந்த 2024ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. அதிலிருந்தே லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மும்பையில் படிப்படியாக தங்களது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை ஜுகுவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றிலிருந்து வெளியேறியபோது, நடிகர் டைகர் ஷெராப் காரின் மீது மூன்று நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டைகர் ஷெராப் தப்பினார், ஆனால் கார் ஓட்டுனர் உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அன்மோல் பிஷ்னோய் என்பவர், சமூக ஊடகப் பதிவு ஒன்றின் வாயிலாக இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குத் தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்தார்.
நடிகர் மீதான தாக்குதல் மீண்டும் பாலிவுட் பிரபலங்களின் பாதுகாப்பு குறித்த கவலையை உயர்த்தியுள்ளது. மும்பையில் இத்தகைய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், இந்தித் திரைப்படத் துறையில் நிழல் உலகத்தின் செல்வாக்கு மேலோங்கியிருந்த ஒரு காலத்தை நினைவூட்டுகிறது. அக்காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். பணம் பறிக்கும் நோக்கத்திலோ அல்லது தனிப்பட்ட பகை காரணமாகவோ அவர்கள் குறிவைக்கப்பட்டனர்.
குறிப்பாக 1990 முதல் 2000ம் ஆண்டு வரை பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் தாக்கப்பட்டனர். 1997ம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் முகேஷ் துக்கல், திரைப்படங்களுக்கான நிதி உதவி செய்வது தொடர்பான மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே ஆண்டு மற்றொரு தயாரிப்பாளரான ராஜீவ் ராய் தார்டுதேவில் உள்ள அலுவலகத்திற்கு வெளியே சோட்டாசகீல் கூட்டாளிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருடன் இருந்த காவலர் ஒருவர், பதில் தாக்குதல் நடத்தி ராஜீவ் ராயின் உயிரைக் காப்பாற்றினார். அதே ஆண்டு டி சீரிஸ் நிறுவனத்தின் நிறுவனர் குல்ஷன் குமார் வெர்சோவாவில் பகல் வெளிச்சத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அபு சலேம் கும்பலை சேர்ந்தவர்கள் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. 1990-களில், மாபியா கும்பல்களின் அச்சுறுத்தலால் பாலிவுட் பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது. இதனால், திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று, அப்போதைய போலீஸ் கமிஷனர் எம். என். சிங்கைச் சந்தித்து, பாலிவுட் மும்பையிலிருந்து வெளியேறி ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்துவிடும் என்று எச்சரித்தது. அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினரின் நெருக்கடி காரணமாக, மும்பை போலீஸார் நிழல் உலகத்தை இரும்புக்கரம் கொண்டு கையாள தொடங்கியது.
மும்பை போலீஸார், கடுமையான என்கவுன்டர் மற்றும் மொக்கா சட்டத்தின் மூலம் நிழல் உலக தாதாக்களின் செல்வாக்கை முறியடித்தனர். முக்கிய கும்பல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது ஒழிக்கப்பட்டனர். இது மும்பையின் நிழல் உலகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் திரையுலகினரிடம் பணம் கேட்டு மிரட்டும் வேலையை தாவூத் இப்ராகிமின் கும்பல் நிறுத்திக்கொண்டது.
2002-ஆம் ஆண்டு போர்ச்சுகலின் லிஸ்பனில் அபு சலீம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பயங்கரவாதச் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன.
இந்தோனேசியாவின் பாலியில் கைது செய்யப்பட்டு, 2015-ல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சோட்டா ராஜன், தற்போது ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். அதேபோல, சிவசேனா தலைவர் ஒருவரின் கொலை வழக்கில் அருண் காவ்லி கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, அவரது கும்பலின் செயல்பாடுகளும் முடிவுக்கு வந்தன.
முக்கிய நபர்கள் அனைவரும் செயலிழக்கச் செய்யப்பட்டதால், மும்பை நிழல் உலகத்தில் ஒரு வெற்றிடம் உருவானது. போலீஸாருக்கு மிரட்டிப் பணம் பறிப்பது தொடர்பான புகார்கள் வருவது நின்றது. மும்பை வீதிகளில் பாலிவுட் பிரபலங்கள் இரத்தம் சிந்துவது முடிவுக்கு வந்தது. இருப்பினும், 2023-ல் நிலைமை மீண்டும் மாறத் தொடங்கியது. முக்கியமாக வட இந்திய மாநிலங்களில் செயல்பட்டு வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், நடிகர் சல்மான் கானை குறிவைத்தது.
அக்கும்பலைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள், பாந்த்ராவில் உள்ள அந்த நடிகரின் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதோடு 2023ம் ஆண்டு அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினருமான பாபா சித்திக்கியை அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கொன்றது, அவர்கள் நடத்திய தாக்குதல்களில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
சமீபத்தில், திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி உட்பட சில பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. சில முக்கியப் பிரமுகர்கள் சுடப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, மக்களிடையே நிலவும் அச்ச உணர்வைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் நிழல் உலகக் கும்பல்களிடமிருந்து வரும் மிரட்டல் அழைப்புகள் அதிகரிக்கின்றன. டைகர் ஷெராபைச் சுட நடந்த முயற்சி, பாலிவுட்டில் நிழல் உலகத்தின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.



















