ரோலக்ஸ் : 'ஹீரோவா... வில்லனா... லோகேஷை வந்து என்னைப் பார்க்க சொல்லுங்க.!' - சூர்...
வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை ஊராட்சியில் மருதவள்ளிமேடு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவி திவ்யா இதய நோயால் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபடி சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் திவ்யாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட திவ்யா, மருதவள்ளிமேடு மலை கிராமத்திலுள்ள வீட்டுக்கு பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில், 2 நாள்களுக்கு முன்பு திவ்யாவின் உடல்நிலை திடீரென மோசமாகியுள்ளது. பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை அளித்தபோதும், திவ்யா நேற்று மாலை 3 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊசூர் அத்தியூர் வழியாக மலை அடிவாரத்துக்கு திவ்யாவின் உடல் கொண்டுச் செல்லப்பட்டது.
அங்கிருந்து மலை கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், திவ்யாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோரும் உறவினர்களின் உதவியுடன் திவ்யாவின் உடலை டோலி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலை உச்சி கிராமத்துக்குத் தூக்கிச் சென்றனர்.
இந்தத் துயரநிலை மலைப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலைவாழ் மக்களின் நலன் கருதி தமிழக அரசு மலைப்பகுதி கிராமங்களுக்கு உடனடியாக தார்ச்சாலை வசதி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
அப்போதுதான் காலங்காலமாக வலி, வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்க முடியும்.



.jpeg)











