"இந்த வயசுல குழந்தை பிறக்குறது நல்ல விஷயம் தானே" - Raj Ayyappa | Bhanu Prakash |...
10 ஆண்டுகளில் புற்றுநோய், அல்சைமர், இதய நோய்களுக்கு விடை கிடைக்குமா? AI மருத்துவத்தின் யதார்த்தம்!
இன்னும் ஒரு பத்தாண்டில் புற்றுநோய், அல்சைமர், இதய நோய்கள் ஆகியவை வரலாறாகிவிடும் என்ற நம்பிக்கையை முன்வைக்கிறார் ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி. செயற்கை நுண்ணறிவால் (AI) மருத்துவ ஆராய்ச்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றாலும், இந்த நோய்களை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமா என்ற கேள்வி மருத்துவ உலகில் எழுந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, உலகை மாற்றப்போகும் பத்தாண்டு காலக்கெடு ஒன்றை முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக் இப்போது தீவிரமாக முன்வைத்துள்ளது. அதன் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி வெளியிட்டுள்ள கணிப்புகள்தான் மருத்துவ உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சக்திவாய்ந்த AI மூலம் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் பல பத்தாண்டுகளுக்கான முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான புற்றுநோய்களைக் குணப்படுத்துவது, அல்சைமர் பாதிப்பைத் தடுப்பது, இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவது ஆகியவை அவரது எதிர்பார்ப்புகளில் அடங்கும்.

புற்றுநோய் ஆராய்ச்சியும் எதார்த்தமும்
ஆனால், புற்றுநோய் என்பது ஒரேயொரு நோயல்ல; பல்வேறு வகைகளையும், வெவ்வேறு மரபணு மாற்றங்களையும் கொண்ட நோய்களின் தொகுப்பு. 2024-ஆம் ஆண்டில் உலகளவில் 2.06 கோடிப் பேருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், 98 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மதிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில், மெர்க் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி, கீட்ரூடா (Keytruda) மருந்துடன் இணைந்து அளிக்கப்பட்டபோது, மூன்றாம் கட்டப் பரிசோதனையில் மெலனோமா வகைத் தோல் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தை 42 சதவிகிதம் குறைத்துள்ளது. இது முக்கியமான முன்னேற்றம் என்றாலும், இன்னும் ஒழுங்குமுறை அமைப்புகளின் இறுதி ஒப்புதலைப் பெறாத ஆய்வுநிலையிலுள்ள சிகிச்சைதான்.
அல்சைமர் மற்றும் இதய நோய்களின் நிலை
அல்சைமர் சிகிச்சையிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 'லெக்கெம்பி' (Leqembi), 'கிசுன்லா' (Kisunla) போன்ற மருந்துகள் மூளையில் அமிலாய்டு புரதப் படிவுகளைக் குறைக்கின்றன. ஆனால், நினைவாற்றல் சிதைவைக் கட்டுப்படுத்துவதில் இவற்றின் பலன் குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. மேலும், மூளை வீக்கம், இரத்தக் கசிவு போன்ற பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடும். ஏற்கெனவே ஏற்பட்ட மூளைச் சேதத்தைச் சரிசெய்வது இன்னும் சவாலாகவே உள்ளது.
இதய நோய்களுக்கான சிகிச்சையிலும் மரபணுத் திருத்த ஆய்வுகள் கவனம் பெறுகின்றன. VERVE-102 என்ற பரிசோதனைச் சிகிச்சை, ஆரம்பகட்ட ஆய்வில் கெட்ட கொழுப்பின் அளவை 62 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இருப்பினும், இது இன்னும் முதல் கட்டப் பரிசோதனையில்தான் உள்ளது. இதன் நீண்டகாலப் பாதுகாப்பும் பலனும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மருந்துகளைத் தாண்டிய தேவைகள்
மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு AI உதவினாலும், நோய்களைக் கட்டுப்படுத்துவது மருந்துகளை மட்டும் சார்ந்ததல்ல. உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நோய்த்தடுப்பு, ஆரம்பகாலப் பரிசோதனை மற்றும் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைப்பது ஆகியவையும் மிக முக்கியம்.
இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் சுமார் 15.6 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை, AI மூலம் மருத்துவப் படங்களை (Scans) துல்லியமாக ஆய்வு செய்தல், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் போன்ற பயன்பாடுகள் உடனடிப் பலனைத் தரக்கூடும்.
எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் மறைந்துவிடும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், நோய்களைக் கண்டறியும் முறையையும், புதிய மருந்துகளைக் கண்டறியும் வேகத்தையும் AI மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. நோய்களை வெல்வதற்கான பயணத்தில் AI ஒரு முக்கியக் கருவியாக இருக்குமே தவிர, அதுவே முழுமையான தீர்வாகிவிடாது.!



















