Miss Universe 2026 : சான் ஜுவானில் நடந்த 75-வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டி! | Photo...
வேலூர்: காதல் மனைவி வெட்டிக் கொலை - நடத்தை சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!
வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். ஆவின் பாலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கும், கீர்த்திகா (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், மனைவி கீர்த்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஹரிபிரசாத் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் உச்சகட்டமாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் கீர்த்திகாவை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீர்த்திகா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
கீர்த்திகாவின் தாய் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை அருகே உள்ள திருமண தகவல் மையத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை பணிக்குச் சென்ற அவர், மகள் கீர்த்திகாவையும் தன்னுடன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த ஹரிபிரசாத், மனைவியைத் தீர்த்துக்கட்டும் கொலை வெறியுடன் இன்று மதியம் 12 மணியளவில் கையில் அரிவாளுடன் அந்த திருமண தகவல் மையத்திற்குள் நுழைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கீர்த்திகாவை நோக்கிப் பாய்ந்த அவர், மனைவியை சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கீர்த்திகா தன் கைகளால் அரிவாள் வெட்டைத் தடுக்க முயன்றார். ஆனால், வெறி அடங்காத ஹரி பிரசாத் தொடர்ந்து வெட்டியதில் கீர்த்திகாவின் இரண்டு கைகளும் துண்டாகின. மேலும், கழுத்து மற்றும் வாய் பகுதிகளிலும் ஆழமாக வெட்டியதால், தப்பி ஓட வழியின்றி ரத்த வெள்ளத்தில் சரிந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு மகளைக் காப்பாற்ற ஓடிவந்த தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்து காயமடைந்தார்.
மனைவி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த ஹரிபிரசாத், நேராக சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கீர்த்திகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த கீர்த்திகாவின் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ஹரிபிரசாத்தைக் கைது செய்து இக்கொடூரச் சம்பவத்திற்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இக்கொலைச் சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


















