`மாலை வேளையில் சேலம் வீதிகளில் நடந்து பாருங்க' - தட்டுவடைக்குள் ஒளிந்திருக்கும் ...
ராமநாதபுரத்தில் சிக்கிய தங்ககட்டிகள்; தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி! - முழு பின்னணி
ராமநாதபுரம் அருகேயுள்ள முடுக்குத்தரவை ரோட்டில் கடந்த செப்டம்பரில் போதைப்பொருள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குடிசை மாற்று வாரியம் அருகே நின்றிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி, பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சரவணன், பூபதி, வேலாயுதம் ஆகிய 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியதையடுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 3.45 கிலோ எடை கொண்ட 38 தங்கக்கட்டிகள், 28 சவரன் தங்க நகை, ரூ.12.20 லட்சம் ரொக்கப்பணம் இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. தொடர் விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், முக்காணி தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் ஒரு கோணிச்சாக்கு மூட்டை சிக்கியதாகவும் அதை திறந்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள், தங்க நகைகள், ரொக்கப்பணம் இருந்ததாகவும் அதனை பங்கிடுவதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கேணிக்கரை காவல் நிலைய போலீஸார், ”கேட்பாரற்றுக் கிடந்து பொருள் மீட்பு” என்று வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் 5 நாட்கள் மட்டும் விசாரணை செய்துவிட்டு விடுவித்துவிட்டனர். இந்த நிலையில், இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள், தங்க நகைகளின் மதிப்பைக் குறைத்துக் காட்டி போலீஸார் எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் உண்மை நிலை கண்டறியவும், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள், நகைகள் எங்கிருந்து வந்தது யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர், பறிமுதல் செய்யப்பட்ட தங்கட்டிகளில் பெரும்பாலானவற்றை போலீஸார் பங்கிட்டுக் கொண்டதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் ஆத்தூரில் கருப்பசாமி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், மோதிரம், கை செயின், கம்மல் என 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.67 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், குலசை தசாரா திருவிழாவில் முடி, கிரீடம் உள்ளிட்ட வேடப் பொருட்கள் விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தில் நகைகள் வாங்கியதாக கூறியுள்ளார்.

தங்கக்கட்டிகள் விவகாரத்தில் சிக்கிய 5 நபர்களின் உறவினர்கள் ஆத்தூர், குரும்பூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் அவர்களிடம் மேலும் சில தங்கக்கட்டிகளை கொடுத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக பேச்சு எழுந்தது.
இதில் சிலர் வீடு, கார், தோட்டம் போன்றவற்றை குறுகிய காலத்திலேயே வாங்கியதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.


















